நியூ அயர்லாந்து (தீவு)

நியூ அயர்லாந்து (New Ireland, பிசின மொழி: Niu Ailan, நியூ ஐலான்) என்பது பப்புவா நியூ கினியில் அமைந்துள்ள ஒரு பெரிய தீவாகும். இதன் பரப்பளவு ஏறத்தாழ 7,404 கிமீ², மக்கள்தொகை ஏறத்தாழ 120,000 பேர்.[2] நியூ பிரிட்டன் தீவுக்கு வடகிழக்கே உள்ள இத்தீவு நியூ அயர்லாந்து மாகாணத்தின் மிகப் பெரிய தீவாகும். பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள இவ்விரண்டு தீவுகளும் செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயால் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தீவின் நிருவாக மையம் அதன் வட முனையில் காவியெங் நகரில் உள்ளது. இத்தீவு செருமனியின் ஆட்சிக்குள்ளாயிருந்த போது "நியூமெக்லென்பெர்க்" (Neumecklenburg) என அழைக்கப்பட்டது.

நியூ அயர்லாந்து
New Ireland
Niu Ailan
நியூ அயர்லாந்தின் முக்கிய நகரங்களும், அயல் தீவுகளும்
புவியியல்
ஆள்கூறுகள்3.33°S 152°E / -3.33; 152
தீவுக்கூட்டம்பிசுமார்க் தீவுக்கூட்டம்
பரப்பளவு7,404 km2 (2,859 sq mi)
நீளம்360
அகலம்10 - 40 km (25 mi)
உயர்ந்த ஏற்றம்2,379
உயர்ந்த புள்ளிடரோன் குன்று
நிர்வாகம்
பப்புவா நியூ கினி
மாகாணம்நியூ அயர்லாந்து மாகாணம்
பெரிய குடியிருப்புகாவியெங் (மக். 10,600)
மக்கள்
மக்கள்தொகை118,350[1] (2002)

புவியியல்

நியூ அயர்லாந்து தீவின் இடவமைப்பியல்

பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தீவு துப்பாக்கியின் வடிவமைப்பை ஒத்தது. இதன் நீளம் கிட்டத்தட்ட 360 கிலோமீட்டர்கள் ஆகும். அகலம் 10 கிமீ மிதல் 40 கிமீ வரை வேறுபடுகிறது. நடுவில் உள்ள மலைப் பகுதிகள் மிகவும் செங்குத்தாகவும் கரடுமுரடாகவும் காணப்படுகின்றன. டாரோன் மலை மிக உயரமானது (2,379 மீட்டர்) உயரமானது.[3] இத்தீவு நிலநடுக் கோட்டில் இருந்து 2 முதல் 5 பாகைகள் தெற்கே உள்ளது. பெரும்பாலான நிலப்பகுதி அடர்ந்த மழைக்காடாகும்.

நியூ அயர்லாந்து தென்மெற்கே பிசுமார்க் கடலாலும், வடகிழக்கே பசிபிக் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

வரலாறு

சுமார் 33,000 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய பப்புவா நியூ கினியில் இருந்து முதன் முதலாக மக்கள் இங்கு வந்து குடியேறினர் என நம்பப்படுகிறது. 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் லப்பித்தா பழங்குடி மக்கள் வந்தனர். நியூ அயர்லாந்தின் கபாய், மலகன், தும்புவான் ஆகிய மாவட்டங்கள் தற்போதும் இத்தீவுப் பழங்குடியினரின் பண்பாடுகளைப் பேணி வருகின்றன.[4]

1616 ஆம் ஆண்டில் டச்சுக் கடலோடிகள் யாக்கோபு லெ மாயிர், வில்லெம் சோட்டென் ஆகியோர் இத்தீவில் வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர். 1870கள், 1880களில், மார்க்கி டி ரேய்சு என்ற பிரான்சியர் நியூ பிரான்சு என்ற பெயரில் இங்கு ஒரு குடியேற்றத்தை ஆரம்பிக்க முயன்றார்.[5] இவர் இத்தீவுக்கு நான்கு முறை குடியேறிகளை அனுப்பினார். இவற்றில் ஒரு பயணத்தின் போது 123 குடியேறிகள் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டது.

1885 முதல் 1914 வரை செருமனியின் கட்டுப்பாட்டில் இருந்த செருமன் நியூ கினி இராச்சியத்தின் ஒரு பகுதியாக நியூமெக்லென்பர்கு என்ற பெயரில் இத்தீவு இருந்தது. செருமானியர்கள் இங்கு கொப்பரை உற்பத்தியில் பெரும் வெற்றி கண்டனர். தமது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு பெருஞ்சாலை ஒன்றையும் அமைத்தனர். இச்சாலை தற்போதும் பொலுமின்ஸ்கி நெடுஞ்சாலை என சேவையில் உள்ளது. முதலாம் உலகப் போரை அடுத்து நியூ அயர்லாந்து ஆத்திரேலியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவர்கள் இதற்கு நியூ அயர்லாந்து எனப் பெயரிட்டனர். 1942 சனவரியில், இரண்டாம் உலகப் போரின் போது, இத்தீவு சிறிது காலம் சப்பானியரின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மேற்கோள்கள்

  1. "New Ireland Province" (PDF). பார்த்த நாள் 2014-08-16.
  2. United Nations Environment Program, "Islands by land area: New Ireland," islands.unep.ch (1988).
  3. "People & Culture". New Ireland Tourism. பார்த்த நாள் 2014-08-16.
  4. Cahoon, Ben (2000). "Papua New Guinea". Worldttatesmen.org.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.