தொடை (யாப்பிலக்கணம்)

தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

தொல்காப்பிய விளக்கம்

தொல்காப்பியர் தொடைகள் 13708 வகைப்படும் எனக் குறிப்பிடுகிறார். [1] [2]

தொடை வகைகள்

தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை,

  1. மோனைத் தொடை
  2. இயைபுத் தொடை
  3. எதுகைத் தொடை
  4. முரண் தொடை
  5. அளபெடைத் தொடை
  6. அந்தாதித் தொடை
  7. இரட்டைத் தொடை
  8. செந்தொடை

என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது.

தொடை விகற்பங்கள்

மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு.

  1. அடி
  2. இணை
  3. பொழிப்பு
  4. ஒரூஉ
  5. கூழை
  6. மேற்கதுவாய்
  7. கீழ்க்கதுவாய்
  8. முற்று

மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது.

அடிக்குறிப்பு

  1. 'மெய் பெறு மரபின் தொடை வகைதாமே
    ஐ-ஈர் ஆயிரத்து ஆறு-ஐஞ்ஞூற்றொடு
    தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று
    ஒன்பஃது' என்ப-உணர்ந்திசினோரே (தொல்காப்பியம் 3-406, செய்யுளியல்)
  2. 13708 தொடைகள்

வெளிப்பார்வை

தொடைவகை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.