நிப்பா குடிசை

நிப்போ குடிசை (Nipa hut) அல்லது பகே குபோ (Bahay Kubo), கமாலிக் (Kamalig) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுவது பெரும்பாலான பிலிப்பைன்சின் தாழ்நிலப் பாண்பாடுகளுக்கு உரிய கால் வீட்டு வகை ஆகும்.[1] இது பிலிப்பினோ பண்பாட்டின், சிறப்பாகப் பிலிப்பினோ கரையோரப் பண்பாட்டின் சின்னமாகக் கருதப்படுகிறது.[2] [3]

பலவானில் உள்ள ஒரு நிப்பா குடிசை
1899ல் மணிலா புறநகர்ப் பகுதியில் உள்ள ஊள்ளூர் வீடுகள்

சொற்பிறப்பு

தகாலாக் பெயரான பகே குபோ என்பதன் நேரடிப் பொருள் கனசதுர வீடு என்பது. இது அவ்வீட்டின் வடிவத்தை விளக்குகிறது. நிப்பா குடிசை என்னும் பெயர், பிலிப்பைன்சில் அமெரிக்கக் குடியேற்றவாதக் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது. நிப்பா என்பது அக்காலத்தில் அக்குடிசைகளின் கூரையை வேய்வதற்குப் பயன்பட்ட பொருளைக் குறித்தது. அதனாலேயே, அவ்வீடுகளுக்கு நிப்பா குடிசை என்னும் பெயர் ஏற்பட்டது.

இயல்புகள்

அவாயின் மாவுய்யில், இயாவோ பள்ளத்தாக்குப் பகுதியில் கெப்பானிவாய் பூங்காவில் உள்ள நிப்பா குடிசை.
தெற்குப் பிலிப்பைன்சின் பசிலானில் கடலில் அமைந்துள்ள தற்கால பாசாவு கால்வீடு.
கலிபோ வில் உள்ள கால் வீடு

இவ்வகை வீடுகளுக்கு இறுக்கமான வரைவிலக்கணம் இல்லாத போதிலும், இவற்றின், கட்டுமானப் பாணிகள் பிலிப்பைன்சுத் தீவுக்கூட்டம் முழுவதிலும் பல்வேறுபட்டுக் காணப்பட்டபோதிலும்,[4] பிலிப்பைன்சு தாழ்நிலப் பகுதிகளில் உள்ள ஒரே மாதிரியான சூழ்நிலைகள் நிப்பா குடிசைகளின் தனித்துவமான பல இயல்புகள் உருவாவதற்குக் காரணமாயின.

மூன்று படை அமைப்பு

தற்காலத்தில் உருவான சில விதிவிலக்குகளைத் தவிர்த்து பெரும்பாலான நிப்போ குடிசைகள் கால்களின் மீது உயர்த்திக் கட்டப்படுகின்றன. இதனால் வீட்டின் வாழ்வதற்கான இடங்களுக்கு ஏணி வழியாகவே ஏறிச் செல்லவேண்டும். இது, நிப்போ குடிசையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறது. நடுப்பகுதியில் அமைந்த உண்மையான வாழ்வதற்கான பகுதி, தகாலாக் மொழியில் சிலோங் என அழைக்கப்படும் நிலத்தோடு அமைந்த கீழ்ப்பகுதி, புபுங்கன் எனப்படும் கூரைப்பகுதி என்பனவே இம்மூன்றும் ஆகும்.

கூரை

நிப்போ குடிசைகளின் மரபுவழியான கூரை வடிவம், மிக உயரமானதும், சரிவு கூடியதும் ஆகும். இக்கூரை நீளமான தாழ்வாரங்களில் முடிவடையும்.[2] உயரமான கூரை வாழும் இடங்களுக்கு மேல் இடத்தை உருவாக்குவதால், வெப்பமான காற்று மேல்நோக்கிச் சென்று, வாழும் பகுதிகளில் வெப்பநிலையைக் குறைக்கிறது. இது, கோடையில் கூட நிப்போ குடிசைகளின் உட்பகுதி குளிர்மையாக இருக்க உதவுகிறது. கூரையின் சரிவு மழை நீர் விரைவாக வழிந்தோடக்கூடியதாக அமைந்துள்ளது. அதேவேளை நீளமான தாழ்வாரம், மழை நேரங்களில் மக்கள் வேட்டைச் சுற்றி நடப்பதற்குப் பாதுகாப்பான இடவசதியை ஏற்படுத்துகிறது.[2] பினட்டுபோ எரிமலை வெடிப்பின்போது சாம்பல் படிவினால் பல நவீன வீடுகளின் கூரைகளே உடைந்தபோது நிப்போ குடிசைகளின் கூரைகள் பாதிக்கப்படாமல் இருந்ததற்கு அவற்றின் சரிவே காரணமாகச் விளக்கப்படுகிறது.[2]

சிலோங்

நிப்பா குடிசை வன்மரத்தாலான கால்களில் உயர்த்திக் கட்டப்படுவதனால், நிலமட்டத்தில் உருவாகும் வெளியான இடம் சிலோங் என அழைக்கப்படுகிறது. தகாலாக் மொழியில் சிலோங் என்னும் சொல்லுக்கு "நிழல்" என்பது பொருள். மழை காலத்தில் இப்பகுதி இடைப்பகுதியாகச் செயற்பட்டு வெள்ளம் வாழும் இடத்தை அடையாமல் காக்கிறது. இப்பகுதி பொருள்களைச் சேமித்து வைக்கும் பகுதியாக மட்டும் அல்லாமல், சிலவேளைகளில் வீட்டு விலங்குகளை வளர்ப்பதற்கும் இவ்விடம் பயன்படுகிறது.[4] இப்பகுதியைச் சுற்றி ஒரு வேலி இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்.

