பாலூர் து. கண்ணப்பர்

பாலூர் துரைச்சாமி கண்ணப்பர் (1908 திசம்பர் 141971 மார்ச் 29) என்னும் பாலூர் கண்ணப்ப முதலியார் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர்.

பிறப்பு

கண்ணப்பர், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூரில் 1908 திசம்பர் 14 ஆம் நாள் துரைச்சாமி – மாணிக்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]

கல்வி

கண்ணப்பர் பள்ளிக் கல்வியைக் கற்ற பின்னர், டி. என். சேசாசலம் என்பவரிடம் ஆங்கிலமும் மே. வீ. வேணுகோபாலனார், கோ. வடிவேலர், சூளை வைத்தியலிங்கனார் ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்று வித்துவான் பட்டம் பெற்றார்.[1] 1956 ஆம் ஆண்டில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி.ஓ.எல்) பட்டமும் 1964 ஆம் ஆண்டில் கலை முதுவர் (எம். ஏ.) பட்டமும் பெற்றார்.

குடும்பம்

கண்ணப்பர், தெய்வானையம்மை என்பவரை மணந்து ஏழு பெண்மக்களைப் பெற்றார்.[1]

அலுவல்

தமிழ்க் கல்வியை முடித்த கண்ணப்பர் தமிழாசிரியப் பயிற்சி பெற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள லூதரன் மிசன் உயர்நிலைப் பள்ளியில், 1926 சூன் முதல் 1934 மே வரை, எட்டாண்டுகளும் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில், 1934 சூன் முதல் 1938 மே வரை, நான்காண்டுகளும் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளியில், 1938 சூன் முதல் 1952 மே வரை, பதினான்கு ஆண்டுகளும் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர் சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் 1952 சூன் திங்கள் தமிழ் துணை விரிவுரையாளராகப் பணியேற்றார். 1954ஆம் ஆண்டில் தமிழ் விரிவுரையாளராகவும் 1955ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பதவி உயர்வுபெற்றார். பதினாறாண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றி 1968 சூன் திங்கள் ஓய்வுபெற்றார்.[2]

பங்கேற்ற அமைப்புகள்

கண்ணப்பர் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அப்பாலும் தமிழ்ப் பணியாற்ற விரும்பி சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகி உழைத்தார். சென்னை பல்கலைக்கழக பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்று பணியாற்றினார்.[1]

எழுத்துப்பணி

கண்ணப்பர் தமிழ்மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதோடு நின்றுவிடாமல், பின்வரும் நூல்களை எழுதினார்.

