பரதம் (திரைப்படம்)

பரதம் 1991ல் வெளிவந்த இனிய பாடல்கள் நிறைந்த ஒரு மலையாளத் திரைப்படம். மோகன்லால் தயாரிப்பில், சிபிமலயில் இயக்கத்தில் நெடுமுடி வேணு, மோகன்லால், லட்சுமி, ஊர்வசி, திக்குரிசி சுகுமாரன் நாயர் முதலியோர் நடித்திருந்தார்கள். காலஞ்சென்ற ரவீந்திரனின் இசையமைப்பில் கே. ஜே. ஜேசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, சித்ரா ஆகியோர் இனிய பாடல்களைப் பாடினார்கள்.

பரதம்
இயக்கம்சிபிமலயில்
தயாரிப்புமோகன்லால்
கதைலோகிததாஸ்
இசைரவீந்திரன்
நடிப்புநெடுமுடி வேணு
மோகன்லால்
லட்சுமி
ஊர்வசி
திக்குரிசி சுகுமாரன் நாயர்
ஒடுவில் உன்னிக்கிருஷ்ணன்
கவியூர் பொன்னம்மா
கேபிஏசி லலிதா
பொபி கொட்டாரக்கரா
குஞ்சன்
முரளி
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கல்லியூர் ராமன் (நெடுமுடி வேணு) ஒரு பிரபல சங்கீத மேதை. அவன் தம்பி கல்லியூர் கோபிநாதன் என்ற கோபி(மோகன்லால்) அண்ணனையே தன் குருவாகக் கொண்டு சங்கீதம் பயின்று அவனுடன் கச்சேரிகளுக்கும் சென்று வருகிறான். ராமன் தனக்கு மிருதங்கம் வாசிக்கும் தன் தாய்மாமனின் மகளை (லட்சுமி) திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். கோபி தன் அண்ணியின் தங்கையை (ஊர்வசி) விரும்பி இருக்கிறான். ராமன், கோபி, அண்ணி, தாய், வாய் பேசமுடியாத ஒரு தங்கை, தாத்தா (திக்குரிசி சுகுமாரன் நாயர்) எல்லோரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்ணனான ராமன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ஒரு கச்சேரியில் அவன் மதுபோதையினால் பாடமுடியாமல் தடுமாற சபையோர் கூக்குரலிடுகிறார்கள். நிலைமையை சமாளிப்பதற்காக தம்பி கோபி பாடி முடிக்கிறான். சபையோர் அதை சந்தோசமாக வரவேற்கிறார்கள். தம்பி அப்படிச் செய்தது தனக்கு அவமானம் என்று ராமன் வீட்டில் உள்ளவர்களுக்குச் சொல்ல அவர்களும் அதைச் சரியென்று சொல்ல, கோபி தான் இனிப்பாடவே போவதில்லை என்று மங்களம் பாடி முடிக்க முற்பட, அவனது நல்லமனம் தெரிந்த அண்ணி அதைத் தடுக்கிறாள். வெளியூர்களிலிருந்து அண்ணனை வழக்கமாக கச்சேரிக்கு அழைப்பவர்கள் கூட இப்போது தம்பியையே அழைக்கிறார்கள். இவற்றால் ஆத்திரம் அடைந்த ராமன் அதிகமாகக் குடிக்கிறான். இறுதியாக தன் தம்பியின் ஒரு சங்கீதக்கச்சேரியை பார்க்கப்போய்விட்டு போதையில் வரும்போது வாகனத்தில் மோதுண்டு அனாதைப்பிணமாக கிடக்கிறான். அண்ணனைத் தேடி கோபி எங்கெங்கெல்லாமோ அலைகிறான். இதற்கிடையில் வாய் பேசமுடியாத இவர்கள் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. அண்ணன் எப்படியாவது திரும்பி வருவான் என்ற் நம்பிக்கையில் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கின்றன. இந்த நேரத்தில் அண்ணன் இறந்துவிட்டான் என்ற செய்தி கோபிக்கும், அவனது காதலிக்கும் தெரியவருகிறது. இது தெரிந்தால் தங்கையின் கல்யாணம் நின்றுவிடும் என்ற எண்ணத்தினால் கோபி தன் அண்ணனின் இறுதிச்சடங்குகளை ரகசியமாகவே நடத்தி முடிக்கிறான். ஒரு மாத முடிவில் அண்ணனின் சாந்தி பூசை செய்வதற்காக அவனது மகனான் சிறுவனை ரகசியமாக கடற்கரைக்கு அழைத்துப்போய் கிரியைகள் செய்யும்போது செத்துப்போகாத என் அப்பாவிற்கு ஏன் சாந்தி பூசை செய்கிறீர்கள் என்று கேட்பதோடு வீட்டுக்கு ஓடி வந்து எல்லோருக்கும் சிறுவன் அதை சொல்லி விடுகிறான். எல்லோரும் கோபியை குற்றம் சாட்டுகிறார்கள். அவனே அண்ணனை கொன்றிருப்பான் என்ற அளவிற்கு போகிறார்கள். அண்ணி மாத்திரம் கோபியை நம்புகிறாள். இறுதியில் உண்மை தெரிய வருகிறது.

கிடைத்த விருதுகள்

  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது - மோகன்லால்
  • சிறந்த பாடகருக்கான் தேசிய விருது - கே. ஜே. ஜேசுதாஸ் - ராம கதா ஞானலயம் என்ற பாடலுக்காக.
  • கேரள மாநில விருது - இரண்டாவது சிறந்த படம்
  • கேரள மாநில விருது - சிறந்த நடிகர் - மோகன்லால்
  • கேரள மாநில விருது - சிறந்த நடிகை - ஊர்வசி
  • கேரள மாநில விருது - சிறந்த இசையமைப்பாளர் - ரவீந்திரன்
  • கேரள மாநில நடுவர்களின் விசேட விருது - நெடுமுடி வேணு

துணுக்குகள்

  • "பரதம்" என்ற இந்த திரைப்படம் "சீனு" என்ற பெயரில் இயக்குனர் பி. வாசு, கார்த்திக் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்து தமிழில் வெளிவந்தது.

வெளி இணைப்புக்கள்

பரதம் பாடல்கள்

ரகுவம்ச பதே - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க

ராம கதா - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க

ஸ்ரீவிநாயகம் - கே. ஜே. ஜேசுதாஸ் பாடியது கேட்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.