வாழும் பகுதி

நிப்பா குடிசைகளின் வடிவமைப்பு, அதன் வாழும் பகுதியில் இயலுமளவு கூடிய காற்றோட்டத்தையும், இயற்கை ஒளியையும் பெறக்கூடிய வகையில் அமைந்துள்ளது. சிறிய நிப்பா குடிசைகளில் வாழும் பகுதியின் தளம் மூங்கில்களை இணைத்து உருவாக்கப்படுவதனால், அவற்றில் உள்ள இடைவெளிகளூடாக "சிலோங்" பகுதியில் இருக்கும் குளிர்ந்த வெளிக்காற்று வாழும் பகுதிக்குள் வரக்கூடியதாக உள்ளது. இவ்வாறான வீடுகளில், கெட்ட வாசனையை உருவாக்கக்கூடிய பொருட்களை "சிலோங்" பகுதியில் களஞ்சியப்படுத்துவது இல்லை. உட்கூரைகள் (ceiling) இல்லாத இதுபோன்ற வீடுகளில், வாழும் பகுதிகளின் தள மட்டத்தில் உருவாகும் சூடான வளி மேல்நோக்கிச் சென்று இதற்கென அமைக்கப்படும் செல்வழிகளூடாக வெளியேறும்.

சுவர்கள்

தற்கால நிப்பா குடிசையின் ஒரு அண்மைத் தோற்றம்

சுவர்கள் எப்போதும் அதிக எடையில்லாத மரம், மூங்கிற்கம்பு, "சவாலி" எனப்படும் மூங்கிற்பாய் போன்ற பொருட்களால் அமைக்கப்படுகின்றன. இச்சுவர்களும் அவற்றினூடாக ஓரளவு வெளிக்காற்றை உள்ளே வர விடுகின்றன.

நிப்பா குடிசைகளுக்குத் தனித்துவமான அவற்றின் கனசதுர வடிவம், சுவர்களை முன்னரே செய்து, குடிசையின் மூலைக் கால்களாக அமையும் மேல்நோக்கிச் செல்லும் கால் மரங்களில் பொருத்துவதை இலகுவாக்குகிறது. அடிப்படையில், நிப்பா குடிசைகள் அளவுக் கூறுகளைப் பொருத்திக் கட்டுவதனால் உருவாகின்றன. கால்கள் முதலில் நிறுத்தப்படுகின்றன. பின்னர் தளச் சட்டமும், அதன் பின் சுவர்ச் சட்டமும், இறுதியாகக் கூரையும் அமைக்கப்படுகின்றன.

சாளரங்கள்

கூடிய அளவு காற்றையும், இயற்கை ஒளியையும் உள்ளே விடுவதற்காக நிப்பா குடிசைகளில் பெரிய சாளரங்கள் அமைக்கப்படுகின்றன. மிகப்பழைய மரபுவழி நிப்பா குடிசைகள் நிழற்கூரைச் சாளரங்களைக் (awning window) கொண்டவை. மேல் நோக்கித் திறக்கப்படக்கூடிய சாளரத்தின் மூடற்படல், திறந்த நிலையில் மரச் சட்டங்களால் தாங்கப்படும்.[2] வழுக்குப்படல் சாளரங்களையும் பொதுவாகக் காணமுடியும். அண்மைக் காலங்களில் செலவு கூடிய சலூசிச் சாளரங்களும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

பெரிய குடிசைகளில், பெரிய சாளரங்களுக்குக் கீழே, கூடுதலாக, எசுப்பானிய மொழியில் வென்ட்டானிலாசு என அழைக்கப்படும் சிறிய சாளரங்களைக் காணலாம். இவை வெப்பமான காலங்களில் கூடுதலான காற்றை உள்ளே விடுவதற்காகத் திறக்கப்படக் கூடியவை.[2]

மேற்கோள்கள்

  1. Lee, Jonathan H. X.. Encyclopedia of Asian American folklore and folklife, Vol. 1. Santa Barbara, Calif.: ABC-CLIO, 2011. 369. ISBN 0313350663
  2. Caruncho, Eric S. (2012-05-15). "Green by Design: Sustainable Living through Filipino Architecture". Philippine Daily Inquirer (Makati, Philippines: Philippine Daily Inquirer, Inc.). http://lifestyle.inquirer.net/46495/green-by-design-sustainable-living-through-filipino-architecture. பார்த்த நாள்: 2013-10-16.
  3. Cruz, Rachelle (2013-08-23). "THE BAYANIHAN: Art Installation at Daniel Spectrum". The Philippine Reporter (Toronto, Ontario, Canada). http://philippinereporter.com/2013/08/23/young-artists-rediscover-ideology-behind-bahay-kubo/. பார்த்த நாள்: 2013-10-16.
  4. Alojado, Jennibeth Montejo. "From Nipa Hut to House of Stone". philippine-islands.ph. Alojado Publishing International. பார்த்த நாள் 2013-10-16.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.