நக்கீர தேவ நாயனார்

நக்கீர தேவ நாயனார் என்பவர் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் ஆவர்.

பதினொன்றாம் திருமுறை

பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள்

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

சோமசுந்தரக் கடவுள்

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார்.

போற்றப்பெற்ற நாயன்மார்கள்

ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவர்கள்

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோர்

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

நக்கீரர் வரலாறு

இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன.

இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

ஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற் றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பெயர் விளக்கம்

நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல் . இப்பெயரை நல் கீரன் என்பதன் திரி பாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ் சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீரதேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடற்புராணத்தில்

பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் கூறப்படும் நக்கீரர் வரலாறே இன்றைய சமய உலகில் பெரு வழக்காயுள்ளது.

பாண்டிய மன்னன் அகப்பொருள் நூல் கிடைக்கவில்லையே என மனங்கவன்ற காலத்தில் திருஆலவாய் இறைவன் `அன்பின் ஐந்திணை` எனத் தொடங்கி அகப்பொருள் நூல் ஒன்றை எழுதி அவன்பால் சேர்ப்பித்து அம்மன்னன் மனக் கவலையைப் போக்கி யருளினார். அந்நூலைச் சங்கப்புலவர் அனைவரும் பாராட்டிப் போற்றினர். நக்கீரர் மட்டும் அந்நூலைக் குறைகூற இறைவன் தானே தமிழ்ப்புலவராய்த் தோன்றி நக்கீரரின் மன மருட்சியை நீக்கி அவருக்குத் தெளிவு ஏற்படுத்தி மறைந்தருளினார்.

சண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா? அல்லது இயல்பான கூந்தலின் மணமா என ஐயுற்று அவ்வையத்தை வெளிப்படுத்தாது புலவர்களை அழைப் பித்து `என் மனத்திடை எழுந்ததோர் ஐயத்தைத் தெளிவிப்பார்க்கு ஆயிரம் பொன்` என அறிவித்துப் பொற்கிழியைச் சங்கமண்டபத்தே தொங்கவிடச் செய்தான். பெரும் புலவர்கள் பலர் முயன்றும் அவ்வையத்தைப் போக்கிப் பொற்கிழியைப் பெற இயலவில்லை.

தருமிக்குத் தண்ணருள்

இஃது இங்ஙனமாக மதுரைத் திருக்கோயிலில் சிவபிரானை வழிபடும் பிரமசாரியாகிய தருமி என்பவன் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெருமானிடம் தன் வறிய நிலையை எடுத் துரைத்துத் தனக்குப் பொருள் அருளுமாறு வேண்டிக் கொண்டான். ஆலவாய் இறைவன் அவனது வேண்டுகோளை நிறைவேற்றக் கருதி, `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் செய்யுளை இயற்றித் தந்து அதனைச் சங்கப் புலவரிடம் காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்க என்றும், இப்பாடலை யாரேனும் குறைகூறின் நாமே வந்து விளக்கம் கூறி உதவுவோம் எனவும் உரைத்தருளினார்.சொற்போர் அப்பாடலைப் பெற்றுக்கொண்ட தருமி சங்கப் புலவர்களிடம் காட்டினான். அவர்கள் அதனைப் படித்தறிந்து ஒன்றும் கூறாதிருத் தலைக் கண்டு அதனை வாங்கிச் சென்று பாண்டிய மன்னனிடம் காட்டினான். மன்னன் தன் மனத்தெழுந்த ஐயத்தை அகற்றிய அச் செய்யுளைப் படித்துப் பாராட்டிப் பொற்கிழியை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நக்கீரர் இப்பாடல் பொருட் குற்றம் உடையது எனத் தருமியைத் தடுத்து நிறுத்தி இப்பாடலைப் பாடி அனுப்பியவரையே அழைத்து வருமாறு கூறித் தருமியை அனுப்பியருளினார். இதனைத் தெரிவிக்கக் கேட்ட ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தானே தமிழ்ப் புலவராய் வெளிப்பட்டுத் தருமியுடன் சங்க மண்டபத்தை அடைந்து `இப்பாடலில் குற்றம் கண்டவன் யாவன்?` என வினவியருளினார். நக்கீரர் நானே குற்றம் கூறியவன் எனக் கூறக்கேட்ட இறைவன்;

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியை
ஆராயும் உள்ளத் தவன் (தனிப்பாடல்)

எனக் கேட்ட அளவில் நக்கீரர் அதற்கு மறுமொழியாக;

சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை (தனிப்பாடல்)

என்ற செய்யுளால் விடையிறுத்தார்.

