பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம்" இந்நாளைக் கொண்டாடி வருகின்றது. இது முதன் முதலில் 1976 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

லண்டனில் இடதுகை பழக்கமுடையோர் நாள், ஆகஸ்ட் 13 2002

இடக்கைப் பழக்கமுள்ளோர்

உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட சிரமங்களை அவர்கள் எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது.

இந்த இடதுகைப் பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது. மூளையானது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை: மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம். இவற்றில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

நிகழ்ச்சிகள்

தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இந்நாள் சிறப்பாக அனுட்டிக்கப்படுகிறது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துவது என்பன இந்நாளில் முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.