பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர்

பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் (ஜூன் 9, 1898 - ஜூன் 18, 1977) தஞ்சையின் புறநகர்ப் பகுதியில், தற்பொழுது பள்ளியக்கிரகாரம் என்று வழங்கப்படும் "பள்ளியகரம்" என்னும் ஊரில் பிறந்தார். அவர் தந்தையார் நீலமேகம் பிள்ளை; தாயார் சௌந்தரவல்லி அம்மையார்.

படிப்பு

பள்ளி இறுதி வகுப்பு பயின்ற அவர், தன் சொந்த முயற்சியாலும், பல்வேறு அறிஞர் பெருமக்கள் தொடர்பாலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்புலவராக விளங்கினார். மேலும் அவர் தாமே முயன்று ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்று அம்மொழிகளிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

இலக்கியப் பங்களிப்பு

பன்மொழிப்புலவராகிய அவ்வறிஞர் கரந்தைத் தமிழ்த் சங்கத்தில் பல ஆண்டுகள் அமைச்சராக விளங்கினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை படைத்துள்ளார். தாமஸ்கிரே என்பார் எழுதிய ஆங்கில கவிதை ஒன்றை தமிழில் செய்யுள் வடிவில் ‘இரங்கற்பா’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

மறைவு

தமிழறிஞர்களின் பெருமதிப்பிற்குரியவராய்த் திகழ்ந்த நீ.கந்தசாமிப் புலவர் அவர்கள் 18-06-1977 இல் மறைந்தார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.