நொண்டிச்சிந்து

நொண்டிச்சிந்து அல்லது நொண்டி நாடகம் என்பது சிந்து என்ற தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். சிந்து வகைப்பாக்கள் இசைத்தற்கென்றே உருவாக்கப்பட்டமையாகும். உடல் ஊனமுற்ற காலை இழந்த நாயகன் மேடையில் தோன்றுவதால் இது ஒற்றைக்கால் நாடகம் என்றும் அழைக்கப்படுகிறது.

கிபி பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய இவ்வகை நாடகங்கள் சாதாரண பொதுமக்கள் காணும் வண்ணம் மேடையில் நடத்தப்பட்டன; பார்வையாளர்களுக்கு அறவொழுக்கத்தை அறிவுறுத்தின. இந்நாடகங்களின் கதை அமைப்பு நாயகன் தனது பழைய வாழ்வை நினைவு கூறுவது போல அமைந்திருக்கும். அவன் வாழ்வில் பொருளை இழந்து தவறிழைக்கத் தொடங்குவான். குதிரை திருடி அகப்பட்டு காலை இழந்து ஊனமுறுவான். பின் மனம் திருந்தி கடவுளை வழிபடுவான். அதன் பலனாக இழந்த கால்களை மீண்டும் பெறுவான். இவ்வகை நாடகங்கள் பொதுமக்கள் பார்த்து இன்புறும் வண்ணம் எளிய நடையும் நையாண்டியும் கொண்டு எழுதப்பட்டன.

இலக்கணம்

அளவொத்த இரண்டடிகளால் நடைபெறும் பாடல்கள் சிந்துப்பா என்று கூறப்படும் வகையைச் சேருமென்று சொல்வார்கள்.

நொண்டிச் சிந்தில் வரும் தனிச் சொற்கள் மூவசைக்கு மிகாமல் வருதல் பெரும்பான்மை. நாலசைத் தனிச்சொல்லும் அருகி வரும்.

எடுத்துக்காட்டு

உண்டான ஆத்தியெல்லாம் - வீட்டில்
உடைமை கடமைகளும் உடன்எடுத்துக்
கொண்டாடிக் கொண்டெழுந்தேன் - பாதை
கூடித்தென் பூமியை நாடிச் சென்றேன்.


சென்றேன் தலங்களெல்லாம் - பின்னர்ச்
சிதம்பரத் தையர் பதம்பெறநான்
நின்றேன் புலியூரில் - தொண்டர்
நேசிக்கும் சந்நிதி வாசல் வந்தேன். -- (திரு.நொ.நா.பக்.34, 35) [1]

நொண்டி நாடகங்கள்

  • சீதக்காதி நொண்டி நாடகம்
  • திருச்செந்தூர் நொண்டி நாடகம்
  • சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம்
  • திருவிடைமருதூர் நொண்டி நாடகம்
  • ஞான நொண்டி நாடகம்
  • திருக்கச்சூர் நொண்டி நாடகம்
  • ஐயனார் நொண்டி நாடகம்
  • கள்வன் நொண்டிச் சிந்து
  • பெருமான் நொண்டி நாடகம்
  • திருவனந்தபுரம் நொண்டி நாடகம்


நொண்டிச்சிந்து

    திருச்செந்தூர் நொண்டி  நாடகத்தை அடியொற்றி இசுலாமியப் புலவர் செய்தக்காதி நொண்டி நாடகத்தை உருவாக்கினார்.  சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் நாடகமேடையில் ஒரே ஒரு கதாபாத்திரமான நொண்டி பாடுவார்.  நாடகக் கதாநாயகன் நொண்டியால் 186 கண்ணிகள் கொண்ட சிந்துகளாகையால் நொண்ச்சிந்து என வழங்கலாயிற்று.  இந்த நொண்டிச் சிந்தில் நகைச்சுவை, ஏக்கம், வீரம், அச்சம், பக்தி போன்ற கொந்தளிப்புகளும், அப்போது சமூகத்திலிருந்த கள்வர், வேசையர் பற்றிய செய்திகளும் உள்ளன. 

[2]

உசாத்துணை

  1. http://library.senthamil.org/098.htm
  2. ஜமாலுதீன், அ. (1974). செய்தக்காதி நொண்டி நாடகம். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண் 934
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.