நெடுவரை (புவியியல்)

(புவியியல்) நெடுவரை அல்லது நெடுங்கோடு அல்லது நிலநிரைக்கோடு (meridian or line of longitude) புவியின் பரப்பில் கற்பனையான பெருவட்டத்தில் பாதியாகும். இவற்றின் ஒருமுனை வட துருவத்திலும் மற்றொரு முனை தென் துருவத்திலும் முடிகின்றன; ஒரே அளவிலான நெட்டாங்குகள் அனைத்தையும் இணைக்கின்ற கோடாகும். இந்த வட்டத்தில் உள்ள ஓர் புள்ளியின் அமைவிடத்தை அதன் நிலநேர்க்கோடு மூலம் பெறலாம். ஒவ்வொரு நிரைகோடும் அனைத்து நிலநேர்க்கோட்டு வட்டங்களுக்கும் செங்குத்தானவை. நிரைகோடுகள் அனைத்துமே ஒரே அளவிலானவை. இவை புவியின் பெருவட்டத்தில் பாதியானவை. எனவே இவற்றின் நீளம் 20,003.93 கிமீ (12,429.9 மைல்கள்) ஆகும்.

நிரைகோடுகள் வட துருவத்தையும் தென் துருவத்தையும் இணைத்து இடப்பட்டுள்ளன.

புவியியல்

முதன்மை நெடுங்கோடு (கிரீன்விச்)

இங்கிலாந்தின் கிரீன்விச்சில் உள்ள வானியல்சார் முதன்மை நெடுங்கோடு. புதிய புவிமேற்பரப்பியல் முறைமை 84ப்படி (WGS84) புவிக்கோளுருசார் முதன்மை நெடுங்கோடு இதற்கு 102.478 மீட்டர்கள் கிழக்கில் உள்ளது.

இங்கிலாந்தின் கிரீன்விச் பூங்காவிலுள்ள அரச கிரீன்விச் ஆய்வகத்தினூடே செல்லும் நெடுங்கோடு முதன்மை நெடுங்கோடு (கிரீன்விச்) எனப்படுகின்றது. இது சுழியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. புவிநடுக்கோட்டை ஒரு நெடுங்கோடு சந்திக்கும் புள்ளிக்கும் முதன்மை நெடுங்கோடு சந்திக்கும் புள்ளிக்கும் இடையே புவிமையத்தில் ஏற்படும் கோணமாக மற்ற நெடுங்கோடுகள் வரையறுக்கப்படுகின்றன. ஒருவட்டத்தில் 360 பாகைகள் உள்ளதால், கிரீன்விச்சிற்கு புவியின் நேர்எதிர்ப்புறம்் உள்ள நெடுங்கோடு மற்ற அரைக்கோளத்தை முழுமையாக்குகிறது. இது 180° நெடுங்கோடாக, எதிர்நெடுங்கோடு, வரையறுக்கப்படுகிறது; இது பன்னாட்டு நாள் கோடு அருகே செல்கிறது. புவியின் நிலப்பரப்பும் தீவுகளின் வேறுபாடும் எல்லைகளை மாறுபடுத்துகின்றன. கிரீன்விச்சிலிருந்து (0°) எதிர்நெடுங்கோடு (180°) வரை மேற்கிலுள்ள நெடுங்கோடுகள் மேற்கு அரைக்கோளமாக வரையறுக்கப்படுகின்றது. இதேபோல கிரீன்விச்சிலிருந்து (0°) முதல் எதிர்நெடுங்கோடு (180°) வரை கிழக்கிலுள்ள நெடுங்கோடுகள் கிழக்கு அரைக்கோளமாகும். பெரும்பாலான நிலப்படங்கள் நெடுங்கோடுகளை காட்டுகின்றன.

