நிலைச் சமன்பாடு

இயற்பியலிலும், வெப்ப இயக்கவியலிலும், நிலைச் சமன்பாடு (Equation of state) என்பது குறிப்பிட்ட புறநிலைத் தொகுதி ஒன்றில், ஒரு பருப்பொருளின் நிலை குறித்து விவரிக்கும் ஒரு வெப்ப இயக்கவியற் சமன்பாடு ஆகும்.[1]. இது, வெப்பநிலை, அழுத்தம், கனவளவு, அக ஆற்றல் போன்ற நிலைச்சார்புகளுள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவற்றுள் உள்ள தொடர்பைக் கணிதச் சமன்பாடு மூலம் தருகிறது. தனிப்பாய்மங்கள், பாய்மக் கலவைகள், திண்மப் பொருள்கள், அல்லது விண்மீன்களின் உள்ளடக்கம் பற்றியெல்லாம் விவரிக்க உதவுகிறது நிலைச் சமன்பாடு.

நிலைச் சமன்பாட்டின் பரவலான பயன்பாடு நீர்ம வளிமங்களின் அடர்த்தியை அவற்றின் வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றோடு தொடர்புபடுத்துவது தான். மிகவும் எளிமையான ஒரு நிலைச் சமன்பாடு கருத்தியல் வளிம விதி என்பதாகும். இது குறைந்த அழுத்தத்திலும், மிதமான வெப்பநிலையிலும் சரியாக இருந்தாலும், வெப்பமும் அழுத்தமும் அதிகரிக்கும்போது முற்றிலும் சரியாகக் கணிப்பதில்லை. ஒரு வளிமம் நீர்மமாகும் நிலைகுறித்தும் இச்சமன்பாடு சரியாக விவரிப்பதில்லை. வளிம நீர்மங்களுக்குப் பயன்படுத்த வேறு சரியான நிலைச் சமன்பாடுகள் பலவற்றையும் கண்டறிந்திருக்கின்றனர். எல்லா வகையான பொருள்களுக்கும், அவற்றின் எல்லாப் புறநிலைகளிலும், பொருள்களின் எல்லாப் பண்புகளையும் மிகச் சரியாக விவரிக்கும் ஓர் ஒற்றை நிலைச் சமன்பாடு என்று எதுவுமில்லை.

மேற்கோள்கள்

  1. Perrot, Pierre (1998). A to Z of Thermodynamics. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-856552-6.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.