பரிசால்

பரிசால் (ஆங்கிலம்: Barisal ; வங்காள மொழி: বরিশাল ) தென் மத்திய வங்காளதேசத்தில் கீர்த்தன்கோலா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது பரிசால் மாவட்டம் மற்றும் பரிசால் பிரிவு ஆகிய இரண்டினதும் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக தலைமையகம் ஆகும். இது நாட்டின் பழமையான நகராட்சிகள் மற்றும் நதி துறைமுகங்களில் ஒன்றாகும். பரிசால் நகராட்சி 1876 ஆம் ஆண்டில் பிரித்தானிய ராஜ் காலத்தில் நிறுவப்பட்டது. சூலை 25, 2002 அன்று மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.[1] 2011 ஆம் ஆண்டின் தேசிய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 328,278 மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரம் 30 வார்டுகள் மற்றும் 50 மஹாலாக்களைக் கொண்டுள்ளது. நகரின் பரப்பளவு 58 கி.மீ. ஆகும்.[2]

புவியியல்

பரிசால் மாவட்டம் 2790.51 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. பரிசால் மாவட்டத்தின் வடக்கே மதாரிபூர், சரியத்பூர், சந்த்பூர் மற்றும் லட்சுமிப்பூர் ஆகிய மாவட்டங்களும், தெற்கில் பதுகாலி, பார்குனா மற்றும் ஜலோகதி மாவட்டங்களும், கிழக்கில் போலா மற்றும் லட்சுமிபூர் மாவட்டங்களும், மேற்கில் ஜாலோகதி, கோரோப்கூர்ஜா மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன. கீர்த்தன்கோலா, ஏரியல் கான், கொய்ராபாத், கலிஜிரா மற்றும் சந்தா உட்பட பல ஆறுகள் பரிசால் முழுவதும் பாய்கின்றன. பரிசால் நகரம் 58 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது.

காலநிலை

பரிசால் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலையின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றது.

பொருளாதாரம்

பரிசால் வங்காளதேசத்தின் அரிசி உற்பத்தி மையமாகும். பாலிசல் (ஒரு வகையான பாஸ்மதி) பாரிசலில் மிகவும் பிரபலமான அரிசி. தெற்காசியாவில் பிரபலாமான மெல்லும் பொருளான வெற்றிலைக்கும் இந்தப்பகுதி பிரபலமானது. பரிசால் நதியால் சூழப்பட்டிருப்பதால் மீன்கள் ஏராளமாக உள்ளன. நகரம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால் தேங்காய் ஒரு பொதுவான உற்பத்தி பொருளாகும். விவசாய பொருட்கள், இல்சா மீன், மருந்துகள், அன்கர் சீமெந்து போன்றவை ஏற்றுமதி பொருட்களாகும்.

போக்குவரத்து

விமானம்

பரிசால் விமான நிலையம் ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் , நோவோயர் மற்றும் யுஎஸ்-பங்களா ஏர்லைன்ஸ் ஆகியவை இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றன. செயலில் உள்ள விமான பாதை பரிசால்-டாக்கா-பரிசால் ஆகும்.

நதி துறைமுகம்

பரிசால் நதி துறைமுகம் பங்களாதேஷின் இரண்டாவது பெரிய நதி துறைமுகமாகும். பரிசால் மக்களுக்கு தலைநகரான டாக்காவிற்கு தொடர்பு கொள்வதற்கான மிகவும் பிரபலமான இணைப்பாகும். இது போலா, பார்குனா, லட்சிமிப்பூர் போன்ற பிற மாவட்டங்களுடன் பிரபலமான போக்குவரத்து முறையாகும்.

சாலை

பரிசால் நாட்டின் பிற பகுதிகளுடன் என்8 தேசிய நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பரிசாலில் நாதுல்லாபாத் மத்திய பேருந்து முனையம், மற்றும் ரூபட்டாலி பேருந்து முனையம் ஆகிய இரு பிரதான முனையங்கள் உள்ளன. பல பேருந்துகள் பரிசாலை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கின்றன.

கல்வி

பரிசால் பல கல்வி நிறுவனங்களின் தாயகமாகும். அரசு ப்ரோஜோமோகன் கல்லூரி 1889 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நகரத்தின் மிகப் பழமையான உயர்கல்வி நிறுவனமாகும். பரிசால் பொது பல்கலைக்கழகம் மற்றும் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.

விளையாட்டு

பரிசாலில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து ஆகிய இரண்டும் மிகவும் பிரபலமான விளையாட்டுகளாகும். டென்னிஸ் மற்றும் கபடி ஆகியவையும் பிரபலமாக உள்ளன. நகரத்தில் பரிசால் விளையாட்டரங்கம் (அப்துர் ரப் செர்னியாபாத் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படுகிறது) என்று அழைக்கப்படும் ஒரு தேசிய அரங்கம் காணப்படுகின்றது. இது தற்போது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[3]

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.