ந. பாலேஸ்வரி

பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் (7 டிசம்பர் 1929 - 27 பெப்ரவரி 2014) ஈழத்து எழுத்தாளர். இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.

ந. பாலேஸ்வரி
பிறப்புதிசம்பர் 7, 1929(1929-12-07)
திருகோணமலை
இறப்புபெப்ரவரி 27, 2014(2014-02-27) (அகவை 84)
கொழும்பு
பெற்றோர்த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை

வாழ்க்கைக் குறிப்பு

திருகோணமலை மாவட்டம் 'மனையாவழி' கிராமத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிய’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாவார்.

முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை ஸ்ரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஸ்ரீஸ்கந்தவரோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.

தொழில்

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்கல்லூரியில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையான இவர் பெருந்தெரு விக்நேசுவரா மகா வித்தியாலயத்தின் முந்நாள் ஆசிரியரும் பிரதி அதிபருமாவார். ஆசிரிய சேவையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வுபெற்றார். திருகோணமலை மாவட்ட பெண்கள் நலன்புரிச்சங்கத்தின் முக்கிய செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார்.

இலக்கிய ஈடுபாடு

தான் கற்கும் காலத்திலிருந்து வாசிப்புத்துறையில் ஈடுபாடு மிக்கவராக இருந்த இவரின் கன்னிக்கதை ‘வாழ்வளித்த தெய்வம்’ எனும் தலைப்பில் தினகரன் பத்திரிகையில் 1957ம் ஆண்டு பிரசுரமானது. அன்றிலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், முப்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இத்தகைய ஆக்கங்கள் இலங்கையிலுள்ள தேசியப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ள அதே நேரத்தில் கல்கி, குங்குமம், உமா, தமிழ்ப்பாவை, கவிதை உறவு போன்ற இந்திய சஞ்சிகைகளிலும் ‘உலகம்’(இத்தாலி) ‘ஈழநாடு’(பாரிஸ்) ‘தமிழ்மலர்’(மலேசியா) ஆகிய அனைத்துலக சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

நாவல்கள்

பாலேஸ்வரி பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.

விபரம் வருமாறு

  • ‘சுடர்விளக்கு’ - 1966 (திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடு)
  • ‘பூஜைக்கு வந்த மலர்’ - 1971 (வீரகேசரி வெளியீடு)
  • ‘உறவுக்கப்பால்’ – 1975 (வீரகேசரி வெளியீடு)
  • ‘கோவும் கோயிலும்’ - 1990 ஜனவரி (நரசி வெளியீடு)
  • ‘உள்ளக்கோயில்’ - 1983 நவம்பர் (வீரகேசரி வெளியீடு) -
  • ‘உள்ளத்தினுள்ளே’-1 990 ஏப்ரல் (மட்டக்களப்பு செபஸ்டியர் அச்சகம் வெளியீடு)
  • ‘பிராயச்சித்தம்’ - 1984 ஜூலை (ரஜனி பப்ளிகேஸன்)
  • ‘மாது என்னை மன்னித்துவிடு’ - 1993 ஜனவரி (ஸ்ரீபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு)
  • ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ – 1993 ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு, இந்தியா)
  • ‘அகிலா உனக்காக’ - 1993 (மகாராஜ் அச்சகம், இந்தியா)
  • ‘தத்தைவிடு தூது’ – 1992 ஜூலை (மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்)
  • ‘நினைவு நீங்காதது’ - 2003 (மணிமேகலைப்பிரசுரம், இந்தியா)

சிறுகதை தொகுதிகள்

இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

  • சுமைதாங்கி – 1973 (நரசு வெளியீடு)
  • தெய்வம் பேசுவதில்லை – 2000 (காந்தளகம் வெளியீடு இந்தியா)

ஆய்வு

பாலேஸ்வரியின் இலக்கிய ஆக்கங்களை பல்கலைக்கழக மட்டத்தில் இதுவரை மூன்று மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

  • பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை இளங் கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் திருகோணமலையைச் சேர்ந்த செல்வி அப்துல்ரஹீம் சர்மிலா என்பவர் ‘பாலேஸ்வரியின் நாவல்களில் பெண்கள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
  • சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் விசேட துறை சிறப்புக்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 1999- 2000 கல்வியாண்டில் செல்வி சிவகௌரி சிவராசா என்பவர் ‘பாலேஸ்வரியின் தமிழ் நாவல்கள பற்றிய ஓர்ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.
  • தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விசேட துறை இளங்கலைமாணி பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் பொருட்டு 2001- 2002 கல்வியாண்டில் செல்வி கச்சி முஹம்மது சில்மியா என்பவர் ‘ந.பாலேஸ்வரியின் சமூக சிறுகதைகள் ஒரு நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரை சமர்பித்துள்ளார்.

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்.

  • ‘தமிழ் மணி’ (1992) - இந்து சமய கலாசார அமைச்சு
  • ‘சிறுகதை சிற்பி’ (1996) - மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம்
  • 'ஆளுனர் விருது' (1999-10-17) - வடக்கு கிழக்கு மாகாணக்கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு
  • கலாபூசண விருது (2002-12-26) அரச விருது.

இவை தவிர பல்வேறு பட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் பல்வேறு விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.