பியூட்டனால்

பியூட்டனால் (Butanol) என்பது C4H9OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நான்கு கார்பன் அணுக்கள் கொண்ட ஓர் ஆல்ககாலான இதை பியூட்டைல் ஆல்ககால் என்றும் அழைக்கலாம். நேர்சங்கிலி முதன்மை ஆல்ககாலிலிருந்து பக்கசங்கிலி மூவிணைய ஆல்ககால் வரை ஐந்து சமபகுதி கட்டமைப்புகளில் இது தோன்றுகிறது. இவற்றில் நான்கு அமைப்புகள் அமைப்பு மாற்றியங்களாக உள்ளன. அனைத்துமே பியூட்டைல் அல்லது ஐசோபியூட்டைல் குழுக்களுடன் ஐதராக்சில் குழு இணைக்கப்பட்டவையாகும். சில சமயங்களில் இவற்றை BuOH, n-BuOH, i-BuOH, மற்றும் t-BuOH என்ற வாய்ப்பாடுகளாலும் குறிப்பர்.

மாற்றியன்கள்

பியூட்டனால் என்ற மாற்றப்படாத ஒரு சொல் பொதுவாக விளிம்புநிலை கார்பனில் உள்ள ஆல்ககால் வேதி வினைக்குழுவுடன் இணைந்துள்ள நேர் சங்கிலி மாறியத்தைக் குறிக்கும்.. இது என் - பியூட்டனால் அல்லது 1-பியூட்டனால் என்றும் அழைக்கப்படுகிறது. . உள் கார்பனில் ஆல்ககால் குழுவைக் கொண்ட நேரான சங்கிலி மாற்றியம் ஈரிணைய -பியூட்டனால் அல்லது 2- பியூட்டனால் ஆகும். விளிம்பில் உள்ள கார்பனுடன் சேர்ந்திருக்கும் ஆல்ககாலுடன் கிளைத்திருக்கும் மாற்றியம் ஐசோ பியூட்டனால் அல்லது 2-மெத்தில் -1-புரோப்பனால் ,எனப்படுகிறது. உள் கார்பன் அணுவுடன் ஆல்ககால் கிளைகளுடன் மாற்றியமாக இருப்பது மூவிணைய பியூட்டனால் அல்லது 2-மெத்தில்-2-புரோப்பனால் என அழைக்கப்படுகிறது.

n-பியூட்டனால் (1-பியூட்டனால்) ஈரிணைய-பியூட்டனால் (2-பியூட்டனால்) ஐசோபியூட்டனால் (2-மெத்தில்புரோப்பேன்-1-ஆல்) மூவிணைய- பியூட்டனால்(2-மெத்தில்புரோப்பேனால்)

பியூட்டனால் மாற்றியன்கள் வெவ்வேறு உருகும் மற்றும் கொதிநிலை புள்ளிகளைக் கொண்டுள்ளன. என்-பியூட்டனால் மற்றும் ஐசோபியூட்டனால் போன்றவை குறைந்த அளவு கரைதிறனை கொண்டுள்ளன. ஈரிணைய பியூட்டனால் கணிசமான அளவு கரைதிறனைக் கொண்டுள்ளது.. மூவிணைய பியூட்டனால் அதன் உருகுநிலையைத் தாண்டிய வெப்பநிலையில் தண்ணீருடன் கலக்குமியல்புடையதாய் காணப்படுகிறது. ஐதராக்சில் குழு மூலக்கூறை முனைவாக்குகிறது. இதனால் நீரில் கரைதிறன் ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் நீண்ட சங்கிலி ஐதரோ கார்பன்களில் முனைவுத்தன்மையை சாந்தப்படுத்தி கரைதிறனைக் குறைக்கிறது.

நச்சுத்தன்மை

பல ஆல்ககால்களைப் போலவே, பியூட்டனாலும் நச்சுத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. இது ஆய்வக விலங்குகளுக்கு ஒருமுறை கொடுக்கப்படும் சோதனைகளில் குறைந்த அளவு நச்சுத்தன்மையைக் காட்டியுள்ளது[1][2]. மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்த போதுமான அளவுக்கு இது பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் மற்ற குறுகிய சங்கிலி ஆல்ககால்களைப் போல மீண்டும் மீண்டும் தோலுடன் அதிகப்படியான வெளிப்பாடு மத்திய நரம்பு மண்டலத்தில் மனச்சோர்வை ஏற்படுத்தும். உடலின் மீது வெளிப்படும் நிகழ்வு கடுமையான கண் எரிச்சல் மற்றும் மிதமான தோல் எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும். ஆல்ககால் நீராவி நீண்ட காலமாக உடலின்மீது வெளிப்படுவது முக்கிய ஆபத்து ஆகும். தீவிர நிகழ்வுகளில் இது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் மற்றும் மரணம் கூட ஆபத்தாக முடியும். பெரும்பாலான சூழ்நிலைகளில், பியூட்டனால் விரைவாக வளர்சிதை மாற்றமடைந்து கார்பன் டை ஆக்சைடாக மாற்றப்படுகிறது.. இது டி.என்.ஏவை சேதப்படுத்தும் அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று எங்கும் காட்டப்படவில்லை.

