நராய்ல் மாவட்டம்

நராய்ல் மாவட்டம் (Narail District) (வங்காள: নড়াইল தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் குல்னா கோட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குல்னா நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் நராய்ல் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

நராய்ல் மாவட்டத்தின் வடக்கில் மகுரா மாவட்டம், தெற்கில் குல்னா மாவட்டம், கிழக்கில் பரித்பூர் மாவட்டம் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டம், மேற்கில் ஜெஸ்சூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. [1]

மாவட்ட நிர்வாகம்

967.99 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக நராய் சதர், காளியா மற்றும் லொககோரா என மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் மூன்று நகராட்சி மன்றங்களையும், 38 கிராம ஒன்றியக் குழுக்களையும், 406 வருவாய் கிராமங்களையும், 635 கிராமங்களையும் கொண்டுள்ளது.

இம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 7300 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0481 ஆகும். இம்மாவட்டம் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

நிலவியல்

இம்மாவட்டத்தில் வேளாண்மை நிலங்கள் 17,6504 ஏக்கர்களும், தரிசு நிலங்கள் 25,090 ஏக்கர்களும், காடுகள் 10 ஏக்கர்களும், ஆற்றுப் பகுதிகள் 8562 ஏக்கர் அளவிலும் உள்ளது.

பொருளாதாரம்

நராய்ல் மாவட்டத்தில் பயாரப், குமார், மதுமதி, சித்ரா, நவகங்கா, கஜ்லா முதலிய ஆறுகள் பாய்வதால், இம்மாவட்டம் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, சணல், தென்னை, வெற்றிலை, பாக்கு, நிலக்கடலை போன்ற பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.

தட்ப் வெப்பம்

நரய்ல் மாவட்டத்தின் அதிகபட்ச வெப்பம் 37.1 பாகை செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பம் 11.2 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 1467 மில்லி மீட்டராகும்.

மக்கள் தொகையியல்

967.99 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 7,21,668 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,53,527 ஆகவும், பெண்கள் 3,68,141 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 96 ஆண்களுக்கு பெண்கள் 100 வீதம் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.32% ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 746 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 61.3% ஆக உள்ளது.[3]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

கல்வி

வங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.