பார்சிலோனா நாற்காலி


பார்சிலோனா நாற்காலி, புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) என்பவராலும் அவரது அப்போதைய பங்காளரான லில்லி ரீச் என்பவராலும் வடிவமைக்கப்பட்ட ஒரு நாற்காலி ஆகும்.

பார்சிலோனா நாற்காலி
வடிவமைப்பாளர் : லுட்விக் மீஸ் வான் டெர் ரோவும், லில்லி ரீச்சும்
ஆண்டு : 1929
நாடு : ஜெர்மனி
மூலப் பொருள் : குரோம் அல்லது உருக்குச் சட்டகம். தோல் மெத்தை.
பாணி/மரபு : நவீனத்துவம்
அளவுகள்: 75x75x75சமீ (WxDxH)
நிறங்கள் : கறுப்பு, வெள்ளை, மண்ணிறம், சிவப்பு, தந்த நிறம்

வரலாறு

1929 ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டின் பாசிலோனாவில் நடைபெற்ற, பாசிலோனா உலகக் கலை விழாவுக்காக, ஜெர்மன் நாட்டுக்கான காட்சி மண்டபத்தைக் கட்டுவதற்கு மீஸ் வான் டெர் ரோவை ஜெர்மனி அரசு நியமித்தது. இதற்காக இவரது வடிவமைப்பில், கண்ணாடி, உருக்கு என்பவற்றைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம், இன்றுகூடக் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரு நவீன கட்டிடமாகவே உள்ளது. இக் கட்டிட வடிவமைப்புக்கு உகந்த உள்ளக அலங்கார வடிவமைப்பின்போது, அதன் ஒரு பகுதியாக இந்த நாற்காலியும் வடிவமைக்கப்பட்டது.

மேற் குறிப்பிட்ட விழாவும், அதன் பகுதியாகிய கண்காட்சியும், அனைத்துலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பெயின் நாட்டு அரச குடும்பத்தினரும், ஐரோப்பா முழுவதிலுமிருந்து பல அரச அதிகாரிகளும் கலந்து கொள்வர். எனவே இந்த நாற்காலி, அழகிய தோற்றம் கொண்டதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும் என மீஸ் கருதினார்.

இந்த நாற்காலிக்கான இவரது வடிவமைப்புக்கான அடைப்படைகளை, பண்டைக்கால எகிப்திய பாரோக்கள் பயன்படுத்திய மடிப்பு நாற்காலியின் வடிவமைப்பில் இருந்தும், ரோமரின் x- வடிவ நாற்காலியிலும் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வாறு பண்டைக்கால வடிமைப்புக்களைப் பின்பற்றியிருந்தாலும் இவருடைய வடிவமைப்பு நவீனமானதாக இருந்தது. இது கண்காட்சி மண்டபத்தில், ஒரு சிற்பம் போலவே இருந்ததாகக் கூறப்படுகின்றது. 1970 களை அண்டி ஒவ்வொரு இளம் கட்டிடக் கலைஞரும், சொந்தமாக வைத்திருக்க விரும்பும் அளவுக்கு வடிவமைப்பாளரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கிய இந் நாற்காலி இன்றும் பலரால் விரும்பப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.