நெடுங்கழுத்துப் பரணர்

நெடுங்கழுத்துப் பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரணர், வன்பரணர் போன்று பரணர் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் இருப்பதால் அவர்களினின்று இவரை வேறுபடுத்திக் காட்ட இவரை நெடுங்கழுத்து என்னும் அடைமொழி சேர்த்து நெடுங்கழுத்துப் பரணர் என வழங்கினர்.[1]

புறநானூறு 291 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாக உள்ளது.

புறம் 291 சொல்லும் செய்தி

கரந்தை மாயோன்

பகைவர் ஆனிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்க அரசன் வீரர்களை அனுப்பினான். ஆனிரைகளை மீட்டுத் திரும்பிய மாயோன் போன்ற கருநிறத்தவன் விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்தான். அவனைத் தின்ன நரிகள் வட்டமிட்டன.

பிணத்தின் மேல் வெள்ளைத்துணி

அவன் மேல் வெள்ளை ஆடை போர்த்தினர். சிறுவர்களும், துடி முழக்குவோரும், பாடும் மக்களும் கூடினர்.

மணிமாலை

மக்கள் தாம் அணிந்திருக்கும் மணிமாலையை வீரன் மாயோனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்.

ஒருகாழ் மாலை

துடிதுடித்து விதுப்புற்ற வேந்தனும் வீரன் மாயோனுக்குத் தன் ஒருகாழ் மாலையைச் சூட்டிப் பெருமைப்படுத்தினான்.

துடி முழக்கம்

இக்காலத்தில் மேளம் கொட்டுவது போல அக்காலத்திலும் துடியை முழக்கினர்.

புகழ் பாடுவோர்

இக்காலத்தில் சாவுமேளம் கொட்டுவோர் இறந்தவரின் புகழைப் பாடிக்கொண்டு கொட்டுவர். அதுபோல விழுப்புண் பட்டுச் சாகக் கிடந்த மாயோனுக்கும் அவனது புகழைப் பாடிக்கொண்டு துடி முழக்கினர். இப்படிக் கொட்டி அவர்கள் அவன் சாகும்வரையில் நரி அண்ட விடாமல் தடுத்தனர்.

விளரிப்பண்

இறந்தவன் நிரந்தரமாக உலகை விட்டுப் பிரிந்துவிட்டான். இந்தப் பிரிவைப் பாடுவது பாலைப்பண். இதனை விளரிப்பண் என்றும் கூறுவர்.

துடி முழக்கத்துடன் இறந்தவரின் புகழைப் பாடுவதும், மகளிர் இறந்தவரின் புகழைப் பாடி ஒப்பாரி வைப்பதும் விளரிப்பண்.

மேற்கோள்கள்

  1. நெடுங்கழுத்துப் பரணர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.