தேவகுலத்தார்

தேவகுலத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் குலம் பற்றியது. இவரது இயற்பெயரைச் சொல்லாமல் இவரைக் குலப்பெயரால் குறிப்பிட்டு மக்கள் இவரைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. அது குறுந்தொகை நூலில் 3 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.[1]

குறுந்தொகை 3 பாடல் சொல்லும் செய்தி

தலைவன் தலைவிக்காக வெளியில் காத்திருக்கிறான். அவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையவேண்டும் என்று தோழி நினைக்கிறாள். அதற்காகத் தோழி தலைவன் தலைவியோடு கொண்டிருக்கும் உறவைப் பழிப்பது போலப் பேசுகிறாள். இதனைத் தலைவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தலைவனுக்கும் தனக்கும் இடையிலுள்ள நட்பு உயர்ந்தது என்று தலைவன் கேட்குபடி சொல்கிறாள்.

குறிஞ்சிப் பூவில் தேன் எடுத்து உயர்ந்த பாறையின் மேல் பகுதியில் பெருந்தேனீ தேன் கூட்டைக் கட்டும். அப்படிக் கூடுகட்டும் மலைநாட்டுக்குத் தலைவன் என் தலைவன்.

அவனோடு எனக்கு உள்ள நட்பு நிலவுலகைக் காட்டிலும் பரந்துகிடக்கும் அகலம் கொண்டது. வானத்தைக் காட்டிலும் ஓங்கி உயர்ந்தது. கடல் நீரைக் காட்டிலும் ஆழமானது. எனவே எங்களது நட்பைக் கொச்சைப்படுத்திப் பேசாதே - என்கிறாள் தலைவி.

மேற்கோள்கள்

  1. தேவகுலத்தார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.