பயன்கள்

உயிர்பியூட்டனால்

பியூட்டனால் ஒரு சாத்தியமான உயிரி எரிபொருளாகும். பியூட்டனால் எரிபொருளாக இது கருதப்படுகிறது. இயந்திரத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 85 சதவீத வலிமை கொண்ட பியூட்டனாலை பெட்ரோல் கார்களில் பயன்படுத்தலாம். கொடுக்கப்பட்ட பியூட்டனால் அளவில் எத்தனால் மற்றும் பெட்ரோலைக்காட்டிலும் அதிக அளவு ஆற்றலை இது கொண்டிருந்தது. பியூட்டனாலைப் பயன்படுத்துவது எரிபொருள் நுகர்வு அளவில் பெட்ரோலைக் காட்டிலும் பியூட்டனால் சிறந்தது. பியூட்டனாலை டீசல் எரிபொருளில் சேர்க்கலாம். இதனால் புகைகரி உமிழ்வுகள் குறைக்கப்படும் [3].

பிற பயன்கள்

பியூட்டனால் பல்வேறு வகையான வேதியியல் மற்றும் நெசவு செயல்முறைகளில், கரிமத் தொகுப்பு வினைகளில் கரைப்பானாகப் பயன்படுகிறது. .ஒரு வேதியியல் இடைநிலையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. சாயங்களில் மென்மையாக்கியாகவும் கரைப்பானாக பிற மேற்பூச்சு பயன்பாடுகளிலும் பியூட்டனால் பயன்படுத்தப்படுகிறது. இது நீர் கொண்டு இயக்கப்படும் கருவிகளிலும் தடை நீர்மங்களிலும் ஓர் அங்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது[3]. நீரில் கரைக்கப்பட்ட 50 சதவீத பியூட்டனால் 20 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரெசுக்கோ ஓவியத்தில் புதிய பூச்சு உலர்வதை தடுக்க இது அப்போதிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 18 மணி நேரம் போன்ற நீண்ட நேரம் வரையக்கூடிய ஓவியங்களில் இப்பண்பு வண்ணம் தீட்டக்கூடிய வேலை நேரத்தை மேலும் நீட்டிக்க உதவுகிறது.[4] 2-பியூடாக்சியெத்தனால் தயாரிக்க பியூட்டனால் பயன்படுத்தப்படுகிறது . பியூட்டனாலுக்கான ஒரு முக்கிய பயன்பாடு யாதெனில், பியூட்டனால் அக்ரைலிக் அமிலத்துடன் வினைபுரிந்து பியூட்டைல் அக்ரைலேட்டைக் கொடுக்கிறது என்பதேயாகும். நீர் சார்ந்த அக்ரைலிக் வண்ணப்பூச்சின் முதன்மை மூலப்பொருளாகவும் இது கருதப்படுகிறது. இது வாசனை திரவியங்களுக்கான அடிப்படையாகவும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதன் சொந்த நெடியில் அதிக மது வாசனை உள்ளது.. பியூட்டனாலின் உப்புகள் இரசாயன இடைநிலைகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, மூவிணைய பியூட்டனாலின் கார உலோக உப்புகள் அனைத்தும் மூவிணைய பியூட்டாக்சைடுகளாக மாறுகின்றன.

தயாரிப்பு

1950 ஆம் ஆண்டுகளிலிருந்து அமெரிக்காவின் பெரும்பாலான பியூட்டானால் சேர்மங்கள் புதைபடிவ எரிபொருள்களிலிருந்து வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகவும் பொதுவான செயல்முறை புரோபீன் அல்லது புரோபிலீன் உடன் தொடங்குகிறது, இது ஐதரோபார்மைலேற்ற வினையில் ஈடுபட்டு பியூட்டானலை உருவாக்குகிறது, பின்னர் இது ஐதரசன் உடன் சேர்க்கப்பட்டு 1-பியூட்டனால் மற்றும் 2-பியூட்டனால் போன்ற சேர்மங்களாகக் குறைக்கப்படுகிறது.

மூவிணைய -பியூட்டனால் சமபியூட்டேன் சேர்மத்திலிருந்து பெறப்படுகிறது. புரோப்பைலீண் ஆக்சைடு தயாரிக்கும்போது இணை விளை பொருளாக புரோப்பைலீன் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 16 ECETOC JACC No. 41 n-Butanol (CAS No. 71-36-3), European Centre for Ecotoxicology and Toxicology of Chemicals, Brussels, December 2003, pages 3-4.
  2. "n-Butanol". மூல முகவரியிலிருந்து 2015-04-02 அன்று பரணிடப்பட்டது.
  3. Isobutanol at chemicalland21.com
  4. "diego's assistants | Diego Rivera Mural Project".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.