பனிக் கட்டிக் குடில்

பனிக் கட்டிக் குடில் அல்லது இக்லூ (Igloo) என்பது பனிக்கட்டிகளைக்கொண்டு கட்டப்படும் வீடுகளாகும். ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்ற எஸ்கிமோவர்கள் இவ்வாறான வீடுகளைக் கட்டுகிறார்கள். இவ்வீடுகள் பார்ப்பதற்கு இது அரைக்கோள வடிவம் கொண்டதாகத் தோற்றமளிக்கிறது. என்றாலும் உண்மையில் இது பரவளையவுரு (paraboloid) வடிவம் கொண்டது. இந்த வடிவம் மிக அழுத்தத்தில் அந்த பனிகட்டிகள் ஒன்றோடொன்று இணைந்து இருப்பதற்கு உதவுகிறது. பனிக் கட்டிக் குடில் பெரும்பாலும், கனடாவின் கனடாவின் வட எல்லையில் வாழும் பழங்குடிகளான இனூயிட் மக்களோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது. இங்கே மழைக் காலத்தில் வேட்டையாடுபவர்களால் இந்தப் பனிக்கட்டி வீடுகள் தற்காலிக வாழும் இடங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பனிக் கட்டிக் குடில்


வெட்டி அவற்றை உகந்த முறையில் அடுக்குவதற்கு இடந்தரும் வகையில், போதிய அளவு பலமுள்ளவையாக, இக்லூ கட்டப் பயன்படும் பனிக்கட்டிகள் இருக்கவேண்டியது அவசியம். காற்றினால் அடித்துவரப்பட்ட பனியே பனிக் கட்டிக் குடில் கட்டச் சிறந்ததெனக் கூறப்படுகின்றது. இது பனிக்கட்டிப் பளிங்குகளை ஒன்றுடனொன்று பிணைத்து, இறுக்கமாக்க உதவுகிறது. பனிக்கட்டிக் குற்றிகளை வெட்டியெடுக்கும்போது உண்டாகும் பள்ளம், வழமையாகப் பனிக் கட்டிக் குடில் உட்பகுதியின் கீழ் அரைவாசியாக அமைகின்றது. வாயிற் கதவைத் திறக்கும் போது காற்று உள்ளேசெல்வதையும், வெப்ப இழப்பையும் தடுப்பதற்காகப் பெரும்பாலும் வாயிலில் ஒரு குறுகிய சுரங்கப்பாதை அமைக்கப்படும். பனிக்கட்கிகள் வெப்பத்தை கடத்தாத தன்மை கொண்டிருப்பதால், மனிதர் வாழும் இக்லூக்களின் உட்பகுதி ஆச்சரியப்படத்தக்க வகையில் இதமானதாக இருக்கும்.

பனிக் கட்டிக் குடில் வெட்டுமுகப்படம்

மத்திய எஸ்கிமோவர், சிறப்பாக, டேவிஸ் நீரிணையைச் சுற்றி வாழ்பவர்கள், உள்ளே வாழும் பகுதியைத் தோலால் மூடுவார்கள். இது உள்ளேயுள்ள வெப்பநிலையை 2°ச இலிருந்து 10-20°ச வரை உயர்த்தக்கூடியது.

கட்டிடக்கலைரீதியில் பனிக் கட்டிக் குடில் தனித்துவமானது. தாங்கும் அமைப்பு எதுவுமின்றியே, தனித்தனிப் பனிக்கட்டிகளை தாங்களே ஒன்றையொன்று தாங்கும்படி அடுக்குவதன்மூலம் இதன் அரைக்கோளவடிவ "கவிமாடம்" ஐக் கட்டியெழுப்ப முடியும்.

"இக்லூ", என்பது இனுக்டிடுட் மொழியில் "வீடு" என்ற பொருள்படும்.

பொதுவாக மூன்று வகை பனிவீடுகள் உண்டு. அவற்றின் பரப்பளவும், நோக்கமும் வெவ்வேறானவை. மிகச் சிறிய பனிக்கட்டி வீடுகள் தற்காலிகத் தங்குதலுக்கு அதாவது ஓரிரு இரவுகள் மட்டும் தங்க இவை பயன்படுகின்றன. நடுத்தர அளவு இக்ளூக்கள் குடும்பமாக வாழ்வதற்கு ஏற்றவை. இவை ஒரே ஒரு அறை கொண்டவை. இதில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் தங்க முடியும். அடுத்தடுத்து பல வீடுகள் இப்படிக் கட்டப்படும். குடியிருப்பு அல்லது கிராமமாக இவை விளங்கும்.

அடுத்து மிகப் பெரிய பனிக்கிடில் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். ஒன்று தற்காலிகமாகத் தங்குவதற்கும். மற்றொன்று நிரந்தரமாகத் தங்குவதற்கும். இவற்றில் ஐந்து அறைகள்கூட இருக்கும். அதிகபட்சம் இருபதுபேர்கூடத் தங்கலாம். சிலசமயம் சின்னச் சின்ன பனிக்குடில்களைச் சுரங்கப்பாதைகளின் மூலம் இணைத்துப் பல குடும்பங்கள் அங்கே தங்கப் பயன்படுத்துவது உண்டு.[1]

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. ஜி.எஸ்.எஸ் (2018 திசம்பர் 29). "பனிக்கட்டி வீடுகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 29 திசம்பர் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.