நாற்பண்புகள்

நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண், பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.

ஆண்களுக்குரிய நாற்பண்புகள்

அறிவு

அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.

நிறை

நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.

ஓர்ப்பு

ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்

கடைப்பிடி

கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது.

பெண்களுக்குரிய நாற்பண்புகள்

பெண்களுக்குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். முற்போக்குச் சிந்தனைவாதிகளும் பெண்ணிலைச் சிந்தனையாளர்களும் நாற்பண்புகள் குறித்த விபரிப்புகளை அடக்குமுறையின் வடிவம் என மறுதலித்து வருகிறார்கள்.

அச்சம்

அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் மற்றும் அவப்பெயர் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும்.

மடம்

மடம் இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.

நாணம்

நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.

பயிர்ப்பு

கணவன் தவிர்த்த வேற்று ஆண்மகனின் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது. பயிர்ப்பு என்றால் அசுத்தம், குற்சிதம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து பொருள் கூறப்பட்டுள்ளது. குற்சிதம் என்றால் அசுத்தம் - அருவருப்பு என்று பொருள் மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப் பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே, இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பெண்ணிய மற்றும் பெரியாரியச் சிந்தைனையாளர்கள் இந்த விளக்கத்தை எதிர்க்கின்றனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.