பால் உணர்த்தும் ஈறுகள்
பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 எழுத்துக்கள் என வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது. [1] உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறினையில் ஒன்றன்பால், பலவின்பால் என்பன தமிழ் மொழியில் உள்ள ஐந்து பால்கள்.
பெயரும் வினையுமாக வாக்கியம் அமையும்போது பெயரில் தோன்றும் பாலறி கிளவியும், வினையில் தோன்றும் பாலறி கிளவியும் மயக்கமின்றி (முரண்படாமல்)வருதல் நெறி. [2]
- நல்லவன் வந்தான் (ஆண்பால்)[3]
- நல்லவள் வந்தாள் (பெண்பால்)[4]
- நல்லவர் வந்தார் (பலர்பால்), வருப (எதிர்காலம்), ஆர்த்தார் கொண்மார் வந்தார். (முற்றெச்சம்)[5]
- நல்லது வந்தது (ஒன்றன்பால்) ஆடு ஓடிற்று, தவளை குண்டுகட்டு (குண்டுக்கண் உடையது)[6]
- நல்லவை வந்தன(அ) (பலவின்பால்), தீயவை வாரா(ஆ), அவை உண்குவ (எதிர்காலம்)[7]
நன்னூல் இவற்றை விகுதி என்று பதத்தின் பகுதியாகக் காட்டுகிறது.
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் கிளவியாக்கம் 10
-
வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
மயங்கல் கூடா தம் மரபினவே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 11) - னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 5
- ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல். தொல்காப்பியம் கிளவியாக்கம் 6
-
ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 7) -
ஒன்று அறி கிளவி த ற ட ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும். (தொல்காப்பியம் கிளவியாக்கம் 8) -
அ ஆ வ என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பல அறி சொல்லே. (தொல்காப்பியம் கிளவியாக்கம் 9)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.