நல்லூர் சட்டநாதர் கோயில்

நல்லூர் சட்டநாதர் கோயில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. இதன் தோற்றம் சட்டநாதர் என்னும் ஒரு சித்தரின் சமாதியுடன் தொடர்புடையது என்று சிலர் கூறுகின்றனர். இச்சித்தர் 10, 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் குருவாவர். பாம்பாட்டிச் சித்தர் இந்த ஆலயம் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். எனினும், யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி நல்லூர் நகரை அமைத்தபோது அதற்குக் காவலாக அதன் வட திசைக்குச் சட்டநாதேசுவரர் கோயிலை அமைப்பித்ததாகக் கூறுகிறது. இதுவே இன்றைய சட்டநாதர் கோயில் என்பது பல வரலாற்றாளர்களது கருத்து. யாழ்ப்பாண இராச்சியக் காலத் தொடர்பு கொண்ட மந்திரி மனை, சங்கிலித் தோப்பு, பண்டாரக் குளம் ஆகியவற்றுக்கு மிக அண்மையில் இக் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

நல்லூர், சட்டநாதர் கோயிலின் முன்புறத் தோற்றம்

1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தமது நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் அவர்கள் இடித்து விட்டனர். அப்போது, சட்டநாதர் கோயிலும் அழிந்து போய்விட்டது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் முன்னைய கோயில் இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.

உசாத்துணை

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.