பரார்த்தக் கிரியை

பரார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. எல்லா உயிர்களினதும் நன்மை கருதி இறைவனை வழிபடுவதற்காகத் திருக்கோவில் அமைத்தல் முதலான கிரியைகளைக் குறிக்கும். இது கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்.

கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம் என்பது திருக்கோவில் அமைப்பதற்குரிய இடத்தை ஆராய்ந்து தெர்ந்தெடுத்து பரிசோதித்து பண்படுத்தி நாட்கல் நாட்டித் திருக்கோவில் அமைத்து, மூர்த்தியை அமைத்து பிரதிஷ்டை செய்து முடிக்கும் வரையுள்ள கிரியைகளின் தொகுதியாகும்.

பிரதிஷ்டாதி உற்சவாந்தம் என்பது பிரதிஷ்டை நடைபெற்றபின் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய பூசை, அவற்றின் காலங்கள், நித்திய பூசை முடிவில் செய்யப்படும் உற்சவங்கள் முதலிய கிரியைகளின் தொகுப்பாகும்.

உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என்பது நித்திய பூஜை முதலியவற்றில் ஏற்படும் குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்படும் நைமித்திய உற்சவங்கள் அவற்றின் வகைகள் தொடங்கும் முறைகள் என்பவற்றின் தொகுதியாகும்.

பரார்த்தக் கிரியையின் வகைகள்

பரார்த்தக் கிரியைகளை நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகையாகப் பிரிக்கலாம். நித்தியக் கிரியை என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரியைகளைக் குறிக்கும். உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும். நைமித்தியக் கிரியை என்பது நித்திய பூசையில் உண்டாகும் குறைகளை நீக்குதல் முதலான காரணங்கள் கொண்டு செய்யப்படும் விஷேட பூசைகள், உற்சவங்கள் என்பன நைமித்தியக் கிரியை என அழைக்கப்படும். உதாரணமாக மகோற்சவம், கும்பாபிஷேகம், நவராத்திரி என்பவற்றைக் குறிக்கும்.

தாம் விரும்பிய பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கிரியைகளாகிய அபிஷேகம், அர்ச்சனை முதலியன காமியக் கிரியை எனப்படும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.