பராயனார்

பராயனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 155.

புலவர் பெயர் விளக்கம்

கடவுளைப் பாராட்டி வணங்குதல் 'பராவுதல்' எனப்படும்.

"பரவலும் புகழ்ச்சியும்" என்று தொல்காப்பியம் (1028) குறிப்பிடுமிடத்தில், பரவுதல் என்பது தெய்வம் பரவுதலையும், புகழ்ச்சி என்பது மக்களைப் புகழ்தலையும் உணர்த்துவதை அறியமுடிகிறது.

இந்தப் பாடலில் தலைவன் தலைவியைத் தெய்வமாக எண்ணிக்கொண்டு கடல்அணங்கோ என்று பாராட்டுகிறான். இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில், நற்றிணை நூலைத் தொகுத்த ஆசிரியர் இவரது பாடற்பொருளை மையமாகக் கொண்டு இவருக்குப் பராயனார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளார். இந்த வகையில் இவரை பாடற்பொருளால் பெயர்பெற்ற புலவராக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாடல் தரும் செய்தி

உப்பங்கழி ஓரத்தில் நிற்கும் அவளை அவன் பார்க்கிறான். அவளைக் கடல் அணங்கோ என வியந்து பரவுகிறான். அதைக் கேட்ட அவள் புன்முறுவல் பூக்கிறாள். அத்துடன் அவன் கண்களில் பனிநீர். அவன் பரவியவை:

நீ மகளிரோடு சேர்ந்து ஓரை ஆடவில்லை. நெய்தற்பூ தொடலை ஆடையும் புனையவில்லை. கடற்கானலின் ஒருபக்கம் ஒதுங்கி நிற்கிறாய். யாரையையோ நீ? உன்னைத் தொழுது நிற்கின்றேன். ஒன்று வினவுகின்றேன். கண்டோரின் காட்சித் தாகம் தணியாத அளவுக்கு நலமெல்லாம் உருவமாகித் தோன்றுகிறாய். கடல் அணங்கோ? கடலோரக் காரிகையோ? இனி, வாய் திறந்து சொல்லிவிடு - என்கிறான்.

ஒப்புநோக்கம்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும் என் நெஞ்சு - திருக்குறள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.