தொல்கபிலர்

தொல்கபிலர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கப் பாடல்களில் நூற்றுக்குச் சுமார் 11 விழுக்காடு பாடல்களைப் பாடிய புலவர் கபிலர். இந்தக் கபிலரின் காலத்துக்கு முன் வாழ்ந்தவர் இந்தக் கபிலர் ஆதலால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்தவர்கள் இவரைத் தொல்கபிலர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொல்கபிலர் பாடிய பாடல்கள் 6 உள்ளன. அவை அகநானூறு 282, குறுந்தொகை 14, நற்றிணை 114, 276, 328, 399 ஆகியவை.

தொல்கபிலர் சொல்லும் செய்திகள்

அகநானூறு 282 பாடலில்

  • திணை - குறிஞ்சி
  • பரிசம் தந்து திருமணம் செய்துகொள்ளும் பாங்கு இந்தப் பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

மூவேறு தாரம்

கானவன் அம்பு எய்து யானையை வீழ்த்திக் கொண்டுவந்த அதன் தந்தம். மண்ணைக் கிண்டிப் பெற்ற திருமணி. நீரில் முகந்து பெற்ற முத்து. இவை மூன்று வேறு தாரங்கள்.

  • தாரம் = கொண்டுவரப்படும் செல்வம்

இந்த மூன்று செல்வ வளத்துடன் தலைவன் வருகிறான். சந்தனக்கட்டைச் செல்வமும் கொண்டுவருகிறான். நறை என்னும் நாரால் கட்டிய வேங்கைப்பூ மாலை அணிந்துகொண்டு வருகிறான்.

திருமணப் பரிசம் - தலைவன் கொண்டுவந்தது

மேலே சொன்ன பொருள்கள் தலைவன் தலைவிக்குக் கொண்டுவந்த பரிசப் பொருள்கள். (பரிசம் = பரிசு)

திருமணப் பரிசம் - தலைவியின் தந்தை தருவது

பலாப் பழத்தைத் தலைவனுக்குக் கொடுத்துத் தலைவியின் தந்தை தலைவனையும் அவனது உறவினர்களையும் வரவேற்கிறான்.

ஊரார்

அலர் தூற்றிய ஊர்மக்கள் இப்போது தலைவனையும் தலைவியையும் சேர்த்துப் பேசி வாழ்த்துகின்றனர்.

தாய்

தாயும் தலைவனை அவன்தான் என்மகளின் கணவன் என்று பெருமிதம் தோன்றப் பேசுகிறாள்.

தலைவி செயல்

தோளை மேலே உயர்த்தி கை கூப்பி வருக என அனைவரையும் வரவேற்கிறாள்.

இல்லுறை தெய்வம் என்னும் குலதெய்வத்துக்குப் பொங்கலிட்டுப் படைக்கிறாள்.

குறுந்தொகை 14 பாடலில்

  • திணை - குறிஞ்சி

தலைவி தனக்குக் கிடைக்காவிட்டால் ஊரார் பலரும் அறியும்வண்ணம் மடல் ஏறுவேன் என்று தலைவன் கூறுகிறான்.

இவளுக்கும் எனக்கும் உள்ள நட்பை ஊரார் அறியும்படி மடல் மாவில் ஏறி இவள் வழும் ஊருக்கே வருவேன். அப்போது இந்த நல்லவளின் கணவன் இவன் என்று ஊரார் பேசட்டும். அதைக் கேட்டு நான் கொஞ்சம் நாணம் கொள்வேன். அது எனக்கு மகிழ்வு தரும். - தலைவன் இப்படிப் பேசுகிறான்.

நற்றிணை 114 பாடலில்

  • திணை - குறிஞ்சி

ஊர் மயங்கிக் கிடக்கும். யானையின் வெள்ளைத் தந்தத்தை வீட்டின் அறையில் வைப்பர். பச்சைப் புலால்கறியைக் கிள்ளிக் கிள்ளி அவர்கள் நகம் தேய்ந்திருக்கும்.

