பாம்பாட்டி

பாம்பாட்டி என்போர் மகுடி ஊதி பாம்பினை ஆட்டிவைக்கும் செயலினை செய்வோரைக்குறிக்கும். இதனை வேடிக்கைக்காக பிற வித்தைகளோடு தெருக்களில் செய்வர். பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவர் என்பதால் இத்தொழில் புரிவோர்க்கு இப்பெயர் அமைந்தது. இந்தியாவில் இப்பழக்கம் அதிகம் காணப்பட்டாலும், பிற ஆசிய நாடுகளிலும் குறிப்பாக பாக்கிஸ்தான்,[1] வங்காளதேசம், இலங்கை, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் ஆப்ரிக்க நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் துனிசியாவிலும் இவ்வழக்கம் உள்ளது.

இந்தியாவின் செய்ப்பூர் நகரில் ஒரு பாம்பாட்டி, 2007
மதுரையில் ஒரு பாம்பாட்டியின் குடும்பம், 1837
முகலாயப் பேரரசில் பாம்பாட்டிகள்

பண்டைய எகிப்தில் இக்கலையின் ஒரு வடிவம் இருந்தது என்றாலும் தற்போது அங்கே உள்ள வழக்கு இந்தியாவில் தோன்றியது ஆகும். 20ம் நூற்றாண்டில் இக்கலையானது குறிக்கத்தக்க வளர்ச்சியடைந்தாலும், தற்போது இது அழியும் நிலையில் உள்ளது. குறிப்பாக 1972இல் இந்தியாவில் பாம்புகளை வைத்திருப்பதற்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள் இதற்கு ஒரு காரணமாகும்.

பாம்பாட்டிகள்

இக்கலையினை செய்வோர் பொதுவாக நாடோடிகளாக இருப்பர். விழாக்களின்போது கிராமங்களின் தெருக்களிலும் சந்தைகளிலும் இவர்களைக் காணலாம். இவர்கள் பயன்படுத்தும் பாம்புகள் பற்கள் பிடுங்கப்பட்டனவாகவோ அல்லது பாம்பின் வாய் தைக்கப்பட்டதாகவோ இருக்கும். இவர்கள் வாழும் இடங்களில் அதிகம் காணப்படும் நாகப்பாம்பு போன்ற பாம்புகளையே இவர்கள் பயன்படுத்துவர்.

பாம்புகளால் இசையினை உணரமுடியும் எனினும் அவற்றுக்குக் காதுகள் கிடையாது என்பதால் அவற்றால் இசையினைக் கேட்க இயலாது. அவை மகுடியின் அசைவிற்கு ஏற்பவும், அவர்கள் தரையில் தட்டுவதால் ஏற்படும் அதிர்வை உணர்ந்தும், அதற்குத் தக்கபடி உடலினை அசைக்கும். மகுடியினையும் பாம்பாட்டியினையும் அச்சுறுத்தும் எதிரியாக எண்ணி அவற்றை பாம்பு எதிர்த்து நிற்க முயலுவதே பாம்பாட்டுதல் ஆகும்.

சங்க இலக்கியத்தில்

சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுப் காதையில் 24ஆம் வரிக்கு உரை எழுதுகையில் அடியார்க்கு நல்லார் பலவகை கூத்து உள்ளது என கூறுவோரும் உள்ளனர் என்றும் அதற்கு எடுத்துக் காட்டாக கலிவெண்பாட்டொன்றையும் அளிக்கின்றார்.[2] அப்பாடல்:

....
ஆண்டி யமண்புனவே டாளத்தி கோப்பாளி
பாண்டிப் பிழுக்கையுடன் பாம்பாட்டி--மீண்ட
கடவுட் சடைவீர மாகேசங் காமன்
....

இதனால் பாம்பாட்டுதலை கூத்தின் ஒருவகையாகப் பண்டைய தமிழர் கொண்டிருந்தனர் எனலாம்.

மேற்கோள்கள்

  1. Amtul Jamil (21–27 டிசம்பர் 2012), "Snakes and charmers", The Friday Times, XXIV (45) Check date values in: |date= (help). உமர்கோட் இக்கலைக்கு பெயர் போன இடமாகும்.
  2. சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதை - 24 - உரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.