நாரந்தனை
நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள ஊர்காவற்றுறை தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஊர்காவற்றுறைத் தீவானது லைடன் தீவு என்ற பெயராலும் அறியப்படுகின்றது.
பெயர்க்காரணம்
நாரந்தனை என்பது நாரம்,தனை என்ற இரண்டு சொற்களால் ஆனதாகும்.நாரம்,நரந்தம்,நாரங்கம்,நாரத்தை என்பன தோடைமர வகைகளுள் ஒன்றாகும்.தனை,தானை என்பன இலங்கைத் தமிழ் வழக்காற்றில் இடத்தைக் குறிக்கும்.இது தமிழகத்தில் தானம் என்று வழங்கப்படுகின்றது.இதற்கு எடுத்துக்காட்டு தமிழகத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவாலயமான திருநெய்த்தானம் ஆகும்.ஸ்தான என்பது சமஸ்கிருதத்தில் நிலையைக் குறிப்பதாகும்.தான என்பது பாளியில் இடத்தைக் குறிப்பதாகும்.எனவே தனை,தானை என்பன இவற்றில் இருந்து மருவியிருக்கலாம்.
எனவே நாரந்தனை என்பது பண்டைய காலத்தில் நாரம் மரம் இருந்த நிலையை அடையாளமாகக் காட்டப் பயன்பட்டு காலப்போக்கில் அதனைச் சூழ்ந்து அமைந்த குடியிருப்புகளுக்கான பெயராக மாறி பின்னர் கிராமத்தின் பெயராக உருவாகியிருக்கின்றது எனக் கருதலாம்.
வரலாறு
தான்தோன்றி மனோன்மணி அம்மன் ஆலயம் இன்று அமைந்துள்ள இடத்தில் கிடைத்த சோழர் காலத்து சிலையும் நாணயங்களும் இந்த ஊர் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது பழமையானது என்பதைக் காட்டுகின்றன.நாரந்தனை என்ற பெயரானது சமஸ்கிருதச் சொல்லான ஸ்தான என்பதைவிட பாளி மொழிச் சொல்லான தான என்பதில் இருந்தே மருவியிருப்பதுபோன்று தென்படுவதால் பண்டைக் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம் என்று ஊகிப்பதற்கும் இடமிருக்கின்றது.எனவே தமிழர்களிடம் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த காலமான பக்திக் காலகட்டத்துக்கு முற்பட்ட காலத்திற்கு இப்பெயரின் பழமையானது இட்டுச்செல்கின்றது.முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படுமானால் தெளிவான ஆதாரங்கள் கிட்டக்கூடும்.
சமூகம்
நாரந்தனை நூறு விழுக்காடு தமிழ் மக்கள் வாழும் கிராமமாகும்.இந்த ஊர் விவசாயம்,மீன்பிடி,பனைசார் தொழில் போன்ற மரபான தொழில்களை அடிப்படையாகக்கொண்டதாகும்.சைவர்களும்,கத்தோலிக்கர்களும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர்.உள்நாட்டுப் போரினாலான இடப் பெயர்வுகளால் மக்கள் தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.ஆகஸ்ட் 22,1990 இல் காரைநகர் கடற்படை முகாமில் இருந்து ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்க் கோட்டையை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நாரந்தனையில் ஏறத்தாழ 1800 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன.தற்போது ஏறத்தாழ 1000 குடும்பங்கள் வாழ்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்
நாரந்தனையானது தீவகம் வடக்கு,ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்டதாகும். ஊர்காவற்றுறைப்பட்டினம்,பருத்தியடைப்பு,கரம்பன்,புளியங்கூடல்,சுருவில் போன்ற ஊர்காவற்றுறைத் தீவைச் சேர்ந்த பகுதிகளும் அனலை தீவு,எழுவை தீவு போன்ற தீவுகளும் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏனைய இடங்களாகும்.
நாரந்தனை வடக்கு,நாரந்தனை வடமேற்கு,நாரந்தனை,நாரந்தனை தெற்கு ஆகிய நான்கு கிராம மேலாளர் பிரிவுகளாக கிராமமானது நிர்வாக வசதிக்காகப் பகுக்கப்பட்டுள்ளது.
காலநிலையும்,வானிலையும்
புவிநடுக்கோட்டுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் பருவமழை வீழ்ச்சிக்குரிய காலநிலைக்குரியது.இந்தியப் பெருநிலப்பரப்புக்கு அண்மையில் அமைந்திருப்பதன் காரணமாக பொதுவாக இலங்கையின் வடபகுதியில் நிலவும் அதிகவெப்பநிலையே இங்கும் நிலவுகின்றது.ஆண்டுச் சராசரி வெப்பநிலை 28 °C இலிருந்து 30 °C வரையிலானதாகும்.
பெப்ரவரியில் இருந்து செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெம்மையானதும் வறட்சியானதுமான கால நிலையும் ஒக்டோபரில் இருந்து ஜனவரி வரை மிதமான குளிரும்,ஈரலிப்பானதுமான காலநிலையும் காணப்படுகின்றது.
நவம்பரில் இருந்து பெப்ரவரிக்கு இடையில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சியால் அதிக மழையும்,மே இலிருந்து ஆகஸ்ட்டுக்கு இடையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையால் சிறிதளவு மழையும் கிடைக்கின்றது.
வழிப்பாட்டிடங்கள்
- நாரந்தனை தான்தோன்றி அம்மன் கோயில்
- கர்ணன் தோட்டம் கந்தசாமி கோயில்
- தம்பட்டி முத்துமாரியம்மன் கோயில்
- புனித பேதுரு புனித பவுல் தேவாலயம்
- திரு இருதயநாதர் தேவாலயம்
- புனித லூர்து அன்னை தேவாலயம்
பாடசாலைகள்
- யா/நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, நாரந்தனை
- யா/நாரந்தனை வட கணேச வித்தியாலயம், நாரந்தனை
- யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. நாரந்தனை
துணை நூல்கள்
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.