தாம்பாடிய பாடலில் என்ன குற்றம் கண்டீர் என இறைவர் கேட்க நக்கீரர் `மகளிர் கூந்தல் மலர் முதலியவற்றாலும் நறுமணம் ஊட்டுவதாலும் செயற்கையான மணம் பெறுவதேயன்றி இயற்கை யான மணம் உடையதன்று ஆதலின் இச்செய்யுள் பொருட் குற்றம் உடையது என்றார். பெருமான் உத்தம சாதிப் பெண்டிர், தேவமாதர், உமையம்மை முதலானோர் கூந்தலுக்கும் அப்படித்தானோ? எனக் கேட்டார். நக்கீரர் தான் கூறியதையே சாதிக்கும் முறையில் அவையும் அப்படியே என்றார். சிவபிரான் தன்னை அடையாளம் காட்டும் குறிப்பில் தன் சடைமுடியை வெளிப்படுத்தினார். நக்கீரர் தமிழ் வல்ல என்னைச் சடைமுடி காட்டி வெருட்ட வேண்டாம் என்றார். பெருமான் சினந்து தன் நெற்றி விழியைத் திறந்தார். அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொறுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார். இறைவன் மறைந்தருளினார்.

தருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான். நக்கீரர் தன் பிழை உணர்ந்து வருந்தி கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியால் இறைவனைப் போற்ற அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவரைக் கரையேற்றி அகத்தியரைக் கொண்டு அவருக்குத் தமிழின் நுட்பங்களை உணர்த்தச் செய்தருளினார். நக்கீரர் கோபப்பிரசாதம், பெருந்தேவபாணி திருஎழு கூற்றிருக்கை முதலிய பிரபந்தங்களால் சிவபிரானைப் போற்றிப் பரவினார்.

அகப்பொருள் உரை

இறையனார் அருளிய அகப்பொருள் நூலுக்கு நல்லுரை தருமாறு அவ்விறைவரையே புலவர்கள் வேண்ட பெருமான் உருத்திரசன்மர் மூலம் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோர் உரைகளே சிறந்தவை என உணர்த்துமாறு செய்தருளினார்.

இவை நக்கீரர் பற்றித் திருவிளையாடற் புராணத்துட் கூறப்படும் வரலாறாகும்.

கல்லாடம்

பொற்றாமரைக் குளத்திலுருந்து நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடியதைக் கல்லாடம்,

அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்

பாவியிற் கேட்ட காவியங் களத்தினன்

எனக் குறிப்பிடுகிறது. இறைவன் `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் பாடல் பாடி தருமிக்குப் பொற்கிழி பெற்றளித்ததை,

பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்

கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்

பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி

எனக் குறிப்பிடுகிறது. அப்பர் சுவாமிகள்,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி

நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்காண்

எனப் போற்றியருள்கிறார்.

சீகாளத்திப் புராணத்தில்

நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாறு சீகாளத்திப் புராணத்திலும் திருப்பரங்கிரிப் புராணத்திலும் சில வேறுபாடுகளுடன் காணப்படுகிறது.

நக்கீரர் கயிலையை காணும் பெருவிருப்போடு யாத்திரை மேற் கொண்டு வழியிடையே தடாகம் ஒன்றைக் கண்டு நீர் பருகி, ஆலமர நிழல் ஒன்றில் இளைப்பாறியிருந்தார். அவ்வேளையில் அம்மரத்தின் இலையொன்று நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமாக கீழே உதிர்ந்து விழுந்தது. நீரில் படிந்த இலையின் பாகம் மீனாகவும், நிலத்தில் கிடந்த இலையின் பாகம் பறவையாகவும் உருமாறி ஒன்றை ஒன்று இழுத் தலைக் கண்டு அதிசயித்துத் தன்னை மறந்தார் நக்கீரர். அவ்வேளை யில் பூதம் ஒன்று அவரைப் பற்றிச் சென்று சிறையில் அடைத்தது. அச்சிறையில் அதற்கு முன்னர் தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். நக்கீரரைச் சிறையில் அடைத்ததனால் சிறை வாசிகள் ஆயிரம் ஆயினர். பூதம் ஆயிரம் பேரையும் ஒருங்கே உண்ணும் கருத்தில் நீராடச் சென்றது. அங்கிருந்தோர் நக்கீரர் வாராதி ருந்தால் இன்னும் சில நாள் தாங்கள் உயிரோடிருந்திருக்கலாம் அவர் வரவால் இறக்க நேரிட்டு விட்டதே எனக் கூறக் கேட்டுத் தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடிப் போற்றினார். முருகப்பெருமான் அவருக்குக் காட்சியளித்து அனைவரையும் சிறையிலிருந்து விடுவித்ததுடன் நக்கீரரைத் `திருக்காளத்தி தரிசனம் செய்தால் போதும் அதுவே திருக் கயிலையைத் தரிசித்த பலனைத் தரும்` எனக்கூறி அருள் புரிந்தார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடி இறையருள் பெற்றார்.

இவ்வரலாறு திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாகத் திருப் பரங்கிரிப் புராணம் கூறுகிறது. சிவப்பிரகாச சுவாமிகள் முருகப் பெருமான் நக்கீரனைப் பொய்கை ஒன்றில் மூழ்கச் செய்து திருக் காளத்தியில் எழச் செய்து கயிலைக் காட்சியை அவருக்குக் காட்டியருளினார் எனக் கூறுகிறார்.

நக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது.

காலம்

கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

கல்வெட்டுச் சான்று

நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.

கதை வழக்கிற்குக் காரணம்

நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்

சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே - அதனால்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே

என்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர்.

இவற்றையும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.