பன்னீர்

பன்னீர் எனப்படுவது உரோசாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் ஆகும். உண்மையில், பன்னீரானது நறுமணத் தேவைகளுக்காக உரோசா எண்ணெய் எடுக்கப்படும் போது தோன்றும் பக்க விளைபொருள் ஆகும். இது உணவுப் பொருட்களை மணமூட்டவும், சில அழகுசாதன மற்றும் மருத்துவப் பொருட்களின் பகுதியாகவும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சமய நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தோற்றம்

பண்டைக் காலம் தொட்டே உரோசா அதனது நறுமணம், மருத்துவப் பயன்பாடு மற்றும் போசணைப் பதார்த்தங்கள் என்பவற்றின் காரணமாக விலை மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாகவே, பண்டைய கிரேக்கரும் உரோமரும் ஃபீனீசியரும் தங்களது கோதுமை வயல்களுக்கும் பழத் தோட்டங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போன்றே பரந்து விரிந்த அரச உரோசாத் தோட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினர்.[1]

உரோசா அத்தர் எனப்படும் உரோசா நறுமணப் பொருட்கள் நொறுக்கிய அல்லது கசக்கிய உரோசாப் பூவிதழ்களை வடிகட்டுவதனாற் பெறப்படும் எளிதிற் தீப்பற்றக்கூடியதான உரோசா எண்ணெயிலிருந்தே செய்யப்படுகின்றன. இம்முறை தொடக்கத்தில் பாரசீகத்திலும் பல்காரியாவிலுமே வளர்ச்சியடைந்தது. இவ்வாறு உரோசா எண்ணெய் பெறப்படும் போது உண்டாகும் பக்க விளைபொருளே பன்னீர் ஆகும்.

பண்பாடுகள்

பன்னீர் ஏனைய நறுமணப் பொருட்களை விட மிகவும் வித்தியாசமான மணத்தைக் கொண்டது. இது ஈரானிய சமையலில், குறிப்பாக இலசுசி, குலாபு யாமூன், யலாபு போன்ற இனிப்புப் பண்டங்களிற் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், இது முஸ்லிம்களாலும் சோரோசுதிரர் சமயத்தவராலும் தத்தமது சமயச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

சைப்பிரசில் மகுலபு எனப்படும் உணவிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது.[2] ஈரான் நாட்டில் தேநீர், பனிக்களி, உலரொட்டி போன்றவற்றிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பால், சர்க்கரை போன்றவற்றுடன் கலந்து பண்டுங் எனப்படும் ஒரு வகைக் குடி தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, சிவப்பு வைன் மற்றும் ஏனைய மதுசாரம் கலந்த பொருட்களுக்கு ஹலாலான மாற்றீடாக உணவுப் பொருட்களிற் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு ஐரோப்பாவிற் சில வகையான உயர் தரக் கேக்குகளைச் செய்வதற்குப் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வனிலா மணத்தைப் பயன்படுத்தும் பழக்கம் பரவும் வரையில் அமெரிக்க, ஐரோப்பிய உணவு உற்பத்தியாளர்கள் பன்னீரைக் கொண்டே தமது உணவுப் பொருட்களுக்கு நறுமணமூட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

பிரெஞ்சுக்காரர் உரோசாச் சாறு கலந்த குடிபொருட்களைப் பயன்படுத்துவோரெனப் பரவலாக அறியப்படுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் பிரெஞ்சு உரோசாச் சாற்றைப் பயன்படுத்தி ஒரு சில தின் பண்டங்கள் இன்றளவும் செய்யப்படுகின்றன.

தோலை மென்மையாக்குவதற்கும் அழகுசாதனக் குளிர் களிம்புகளிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. மக்காவில் புனித கஃபாவைக் கழுவும் போது சம்சம் நீருடன் பன்னீர் கலந்தே கழுவப்படுகிறது. சில இந்து சமயச் சடங்குகளிலும் பன்னீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறே, கீழைநாட்டுப் பழமைவாதத் திருச்சபை போன்ற கிறித்துவப் பிரிவுகளும் தங்களது சமய நிகழ்வுகளிற் பன்னீரைப் பயன்படுத்துகின்றனர்.[3]

குடிபானத்திலும் நறுமணப் பொருள் உற்பத்தியிலும் பயன்படுத்துவதற்காக உரோசாவிதழ்களை வடிகட்டிப் பன்னீர் பெறப்படுவது முதன் முதலாக பண்டைய இசுலாமிய வேதியியலாளர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.[4]

லெபனான், இசுரவேல், பலஸ்தீன் ஆகிய இடங்களில் லெமனேடு பானங்களுடன் பன்னீர் கலக்கப்படுகிறது.

இந்தியாவில், கண்களைத் துப்புரவாக்குவதற்காகக் கண்களுள் பன்னீர் இடப்படுகிறது. இந்தியாவிற் சிலரால் இயற்கையான நறுமணத்தைப் பெறுவதற்காகவும் ஈரலிப்பாக்கியாகவும் பன்னீரை முகத்திற் தெளித்துக் கொள்ளப்படுவதுமுண்டு. மேலும் இந்தியப் பலகாரங்களிலும் ஏனைய உணவுப் பொருட்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் திருமண வைபவங்களின் போது விருந்தினரை வரவேற்பதற்காகவும் பன்னீர் தெளிக்கப்படுகிறது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்


வெளித் தொடுப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.