நப்பாலத்தனார்

நப்பாலத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்களாக இரண்டு பாடல்கள் உள்ளன. அவை நற்றிணை 52, 240 ஆகியவை.

நற்றிணை 52 சொல்லும் செய்தி

  • திணை - பாலை

தலைமகன் தன் நெஞ்சோடு பேசுகிறான். அவனது காதலி அதிரல் பூவையும், பாதிரிப் பூவையும் சேர்த்துக் கட்டி அவளது தலையில் சூடியுள்ளாளாம். அது மணக்க மணக்க அவன் அவளைத் தழுவுவதையே எண்ணி மகிழ்கிறானாம். அவனது நெஞ்சோ பொருள் தேடுவதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறதாம். எனவே அந்த நெஞ்சை அன்பு இல்லாத்து என்று வைகிறான்.

ஓரி கொடை

கடையெழு வள்ளல்களில் ஒருவனான ஓரி சிறந்த கொடை வள்ளல். அவனது கைவளம் முழுவதுமாகத் தானே தேடிப் பெறுவதானாலும் அந்தப் பெரும்பொருள் அவனுக்கு மிகவும் நொய்தானதாம். அவள் இன்பந்தான் அவனுக்குப் பெரிதாம்.

நற்றிணை 240 சொல்லும் செய்தி

  • திணை - பாலை

கடவுள் சிறியவர்

என் காதலிக்கு 'வை ஏர் வால் எயிறும், வாள் நுதலும் கடவுள் படைத்தார். அத்தனையும் எனக்குக் கொடுத்துவிட்டார். அவருக்கு அவளால் பயன் இல்லை. எனவே உலகு படைத்தோன் ஐது(நொய்து) ஆயினான்.

யானைக்குப் பத்தல் நீர்

கோடை காலத்தில் மக்கள் தண்ணீருக்காக உளியால் உடைத்து பத்தல் என்னும் கேணி தோண்டுவர். அதில் ஊறும் நீரை யானை பருகி மகிழும். அதுபோல நான் அவளைத் துய்த்து இன்புறுகிறேன் - என்கிறான் தலைவன்.

  • பத்தல் என்பது பாறையில் உடைத்த பள்ளம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.