நாகை ஸ்ரீராம்
நாகை ஸ்ரீராம் (பி. ஜூன் 19, 1980 ) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் தனது ஆரம்பகால வயலின் இசைப் பயிற்சியை தனது பாட்டி ஆர். கோமளவல்லியிடமிருந்து தனது 10 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். இவர் தற்போதும் தொடர்ந்து வயலின் இசைப்பயிற்சியை தனது மாமா - நாகை ஆர். முரளிதரனிடம் பெற்றுவருகிறார். அகில இந்திய வானொலி, இவரை தனது நிலையத்து A - தர கலைஞராக அங்கீகாரம் செய்துள்ளது. தூர்தர்சன் தொலைக்காட்சியும் இவரை உயர்வுநிலைக்கு அங்கீகாரம் செய்துள்ளது.
நாகை ஸ்ரீராம் தனது 12 ஆவது வயதில் ஒரு வயலின் கலைஞராகத் தனது இசைப் பயணத்தை புதுடில்லியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு பக்கவாத்தியமாக அவர் வயலின் வாசித்தார். நிகழ்காலத்தில் முன்னணி கருநாடக இசைப் பாடகர்களான டாக்டர். எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. உன்னிகிருஷ்ணன், டி. என். சேஷகோபாலன், டி. வீ. சங்கரநாராயணன், ஓ. எஸ். தியாகராஜன், கே. வி. நாராயணசாமி, எஸ். சௌம்யா, ஹைதராபாத் சகோதரர்கள், டாக்டர். என். ரமணி, சஞ்சய் சுப்ரமணியன், டி. எம். கிருஷ்ணா மற்றும் கர்நாட்டிகா சகோதரர்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்து வருகிறார்.