நன்மாவிலங்கை

நன்மாவிலங்கை – இது சங்ககாலத்து ஓய்மானாட்டின் தலைநகர். நல்லியக்கோடன் என்னும் வள்ளல் இந்நாட்டு அரசன். சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் இவனது சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. பாடிய புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்.

ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில்லியாதன் என்னும் அரசர்களும் இவ்வூரிலிருந்துகொண்டு ஆண்ட சங்ககால அரசவள்ளல்கள்.

இலங்கை தமிழ்நாட்டின் தென்கிழக்கில் உள்ளது. அதே பெயர் கொண்ட ஊர் தமிழ்நாட்டில் இருந்தமையால் இவ்வூரை ‘நன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடவேண்டியதாயிற்று. சிறுபாணாற்றுப்படை இலங்கைத் தீவைத் ‘தொன்மாவிலங்கை’ எனக் குறிப்பிடுகிறது. இது இலங்கை என்னும் பெயர்க்கருவில் தோன்றியது. இலங்கையில் கருவுற்ற பெண் இங்கு வந்து பெற்ற குழந்தை பெயரால் இலங்கை என்னும் பெயர் இவ்வூருக்குத் தோன்றியிருக்கலாம். கருவூரிலிருந்து வந்தவரைக் கருவூரார் என்பது போன்றது இது. இவ்வூர் ஆற்றில் மிதந்துவந்த நாகம், அகில், சந்தனம் முதலான மரங்களைப் பற்றிக்கொண்டு மகளிர் ஆற்றுத்துறையில் நீராடுவார்களாம்.[1]

இந்த ஊர் பெருமாவிலங்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரை என்பது நீரில் விளையாடப்பட்ட சங்ககால விளையாட்டு. இவ்வூர் மகளிர் ஓரை விளையாடும்போது பன்றி உழுத சேற்றிலிருந்து ஆமை முட்டையையும், இனிக்கும் ஆம்பல் கிழங்கையும் எடுத்துக்கொண்டு செல்வார்களாம். [2]

மாவிலங்கை என்பது ஒருவகை மலர். இது மிகுதியாகப் பூத்திருந்த நாடு மாவிலங்கை எனப்பட்டதோ எனவும் என்னவேண்டுயுள்ளது.

மேற்கோள்

  1. நறுவீ நாகமும் அகிலும் ஆரமும் துறையாடு மகளிர்க்குத் தோள்புணை ஆகிய பொருபுனல் தரூஉம் போக்கறு மரபின் தொன்மாவிலங்கைக் கருவொடு பெயரிய நன்மாவிலங்கை மன்னர்
  2. புறநானூறு 176
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.