நெய்தற்றத்தனார்

நெய்தல் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 3 உள்ளன. அவை அகநானூறு 243, நற்றிணை 49, 130 ஆகியவை

இந்த 3-ல் ஒன்று பாலைத்திணைப் பாடலாக இருப்பினும் தொகுப்பில் இடம்பெறாத இவரது பாடல்களில் பல நெய்தல்திணைப் பாடல்களாக இருந்தமையால் போலும் இவரது பெயருக்கு முன் 'நெய்தல்' என்னும் அடைமொழியை எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் சேர்த்துள்ளனர்.

இவரது பாடல்கள் சொல்லும் செய்திகள்

அகம் 243

  • திணை - பாலை

வாடை

கண்ணோட்டம் [1] இல்லாமல் வாடை வந்து இருக்கை கொண்டுள்ளது.

அவரை

வாடைக்காற்று வீசும்போது அவரைப் பூக்கள் உதிரும்.

ஈங்கை

வளைந்து தழைத்த துர் கட்டிய ஈங்கைச் செடி பவளம் போன்ற செந்நிறப் பூக்கள் பூக்கும்.

பகன்றை

தலை குப்புற இறங்கித் தொங்கும் பூங்கொத்துகளை உடைய பகன்றைப்பூ இறங்கும் பனிநீர்த் திவலைகள் போல எங்கும் பரந்து பூக்கும்.

பாசவல்

நெல்லுப்பயிர் காயாத பச்சைநெல் காய்க்கும் கதிர் வாங்கும்.

துணையில் வாழ்க்கை

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் பாலை வாழ்க்கை துணையில் வாழ்க்கை ஆகும். இப்படி வாழும்போது தலைவி பலவாறு தலைவனைப் பற்றி எண்ணிப் புலந்து நொந்துகொள்வாள்.

இப்படிப்பட்ட வாழ்க்கையை இப்பாடலின் தலைவி 'தொல்வினைப் பயன்' என்று எண்ணிப் பொறுத்துக்கொள்கிறாள்.

நற்றிணை 49

  • திணை - நெய்தல்

மணல் மேட்டில் மகளிர் விளையாடாததால் கடலலை ஏறிப் பாய்கிறது. முடிச்சுப் போட்ட வலைகள் முகந்துவந்த இறால் பாவைகளைக் கவரவரும் பறவைகளை ஓட்டி ஓட்டிப் பகல்பொழுது போகிறது. அங்கே என் குடும்பத்தார் கோட்டுமீனாகிய சுறாமீனைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் மெல்ல நழுவிச் சென்று அவர் எங்கிருக்கிறார் என்று கண்டறிந்து வரலாமா - என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர். (பகலில் வந்த தலைவன் இரவில் வரவேண்டும் என அறிவுறுத்தும் உரையாடல் இது)

நற்றிணை 130

  • திணை - நெய்தல்

தமது செய் வாழ்க்கை

தாமே முயன்று உணவைப் பெற்று உண்டு வாழும் வாழ்க்கை இனியது.

பலராகக் கூடித் தண்ணுமை முழக்கி மானை வளைத்துப் பிடித்து உண்ணும் வாழ்க்கை இங்குத் தமதுசெய் வாழ்க்கை என்று குறிப்பிடப்படுகிறது.

உயவுத்துணை இல்லை

ஏன் வாடியிருக்கிறாய் என்று அவர் வந்து ஒருநாள்கூடக் கேட்டதில்லை. எனவே என் வாழ்க்கை உசாவும் துணை இல்லாத வாழ்க்கையாக உள்ளது என்கிறாள் தலைவி.

அடிக்குறிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.