தைந்நீராடல்

தைந்நீராடல் சங்ககால நீர் விளையாட்டுகளில் ஒன்று. தை மாதம் [1] தமிழ்நாட்டுப் பருவகாலத்தில் முன்பனிக்காலம். [2] இக்காலத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும், குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல் எனக் குறிப்பிடுகின்றன.

புத்தர் குளத்தில் நீராடும் காட்சி

சங்க இலக்கியங்களில் தைந்நீராடல்

தை நீர் தண்மை உடையது எனப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் ‘தண்மை’ பனி போன்ற குளுமையை உணர்த்தாது. தழுவும் தலைவனுக்குத் தலைவியின் உடல் குதுகுதுப்பாய் இருப்பது போன்ற ‘தண்மை’ [3]

பாரியின் பறம்பு மலையில் இருந்த சுனைநீரின் பனிக்கால இன்பம் பெரிதும் போற்றப்பட்டது.[4]

  • மகளிர் தன் விளையாட்டுத் தோழிமாருடன் தை மாதத்தில் குளத்துக்குச் சென்று நீராடுவர்.[5]
  • ஐந்து வகையான பூ மணங்களை ஒவ்வொன்றாக அடுத்தடுத்துக் கூந்தலில் பூசிக்கொண்டு நீராடுவர்.[6]
  • தவக்கோலம் பூண்டு நீராடுதல் உண்டு.[7]
  • பொய்தல் விளையாடும் தோழியரை வீடுவீடாகச் சென்று பாட்டுப்பாடி அழைத்துக்கொண்டு சென்று நீராடுவர். நீராடிப் பெற்ற பயனைப் பலர்க்கும் பகிர்ந்தளிப்பர்.[8]
  • சிறுமுத்தன் வழிபாடு நிகழும்.[9]

மார்கழி நீராடல்

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் இயற்றிய திருப்பாவை என்னும் வைணவ நூலும், மாணிக்க வாசகர் இயற்றிய திருவெம்பாவை என்னும் சைவ நூலும் மார்கழி நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்.

  • திருப்பாவையில் கோவிந்தன் பறை தரவேண்டும் என வேண்டி மகளிர் நீராடி வழிபடுகின்றனர். சங்ககாலத்துத் தைந்நீராடல் சிறுமுத்தனைப் பேணி நடைபெறுகிறது. முத்தாலம்மன் தெய்வ வழிபாடு இக்காலத்தில் உண்டு. முத்தாலம்மன் பெண்தெய்வம். சிறுமுத்தன் ஆண்தெய்வம்.
  • வீடு வாடாகச் சென்று தோழிமாரை அழைத்துக்கொண்டு செல்லுதல் தைந்நீராடல், மார்கழி நீராடல் ஆகிய இருவகை விளையாட்டுகளிலும் காணப்படுகின்றன. *தைந்நீராடலில் காணப்படும் பொய்தல் விளையாட்டு மார்கழி நீராடலில் காணப்படவில்லை.
  • தைந்நீராடலில் சிறுசோறு ஆக்கி விளையாடுகின்றனர். சிறுசோறு என்பது விளையாட்டுச் சோறு. சிறு என்னும் சொல் விளையாட்டை உணர்த்தும். [10] மார்கழிநீர் ஆடும் மகளிர் நெய்ப்பொங்கல் சமைத்து உண்டு மகிழ்கின்றனர்.

அடிக்குறிப்பு

  1. சனவரி 15 முதல் பிப்பிரவரி 15
  2. மார்கழி, தை, முன்பனிப் பருவம்.
  3. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
    தீ யாண்டு பெற்றாள் இவள். (திருக்குறள் 1104)
  4. பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
    தைஇத் திங்கள் தண்ணிய தரினும்,
    வெய்ய உவர்க்கும் என்றனிர் (குறந்தொகை 196)
  5. இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
    தைஇத் திங்கள் தண் கயம் படியும்
    பெருந் தோட் குறுமகள் (நற்றிணை 80)
  6. நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
    தைஇத் தண் கயம் போல, (ஐங்குறுநூறு 84)
  7. வை எயிற்றவர் நாப்பண், வகை அணிப் பொலிந்து, நீ
    தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? (கலித்தொகை 59)
  8. பொய்தல மகளையாய், பிறர் மனைப் பாடி, நீ
    எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ? (கலித்தொகை 59)
  9. சிறு முத்தனைப் பேணி, சிறு சோறு மடுத்து, நீ
    நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ? (கலித்தொகை 59)
  10. வங்க வரிப்பாறை சிறுபாடு முனையின் (நற்றிணை 341)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.