நா. கோவிந்தசாமி
நா. கோவிந்தசாமி (இறப்பு: மே 26, 1999, அகவை 52) சிங்கப்பூரைச் சேர்ந்த கணினி அறிஞரும் எழுத்தாளரும் ஆவார். முதன் முதலில் தமிழை இணையத்தில் ஏற்றி வைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர். "1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது."[1]

இணையப் பங்களிப்பு
நா. கோவிந்தசாமி தமிழ்நெட், தமிழ்ஃபிக்சு போன்ற கணினி எழுத்துருக்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் 16 பிட் ஒருங்குறித் திட்டத்தை மேம்பாட்டுக்காக உழைத்தார். இவரது சிங்கப்பூர் தமிழ் வெப் என்பது உலகளாவிய வலையில் வெளிவந்த உலகின் முதலாவது தமிழ் இணையப் பக்கம் ஆகும். 1999 பெப்ரவரியில் நடைபெற்ற தமிழ்நெட்'99 இணைய மாநாட்டில் "Towards a Total Internet Solution for the Tamil Language through Singapore Research" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசிக்கப்பட்டது.[2]
“ | 1997ம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார். அந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பல பிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர் ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன.[2] | ” |
இலக்கியப் பங்களிப்பு
கோவிந்தசாமி 1965 ஆம் ஆண்டு முதல் சிறுகதைகள் எழுதி வந்தவர். உள்ளொளியைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பும், வேள்வி என்ற புதினத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1977 ஆம் ஆண்டில் இலக்கியக் களம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். இவ்வமைப்பு மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை 1981 இல் வெளியிட்டது.[2]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- http://www.infitt.org/minmanjari/Dec2004/Essay_Albert.html
- "One Hundred Tamils of the 20th Century Naa Govindaswamy". Tamilnation.co. பார்த்த நாள் 4 சூன் 2014.