ஐஈஆர்எஸ் உசாக்குறிப்பு நெடுங்கோடு

முதன்மை நெடுங்கோட்டின் அமைவிடம் வரலாற்றில் பலமுறை மாறியுள்ளது. இவை நடைமுறைப்படி பெரும் மாற்றங்களை உண்டாக்கவில்லை. வரலாற்றின்படி நெடுங்கோட்டை தீர்மானிப்பதில் ஏற்பட்ட பிழைகள் முதன்மை நெடுங்கோடு மாறுவதால் ஏற்படும் பிழையை விட பெரிதாக இருந்தன. புதிய புவிமேற்பரப்பியல் முறைமை 84 (WGS84) ஏற்கப்பட்டபிறகு செயற்கைக்கோள் சார்ந்த புவிப்பரப்பியல் அளவிடல்களின்படி முதன்மை நெடுங்கோடு தற்போதைய கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டிற்கு 102.478 மீட்டர்கள் கிழக்கில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடப்பு முதன்மை நெடுங்கோடு கிரீன்விச் முதன்மை நெடுங்கோடு போல அடையாளப்படுத்தப்படவில்லை.

செயற்கைக்கோள்கள் புவியின் மேற்பரப்பிலிருந்த மேற்கோள் தளத்தை புவியின் நிறைமையத்திற்கு மாற்றியுள்ளன. புவியின் மேற்பரப்பின் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாது இந்த நிறைமையத்தை சுற்றியே செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன. செயற்கோள்களுக்கான புவிப்பரப்பியல் மேற்கோள் தளம் இந்த நிறைமையத்தை வைத்து நவீன முதன்மை நெடுங்கோடு வானியல் கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டுக்கு கிழக்கில் 5.3" பாகையில் உள்ளதாக தீர்மானிக்கப் பட்டது. கிரீன்விச்சின் நிலநிரைக்கோட்டில் இந்த கோணம் 102 மீட்டர்களாக உள்ளது.[1] இந்த மாற்றத்தை 1984இல் பன்னாட்டு நேரச் செயலகம் (BIH) அலுவல்முறையாக ஏற்றுக்கொண்டது. இது புவிமேற்பரப்பியல் முறைமை 84 (WGS84) என அறியப்படுகிறது.

காந்தவியல்

காந்த நெடுங்கோடு தெற்கு காந்தமுனையையும் வட காந்தமுனையையும் இணைக்கும் கற்பனை கோட்டிற்கு இணையானதாகும். புவியின்பரப்பில் காந்தவிசைக் கோடுகளின் கிடைமட்டக் கூறாக எடுத்துக் கொள்ளலாம்.[2] எனவே, காந்தமானியின் ஊசி காந்த நெடுங்கோட்டிற்கு இணையாக நிற்கும். காந்த நெடுங்கோட்டிற்கும் மெய்யான நெடுங்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம், காந்த ஒதுக்கம், கடல்வழி செல்வதற்குப் பயனாகிறது.[3]

வானியல்

விண்கோளொன்றில் நெடுங்கோடு. மஞ்சள் நிற அரைவட்டத்தின் மேலெல்லை நெடுங்கோட்டின் மேல்பகுதியாகும்.

வானியலில், நெடுங்கோடு பார்வையாளரின் இடத்திலிருந்து விண்முனைகள், வான் உச்சி, தாழ்புள்ளி ஆகியவற்றின் வழியாகச் செல்லும் பெரு வட்டம் ஆகும். எனவே, இதில் தொலைவானத்தின் வடக்கு, தெற்கு புள்ளிகளும் அடங்கும்; தவிர இது வானநடுவரைக்கு செங்குத்தாக இருக்கும். விண்கோள் நெடுங்கோடு வானக்கோளத்தில் ஒரைதள அமைவாக வீழ்த்தப்படும்போது புவிசார் நெடுங்கோட்டிற்கு இணையானதாகும். எனவே வானியல் நெடுங்கோடுகளும் முடிவிலா எண்ணிக்கையிலானவை.

தொடர்புடைய பக்கங்கள்

மேற்கோள்கள்

  1. Malys, Stephen; Seago, John H.; Palvis, Nikolaos K.; Seidelmann, P. Kenneth; Kaplan, George H. (1 August 2015). "Why the Greenwich meridian moved". Journal of Geodesy 89 (12): 1263. doi:10.1007/s00190-015-0844-y. Bibcode: 2015JGeod..89.1263M. https://link.springer.com/article/10.1007%2Fs00190-015-0844-y.
  2. "Geomagnetism". மூல முகவரியிலிருந்து 22 June 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 November 2008.
  3. "Magnetic meridian". Museo Galileo. பார்த்த நாள் 12 September 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.