பயிர் சுழற்சி

பயிர் சுழற்சி (crop rotation) என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறையாகும். ஒரே பயிரைப் பயிரிடுவதால் களைச் செடிளின் ஆதிக்கம் அதிகமாகும். உழவு முறைகள் களைச் செடிகள் பரவுதலை இடையூறு செய்து, அவற்றைக் கட்டுப்படுத்த உதவும். இவ்வாறு பயிர் சுழற்சி களைகள் கட்டுப்பாட்டை எளிமையாக்குகிறது.[1] ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிர்களைப் பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறை ஆகும். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து, அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிடும் பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடுகிறது.

பயிரின் வளத்தைத் தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக விடும் போது நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த உத்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணைத் தரிசாக விடும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை நிலத்தில் தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை நல்லதொரு உரமாக மாறுகின்றது.[2] பயறுவகைத் தாவரங்கள், தங்களுடைய வேர்களில் உள்ள வேர்முண்டுகளில் உள்ள கூட்டுயிர் வாழ்க்கை வாழும் பாக்டீரியாக்களின் உதவியுடன் வளிமண்டல நைட்ரசனை மண்ணில் நிலைப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக நெல் மற்றும் கோதுமை (இவற்றின் புரத உற்பத்திக்கு நைட்ரசன் தேவை. காற்றிலுள்ள நைட்ரசனை இவை நேரடியாக எடுத்துக்கொள்ள இயலுவதில்லை) போன்ற தாவரங்கள் மண்ணிலிருந்து நைட்ரஜனை உறிஞ்சுகின்றன. இழக்கப்பட்ட நைட்ரசனானது வேர்முளை கூட்டுயிர் வாழும் பாக்டீரியங்கள் கொண்ட தாவரங்களைப் பயிரிடுவதன் மூலம் இயற்கையாக ஈடுசெய்யப்படுகிறது. எ.கா. பட்டாணி, சோயா, மொச்சை ஆகியவை நெல் மற்றும் கோதுமை சாகுபடிக்குப் பிறகு பயிர் சுழற்சி முறையில் பயிர் செய்யப்படுகிறது.

பயிர்ச் சுழற்சியில் கிழங்கு வகைகளும் உள்ளடக்கப்படுகின்றன. இவை ஆழ ஊடுருவுவதனால் மண் வளம், வளியூட்டம் என்பன ஏற்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. http://agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_weedmgt_ta.html
  2. http://sgmanarkeni.wordpress.com/2011/02/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.