பி. கே. பாலகிருஷ்ணன்

பி. கே. பாலகிருஷ்ணன் (P. K. Balakrishnan, மலையாளம்: പി.കെ. ബാലകൃഷ്ണൻ, 1925 – 1991) மலையாள மொழியின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர், நாவலாசிரியர் மற்றும் இதழியல் முன்னோடி.

வாழ்க்கைக் குறிப்பு

எர்ணாகுளம் அருகே எடவனக்காடு என்ற ஊரில் ஒரு ஈழவக் குடும்பத்தில் பணிக்கச்சேரி கேசவ ஆசானுக்கும் மணியம்மைக்கும் மகனாக பிறந்தார். செறாயி என்ற சிறுநகரில் கல்விகற்றார். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். படிப்பு நடந்துகொண்டிருக்கும்போது வெள்ளையனே வெளியேறு இயக்கம் சூடு பிடிக்கவே அதில் ஈடுபட்டு சிறைசென்றார். அத்துடன் படிப்பு நின்றது. அரசியல் ஆரம்பித்தது.

சிறையில் இருந்து வெளிவந்தபின் காங்கிரஸின் முழு நெர ஊழியராக இருந்தார். நாராயணகுருவின் இயக்கத்தில் ஆர்வம் கொண்டார். நாராயணகுருவின் மாணவரும் சமூகசீர்திருத்தவாதியும் நாத்திக இயக்க முன்னோடியுமான சகோதரன் அய்யப்பனின் நெருக்கமான மாணவராக ஆனார். காங்கிரஸில் இருந்து கேரள சோஷலிஸ்ட் கட்சிக்குச் சென்று முழுநேர ஊழியராக பணியாற்றினார். காங்கிரஸ் நடத்திய ஆஸாத் என்ற நாலிதழின் உதவி ஆசிரியராக பணியாற்றி இதழியல் அனுபவம் பெற்ற பாலகிருஷ்ணன் எல்லா கட்சிகளிலும் இதழியலையே தன் களமாக கொண்டிருந்தார். கேரள பூஷணம் இதழிலும் பின்னர் கேரள கௌமுதி இதழிலும் ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் முக்கியமான நூல்களை எழுதினார்.

படைப்புகள்

1954ல் பாலகிருஷ்ணனின் நாராயணகுரு தொகுப்பு என்ற நூல் வெளிவந்தது. அதுவே முதல் நூல். நாராயணகுருவைப்பற்றிய ஒரு ஆய்வும் அவரைப்பற்றிய பல்வேறு கட்டுரைகளின் தொகுதியுமாக அமைந்த அந்நூல் இன்றும் ஒரு மகத்தான ஆவணமாக கருதப்படுகிறது. பாலகிருஷ்ணன் பல இலக்கிய விமர்சன நூல்களை எழுதியுள்ளா. மலையாளத்தின் முதல் நாவலாசிரியரான சந்து மேனனைப்பற்றி ‘சந்துமேனன் ஒரு விமர்சன ஆய்வு’ ஒரு நூல். மலையாளத்தின் முக்கியமான கவிஞராகிய குமாரன் ஆசானைப்பற்றிய ‘காவிய கலை குமாரனாசான் வழியாக’ இன்னொன்று. இவரது முக்கியமான நாவல் ”இனி நான் உறங்கட்டுமா?”. இது ஆ. மாதவன் மொழியாக்கத்தில் தமிழில் சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்துள்ளது

நூல்கள்

  1. ப்ளூட்டோ பிரியப்பட்ட ப்ளூட்டோ (நாவல்)
  2. காவியகல குமாரனாசானிலூடே (திறனாய்வு)
  3. சந்துமேனன் ஒரு படனம் (திறனாய்வு)
  4. நாவல் சித்தியும் சாதனையும் (திறனாய்வு)
  5. ஜாதி வியவஸ்தயும் கேரள சரித்திரமும் (வரலாறு)
  6. திப்புசுல்தான் (வரலாறு)
  7. இனி ஞான் உறங்ஙட்டே? (நாவல்)

வெளி இணைப்புகள்

பி கெ பாலகிருஷ்ணன் பற்றி ஜெயமோகன்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.