நேர்மை

நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு மாறாக அல்லது பிழைக்கு ஆதரவாக அல்லாமல் நேர்வழியில் நடந்துகொள்ளும் அல்லது செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் மனித குணயியல்பு தொடர்பான ஒரு சொல்லாகும். குறிப்பாக ஒருவரின் "நேர்மை" என்பதனை ஒருவரின் உருவ அமைப்பை வைத்தோ, கல்வி அறிவை வைத்து, தொழில் அல்லது இருக்கும் பதவியை வைத்தோ மதிப்பிட முடியாது. காரணம் "நேர்மை" என்பது ஒருவர் நடந்துகொள்ளும் குணயியல்பை பொறுத்து தானாகவே வெளிப்படும் தன்மை கொண்டது. "நேர்மை" என்பதனை இன்னொருவகையில் கூறுவதாயின் உண்மையின் வழியில் நேராக நடந்துகொள்ளலைக் குறிக்கும்.

அதேவேளை ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியானது என கருதிய ஒன்று தவறு என அறிந்துகொள்ளும் போது, தனது தவறை மனதளவிலேனும் ஏற்று திருத்திக்கொண்டு, நேர் வழியில் நடக்கும் தன்மையையும் "நேர்மை" எனக்கொள்ளப்படும். "நேர்மை" ஒரு மதிக்கத்தக்க குணயியல்பின் வெளிப்பாடு.

நேர்மையும் மதிப்பும்

நேர்மையாக நடந்துகொள்ளும் ஒரு மனிதரை "நேர்மையாளர்", "நேர்மையானவர்", "நேர்மையான மனிதர்" என்றெல்லாம் அழைக்கப்படுவர். "நேர்மை" மனிதர்களிடம் மட்டுமல்லாமல் நடவடிக்கைகள், அமைப்புகள், அரசுகள் போன்றவற்றிடம் இருந்தும் வெளிப்படும். பொதுவாக "நேர்மை" எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவற்றிக்கு, அவருக்கு மாந்தரிடையே என்றும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.

நேர்மையான குணயியல்பை கொண்ட மனிதர்கள் காலம்கடந்தும் போற்றற்குரியோராவர்.

நேர்மையின்மை

தெரிந்தே ஒருவர் பிழைசெய்வதும் பிழையை ஆதரிப்பதும் கூட நேர்மையின்மையின் வெளிப்பாடுகளாகும். தவறை உணர மறுப்பதும் நேர்மையின்மையே ஆகும். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒருவர் தனது கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மாற்றிகொள்வதும், அதனையே நியாயமென நிறுவ முனைதலும் கூட நேர்மையின்மையின் வெளிப்பாடுகள் தான். சந்தர்ப்பவாத செயல்பாடும் நிலைப்பாடும் நேர்மையின்மையின் கூறுகளாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.