இந்த வேளையில் தலைவன் தலைவியை அடைய வந்திருக்கிறான். அவன் மழை பொழிந்த பெரு வெள்ளத்தில் நீந்தி வந்த வழியை எண்ணிப் பார்க்கிறேன். படமெடுத்தாடும் பாம்பைக் கொல்லும் இடிமுழக்கத்தை எண்ணுகிறேன். ஏறு பெண்யானை வருந்தும்படி ஆண்யானையைக் கொல்லும் அவன் வரும் காட்டு வழியை எண்ணுகிறேன். இவற்றை எண்ணும்போது கலங்குகிறேன்.

இவை தோழி தலைவியிடம் சொல்லும் ஆறு பார்த்து உற்ற அச்சக் கிளவி.

நற்றிணை 276 பாடலில்

  • திணை - குறிஞ்சி

தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியோடு இருந்துவிட்டுச் சென்றுவிடுகிறான். இரவில் எம் ஊர் வந்து எம் ஊர் மக்களைப் பார் என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

வலிமை மிக்க ஆண்மானை வேட்டையாட நாயோடு பகலில் வருகிறாய். எம் போன்ற மகளிரை வயவர் மகளிர் என்று எண்ணுகிறாய். உண்மையில் நாங்கள் வயவர் மகளிர் அல்லேம். குன்றில் வாழும் குறவர் மகளிர். நாங்கள் கொடிச்சியர்.

எங்கள் ஊர் கல்மலை ஓரமாக உள்ளது. அங்கு இரவில் கானவன் சேண் என்னும் பரண்மேல் ஏறித் தினைப்புனம் காப்பான். அந்தப் பரண் மேல் ஏறிக் காட்டு மயில் கூடு கட்டிக்கொண்டு வாழும். அதுதான் எங்கள் ஊர்.

அங்கு வேங்கை மரம் இருக்கும் முற்றம் ஒன்று உண்டு. மூங்கில் குழாயில் விளைந்த தேறல் என்னும் கள்ளைப் பருகிய மகளிர் குரவையாடுவர். (நீ வந்தால் அவர்களோடு சேர்ந்து நீயும் குரவை ஆடலாம்.)

நற்றிணை 328 பாடலில்

  • திணை - குறிஞ்சி

தலைவன் திருமணம் சொந்துகொள்வான். காத்திரு. - என்று தோழி தலைவியை வற்புறுத்துகிறாள்.

கிழங்கு கீழ்நிலத்தில் விளைகிறது. தேன் மேல்நிலத்தில் இருக்கிறது. தினை பரந்து விளைகிறது. தினைப்புனம் காக்கும் நீயும் அவனும் பிறப்பால் ஒத்தவர்கள்.

மழை பொழியட்டும். தெருவில் விறலி ஆடட்டும். அவளுக்காக எள்ளில் பிழிந்த எண்ணெய் வழங்குவோம். உன் திருமணத்தில் இது நடக்கும். - தோழி இவ்வாறு தலைவிக்கு நம்பிக்கை ஊட்டுகிறாள்.

நற்றிணை 399 பாடலில்

  • திணை - குறிஞ்சி

தலைவன் தனக்கு நலம் புரிவான் என்னும் அசையாத நம்பிக்கையைத் தலைவி வெளிப்படுத்தும் பாடல் இது.

மலையில் சிவந்துகிடக்கும் காந்தள் வண்டு உண்ண மலரும். காட்டுப் பன்றி நிலத்தைக் கிண்டிய புழுதியில் திருமணி ஒளிரும். அந்த ஒளியில் பெண்யானை கன்று ஈனும். ஆண்யானை அதனைச் சுற்றிக் காவல் காக்கும். இப்படிப்பட்ட நாட்டினை உடையவன் அவன். எனவே அவன் தனக்குப் பாதுகாவலனாக இருப்பான் என்று தலைவி நம்புகிறாள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.