நினைவுத் தபால்தலை

நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை என்பது ஏதாவதொரு இடத்தை, நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால்தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின்போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டுக் குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக விற்கப்படும்.

1888இல் நியூ சவுத் வேல்ஸினால் வெளியிடப்பட்ட உலகின் ஆரம்ப நினைவு அஞ்சல் தலைகளுள் ஒன்று

உலகின் முதலாவது ஞாபகார்த்த தபால்தலை என்ற பெருமைக்கு உரியனவாகப் பல தபால்தலைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1865 இல் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு 1866 இல் அவருடைய உருவம் பதித்து ஒரு தபால்தலை அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. எனினும் இது அவரின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 1876 இல் நூற்றாண்டுக் கண்காட்சியை ஒட்டி வெளியிடப்பட்ட தபால்தலையிடப்பட்ட கடித உறை, அது தபால்தலை என்ற வகையில் அல்லாமல் தபால் காகிதாதிகள் வகையிலேயே சேரும் என்று சொல்லப்படுவதால் அதையும் உலகின் முதலாவது தபால்தலை என்று கூற முடியாது, 1887 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் ஜுபிலி வெளியீடு ஒரு 50 ஆண்டு நிறைவு ஞாபகார்த்தத் தபால்தலையாகக் கொள்ளப்படலாம் எனினும், இத்தபால்தலையில் இது குறித்த பொறிப்பு எதுவும் இல்லை.

எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி ஞாபகார்த்த தபால்தலை என்று சொல்லக்கூடிய முதல் தபால்தலை, 1888 இல் நியூ சவுத் வேல்ஸினால், அதன் 100 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட தபால்தலையாகும். இந்நிகழ்வின்போது ஆறு வகையான தபால்தலைகள் வெளியிடப்பட்டன அனைத்திலும் "ONE HUNDRED YEARS" (நூறு ஆண்டுகள்) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 1891 இல் ஹாங்காங், ருமேனியா ஆகிய நாடுகளில் ஞாபகார்த்த தபால்தலைகள் வெளியிடப்பட்டன. 1892 இலும் 1893 இலும் பல அமெரிக்க நாடுகள், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாகத் தபால்தலைகளை வெளியிட்டன.

ஞாபகார்த்த தபால்தலைகள் பொதுவாகக் குறைந்த காலத்துக்கே விற்பனைக்கு விடப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப் பின் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்படும் இந்தத் தபால்தலைகள் ஆண்டு முடிவில் ஆண்டுப்பொதிகளாக விற்கப்படுகின்றன. ஞாபகார்த்த தபால்தலைகள் வெளியிடப்பட்ட ஆரம்பகாலங்களில் தபால்தலை சேகரிப்பாளர்களிடையே இதற்கு எதிர்ப்புக் காணப்பட்டதாகத் தெரிகிறது. ஆரம்பகாலத் தபால்தலை சேகரிப்பாளர்கள் உலகம் முழுதும் வெளியிடப்படும் முழுவதையும் சேகரிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். ஞாபகார்த்த தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர். ஒவ்வொரு நாட்டிலும் கூடிய எண்ணிக்கையில் தபால்தலைகள் வெளியிடப்பட்டதால் அவ்வளவு தபால்தலைகளையும் வாங்கிச் சேகரிப்பது செலவு கூடியதாகவும், கடினமானதாகவும் இருந்ததோடு, சில நாடுகள் சேகரிப்பாளர்களுக்காகவே தபால்தலைகளை தபால் சேவைத் தேவைகளுக்கு மேலதிகமாகவே ஏராளமாக வெளியிடத் தொடங்கின. பல நாடுகளில் வெளியிடப்பட்ட இத்தகைய தபால்தலைகள் சேகரிப்பாளர் மத்தியில் குறைவான மதிப்பையே பெற்றன.

எனினும் ஞாபகார்த்த தபால்தலைகளில் அறிமுகம், தபால்தலை சேகரிப்பில் புதிய அணுகுமுறைகள் உருவாகக் காரணமாகியது. விடயம்சார் தபால்தலை சேகரிப்புப் பிரபலமாகியது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.