தொண்டையர்

தெற்கில் புதுச்சேரி முதல் வடக்கில் ஆந்திர மாநிலம் சித்தூர், குண்டூர் வரையில் பரவிக் கிடந்த பண்டைய நாடு தொண்டைநாடு.

தொண்டைநாட்டு மக்கள் தொண்டையர் எனப்பட்டனர்.

வேறு வகையில் சொன்னால் தென்பெண்ணை ஆற்றுக்கும், வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்டுக் கிடந்த நிலப்பகுதி எனலாம்.

பெயர் விளக்கம்

  • “தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்கிறார் 12ஆம் நூற்றாண்டு ஔவையார். இந்த நிலை சங்ககாலத்திலும் இருந்திருக்க வேண்டும். தொண்டு புரிவோர் தொண்டையர். தொண்டு புரிவோர் சான்றோர். தொண்டைநாடு என்னும் பெயர் இந்த வகையில் தோன்றியிருக்கலாம்.
  • ‘ஆதொண்டை’ என்னும் கொடி ஒன்று உண்டு. ஆடி அம்மாவாசை விரதம் இருப்போர் இக்காலத்தில் ஆதொண்டங்காயை உண்டுகொண்டு விரதம் இருப்பர். இந்த ஆதொண்டை என்னும் சொல் முதலெழுத்து குறைந்து தொண்டு என வழங்கலாயிற்று எனலாம். (தாமரை என்னும் சொல் முதலெழுத்து குறைந்து ‘மரை’ என வழங்கப்படுதல் காண்க) இந்தத் தொண்டைக்கொடி மிகுதியாகப் படர்ந்திருந்த நாடு தொண்டைநாடு எனப்பட்டது எனக் கொள்வாரும் உண்டு.
  • நாகத் தீவிலிருந்து தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு மிதவையில் கடல் வழியே வந்த குழந்தை அரசனாகித் தோற்றுவித்த நாடு தொண்டைநாடு என்னும் ஊகக் கரையும் உண்டு.

சங்கப்பாடல் செய்திகள்

வழைமரம்
தொண்டைநாட்டு மலையடுக்கங்களில் வழை மரம் அதிகம். (வெண்ணிறத்தில் பூக்கும் புன்னை மரத்தை வழை என்பர்) [1]
வேங்கடத்தில்
வேங்கடமலைப் பகுதியிலும் தொண்டையர் ஆட்சி நடைபெற்றது. [2]
கொண்டி உண்டி
தொண்டைமான் இளந்திரையனின் முன்னோர் போரிட்டுப் பெற்ற செலவத்தால் உண்டு வாழ்ந்தனராம். [3]

அடிக்குறிப்பு

  1. வண்தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கம் - குறுந்தொகை 260
  2. தொண்டையர் --- வேங்கடம் - அகம் 213
  3. கொண்டி உண்டித் தொண்டையோர் மருக - பெரும்பாணாற்றுப்படை 454
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.