பால் ஹெரௌல்ட்

பால் ஹெரௌல்ட் ( Paul(Louis-Toussaint)Héroult, 10-4-1863 – 9-5-1914): பிரான்சு நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். மின்னாற்பகுப்பு முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தவர். மின்எஃகு உலையைக் கண்டறிந்தவர்.

பால் எல். டி. ஹெரௌல்ட்
பால் ஹெரௌல்ட்
பிறப்புஏப்ரல் 10, 1863
இறப்புமே 9, 1914
தேசியம்பிரான்சு
அறியப்படுவதுஅலுமினியம் மின்னாற்பகுப்பு

இளமையும் கல்வியும்

பால் ஹெரௌல்ட், பிரான்சு நாட்டில் தரி-ஹார்கோர்ட்டில் உள்ள கால்வீடாசு என்ற இடத்தில் ஏப்ரல் 10, 1863 அன்று, பிறந்தார். இவரது தந்தை பேட்ரைஸ் ஒரு தோல்பதனிடுதல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பள்ளி நேரம் முடிந்தபிறகு தன்னுடைய தந்தையின் நண்பரான பெல்லியார் என்ற வழக்குரைஞர் வீட்டிற்குச் சென்று அவர் வைத்திருந்த நூலகத்தில் உள்ள, அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகள் தொடர்பான நூல்களை பால் ஹெரௌல்ட் விரும்பிப்படிப்பார்.[1] அப்பொழுது கிளயர் டிவில்லி எழுதிய "அலுமினியம், பண்புகள், தயாரிப்பு மற்றும் பயன்கள்" என்ற நூலைப் படிக்க நேரிட்டது. அப்பொழுது முதலே அவருக்கு அலுமினியத்தின் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது

தனது 19 ஆவது வயதில் புகழ்மிக்க 'எகோல் டெஸ் மைன்ஸ்'(ecole des Mines) கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அங்கு வேதியல் பேராசிரியருடன் நல்லுறவை, நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அலுமினியம் சேர்மங்களை மின்னாற்பகுத்தலுக்கு உட்படுத்தி பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். மற்ற பாடங்களில் ஆர்வம் காட்டாததால், முத்லாம் ஆண்டில் தோல்வியைத் தழுவினார். அதனால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டர்.[1]

ஆய்வுப்பணிகள்

பால் ஹெரௌல்ட்டின் சிலை

1883-ல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு அவர் கவனித்து வந்த தோல் பதனிடும் தொழிலை மேற்கொள்ள வேண்டிவந்தது. ஆனாலும் தோல் பதனிடும் கட்டடத்திலும், தன்னுடைய அலுமினியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். தனது தாயிடம் 50,000 பிராங்குகள் பெற்றுக்கொண்டு ஆய்வுக்குத் தேவையான மின்சார மோட்டாரை வாங்கினார். அலுமினிய ஆக்சைடை மின்சாரம் கொண்டு ஒடுக்கும்போது அலுமினியம் மிகச் சிறிதளவே கிடைத்தது. 1886-ல் உருகிய கிரியோலைட்டுடன் அலுமினாவைச் சேர்த்து மின்சாரம் பாய்ச்சி, அலுமினியத்தை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார். தனது 23-ஆம் வயதில் இச்சாதனையை நிகழ்த்திய பால் ஹெரௌல்ட் உடனடியாகக் காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.[1][2]

ஹால்-ஹெரௌல்ட் முறை

இதே ஆண்டில் அமெரிக்காவின் சார்லஸ் மார்ட்டின் ஹால் என்பவரும் இதே முறையில் அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். மார்ட்டின் ஹால் மற்றும் பால் ஹெரௌல்ட் இருவரிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி இவர்கள் இருவரும் கண்டறிந்த, அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறை ஹால்-ஹெரௌல்ட் முறை என, இருவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.[3]

ஹால்-ஹெரௌல்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டதும் அலுமினியத்தின் விலை 299 மடங்கு குறைந்தது. ஒரு பவுண்டு அலுமினியம் 12 டாலர்கள் என்று இருந்தது, 18 சென்டாகக் குறைந்தது. இதனால் ஹால் மற்றும் ஹெரௌல்ட்டின் புகழ் ஓங்கியது.

மறைவு

அமெரிக்காவில் பல்வேறு தொழில் குழுமங்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசகராகச் செயல்பட்டார். 1900-ஆம் ஆண்டில் மின்வில் உலையைக் (electric arc furnace) கண்டறிந்தார். தன்னுடைய 51-ஆம் வயதில் மறைந்தார்.

மேற்கோள்கள்

  1. http://corrosion-doctors.org/Biographies/HeroultBio.htm
  2. http://www.bookrags.com/biography/paul-louis-touissant-heroult-woi/%7CPaul Louis Touissant Heroult | Biography
  3. ஆர். வேங்கடரமணன், முழுமை அறிவியல் உதயம், மார்ச், 2012 இதழ்.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.