ப. கந்தப்பிள்ளை

ப. கந்தப்பிள்ளை (1766 - சூன் 2, 1842) யாழ்ப்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், அறிஞரும் ஆவார். பல நாடகங்களை இவர் இயற்றியுள்ளார். மருத்துவராகவும் இவர் அறியப்பட்டவர். இவர் ஆறுமுக நாவலரின் தந்தை.

வாழ்க்கைக் குறிப்பு

கந்தப்பிள்ளை 1766 ஆம் ஆண்டில் பரமானந்தர் என்பவருக்குப் பிறந்தவர். தமிழோடு, டச்சு, போர்த்துக்கீசம், மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை அறிந்தவர். 18 ஆண்டுகளாக இவர் ஆராச்சி என்ற அரசுப்பணியாளராகத் தொழில் புரிந்து வந்ததனால் இவரை ஆராச்சிக் கந்தர் எனவும் அழைப்பர். வேலைப்பணியோடு மருத்துவமும் இவருக்குத் தெரிந்திருந்தது. இவரது தந்தை பரமானந்தர், பாட்டனார் இலங்கைக்காவல முதலியார் அனைவரும் தமிழ் அறிஞர்கள். கந்தப்பிள்ளைக்கு ஆறுமுக நாவலருடன் சேர்த்து ஐந்து ஆண் பிள்ளைகளும் மூன்று பெண்களும் இருந்தனர். நாவலரைத் தவிர மற்ற நால்வரும் அரசப் பணியாற்றியவர்கள். மூத்தவர் தம்பு என்பார் தந்தை வழியே ஆராச்சி என்ற அரசுப் பணியாளராக இருந்தார்.

நாடகங்கள் இயற்றல்

பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் கந்தப்பிள்ளை தமது இறுதிக் காலத்தை நாடகங்கள் இயற்றுவதில் போக்கினார். சந்திரகாச நாடகம், இராமவிலாசம், நல்லை நகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், எரோது நாடகம், சமநீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் முதலான 21 நாடகங்களை இவர் இயற்றியுள்ளார்.

உசாத்துணை

  • மார்ட்டின், ஜோன். எச்.; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.