வ.எண்ஆண்டுநூல்வகைகுறிப்பு
011949புதுமை கண்ட பேரறிஞர்பயணநூல்
021949நடு நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்பாட நூல்
031951சங்க கால வள்ளல்கள்வரலாறு
041951குமுத வாசகம் – இரண்டாம் படிவம் – பொதுப்பகுதிபாட நூல்
051951குமுத வாசகம் – இரண்டாம் படிவம் – சிறப்புப் பகுதிபாட நூல்
061951புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம் – 1, 2 படிவங்கள்
071953அமலநாதன்புதினம்
081953தமிழ்ப் புலவர் அறுவர்வரலாறு
091954குமுத வாசகம் – முதலாம் படிவம் – பொதுப்பகுதிபாட நூல்
101954குமுத வாசகம் – மூன்றாம் படிவம் – பொதுப்பகுதிபாட நூல்
111954கவி பாடிய காவலர்வரலாறு
121954வையம் போற்றும் வனிதையர்வரலாறு
131955தூது சென்ற தூயர்இலக்கியக் கட்டுரைகள்
141955நீதிபோதனைப் பாடப் புத்தகம் – நான்காம் படிவம்பாட நூல்
151955தொழிலும் புலமையும்கட்டுரைகள்
161956குமுத வாசகம் – முதலாம் படிவம் - சிறப்புப்பகுதிபாட நூல்
171956வள்ளுவர் கண்ட அரசியல்: நாடும் மக்களும்திறனாய்வு
181957தமிழ் இலக்கிய அகராதிஅகராதி
191957கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்கட்டுரைகள்
201957பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்இடவரலாறு
211958பொய்யடிமையில்லாத புலவர் யார்?திறனாய்வு
221964சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரைஉரை
231965தமிழ் மந்திர உரைஉரை
241966இலக்கியத் தூதர்கள்கட்டுரைகள்தூது சென்ற தூயர்கள் நூலின் மறுபதிப்பு. பழைய கட்டுரைகளோடு அன்னம் என்னும் புதிய கட்டுரை சேர்க்கப்பட்டு உள்ளது.
251966கட்டுரைக் கொத்துகட்டுரை
261968திருவருட்பா விரிவுரை – திருவருள் முறையீடு (முற்பகுதி) – ஒன்பதாம் புத்தகம்உரை
271968திருவருட்பா விரிவுரை – வடிவுடை மாணிக்கமாலை – பதினோராம் புத்தகம்உரை
281969திருவருட்பா விரிவுரை – இங்கிதமாலை – பதிரெண்டாம் புத்தகம்உரை
291969தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்இடவரலாறு
30திருக்குறள் அறத்துப்பால் உரை நடைஉரை
31மாணவர் திருக்குறள் விளக்கம்உரை
32அதிகமான்வரலாறு
33தமிழர் போர் முறைகட்டுரை
34கட்டுரைக் கதம்பம்கட்டுரை
35திருமணம்
36தமிழ் நூல் வரலாறுஇலக்கிய வரலாறு
37தமிழ்ப் புதையல்கட்டுரை
38மாணவர் தமிழ்க் கட்டுரைகட்டுரை
39அறுசுவைக் கட்டுரைகள்கட்டுரை
40ஜான்சன் வாழ்க்கை வரலாறுவரலாறு
41கலை வல்லார்வரலாறு
42பழமை பாராட்டல்கட்டுரை
43நானே படிக்கும் புத்தகம்
44இன்பக் கதைகள்
45அன்புக் கதைகள்
46சிறுவர் கதைக் களஞ்சியம்
47நகைச் சுவையும் கவிச்சுவையும்
48கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்
49தமிழ்த் தொண்டர்
50இலக்கிய வாழ்வு
51சீவகன் வரலாறு
52மாண்புடைய மங்கையர்
53சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம்
54தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
55உயர் நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம்
56புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும்
57உயர் நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு
58உயர் நிலை வகுப்பு தமிழ்ப் புதையல்
59திருவெம்பாவை உரை
60திரு ஈங்கோய் மலை எழுபது உரை
61திருவருள் முறையீடு உரை
62பல்சுவைப் பாமாலை குறிப்புரை
63இங்கிதமாலை உரை

விருதுகள்

கண்ணப்பர் செய்த தமிழ்த் தொண்டினையும் சைவத் தொண்டினையும் பாராட்டி செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன.[3]

மறைவு

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பர், அப்பணி நிறைவுறும் முன்னரே 1971 மார்ச்சு 29 ஆம் நாள் இயற்கை எய்தினார்.[1]

சான்றடைவு

  1. இராமசாமிப் புலவர் சு. அ., தமிழ்ப் புலவர் வரிசை – பத்தாம் பகுதி – இருபத்தியொன்பதாம் புத்தகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 1973
  2. கண்ணப்ப முதலியார் பாலூர், திருவருட்பா விரிவுரை –ஒன்பதாம் புத்தகம், முன்னுரை, வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வேலூர்,1968 ,பக்.vi
  3. கண்ணப்பர் பாலூர் து., சேக்கிழார் பிள்ளைத் தமிழ் மூலமும் விளக்க உரையும், ஶ்ரீ கந்தப்பெருமான் தேவத்தானம் திருப்போரூர், 1964, தலைப்புப் பக்கம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.