நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவை

நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனத்துலக அவை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப்பெயரால் அறியப்படும் இந்த அவை, பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களைக் காப்பாண்மை (conservation) செய்வதையும், பாதுகாப்பதையும் (protection) நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. கோட்பாடுகள், வழிமுறைகள், அறிவியல் நுட்பங்கள் என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களைக் காப்பாண்மை செய்வதில், ஈடுபட்டுள்ள, அனைத்துலக மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனம் இதுவேயாகும். 1964 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், களங்களையும் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் வெனிஸ் பட்டயம் எனப் பரவலாக அறியப்படுகிறது. உலக மரபுக் களங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்ற பல்துறை அறிஞர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இது இவ்வமைப்பின் பணிகளில் பல்துறைப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக உள்ளது.

உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், காப்பாண்மை செய்வதிலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.