தொண்டி ஆமூர்ச் சாத்தனார்

தொண்டி ஆமூர்ச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 169 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.[1]

தொண்டி என்னும் ஊர் ஒரு துறைமுகப் பட்டினம். இந்தத் தொண்டியை அடுத்திருந்த ஆமூரில் வாழந்தவர் இந்தப் புலவர்.

அகநானூறு 169 சொல்லும் செய்தி

பொருள் தேடச் செல்லும் தலைவன் இடைச் சுரத்தில் தன் காதலியை நினைத்துப் பார்க்கிறான்.

காதலன் செல்லும் வழி

சுரத்தில் மரம் கரிந்துபோயிருக்கும். நிலத்தின் பயன்கள் வாடிப்போயிருக்கும். வெயில் சுட்டெரிக்கும். எங்கும் அழல் என்னும் தணல் பறப்பது போல் இருக்கும்.

புலி யானையைத் தொலைத்து உண்ட மிச்சில் கிடக்கும். அதன் துண்டங்களை வெட்டி உமணர் கடலில் விளைவித்த அமிழ்து என்னும் உப்பிலிட்டு ஞெலிகோலில் கோத்துக் காய வைத்துக் கொள்வர். அதனைச் சோற்று உலையில் போட்டுச் சமைத்து உண்பர்.

காதலி பற்றிய கருத்தோவியம்

அவளது மேனி பசலை பாய்ந்திருக்கும். பொழுது இறங்கும் மாலை நேரத்தில் தன் நெற்றியில் விரலை வைத்துக்கொண்டு என்னை நினைப்பாள். கயல்மீன் நீரை உமிழ்வது போல அவளது கண் கண்ணீரைக் கொட்டும். அவளது தோள் வாடிப்போயிருக்கும்.

அரிய உவமை

கண்ணில் அழும் நீர் வரும் காட்சி கயல்மீன் நீரை உமிழ்வது போல் இருக்கும்.

அருஞ்சொல்

அமிழ்து = உமணர் கடற்கழிநில் விளைவித்த உப்பு
ஞெலிகோல் = உப்புக் கண்டம் போட்டுக் கறித் துண்டுகளை மாட்டி வைக்கும் கோல்
அலங்கு கதிர் = வருத்திச் சுட்டெரிக்கும் கதிரவன்
செல்லல் = துன்பம்
அளியள் = இரங்கத் தக்கவள்

மேற்கோள்கள்

  1. தொண்டி ஆமூர்ச் சாத்தனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.