தேய்புரிப் பழங்கயிற்றினார்

தேய்புரிப் பழங்கயிற்றினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை நூலில் 284 எண்ணுள்ள பாடலாக உள்ளது.[1]

இந்தப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. எட்டுத்தொகையைத் தொகுத்தவர் இவரது பாடலில் காணப்படும் 'தேய்புரிப் பழங்கயிறு' என்னும் அரிய உவமைத் தொடரைக் கொண்டு இவருக்குத் தேய்புரிப் பழங்கயிற்றினார் என்னும் பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி

தலைவன் பொருள் தேடச் சென்றுள்ளான். பொருள் தேடும் பணி முற்றிலுமாக நிறைவேறவில்லை. இந்த நிலையில் தனக்குள் சொல்லிக்கொள்கிறான். தலைவி அவனது உள்ளத்தைப் பிணிகொண்டவள். பொருள் தேடும் காலத்தில் அவன் தன் நெஞ்சை அவளிடம் செல்லாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. அவளிடம் தன் நெஞ்சைப் பாய விட்டுவிட்டால் பொருள் தேடும் பணி முற்றுப் பெறாது. அத்துடன் துன்பமும் வந்து சேரும். சோம்பலை உண்டாக்கி நன்மக்களிடம் இழிவையும் உண்டாக்கும்.

தன் காதலியை நினைப்பதா, அல்லது அவளை மறந்து பொருளை நினைப்பதா என்று அவன் மனம் ஊசலாடுகிறது.

யானை கயிற்றில் கட்டப்பட்டுள்ளது. அந்தக் கயிற்றின் புரி தேய்ந்துபோயிருக்கிறது. யானை இழுக்கிறது. அந்தக் கயிறு தாங்குமா? தெரியவில்லை.

அவன் நெஞ்சம் யானை. தலைவி யானையைக் கட்டியிருக்கும் தூண். அவனது உடம்பு யானையைத் தூணில் கட்டியிருக்கும் கயிறு. அவளையும் பொருளையும் மாறி மாறி எண்ணி எண்ணித் தேய்ந்து போன அவனது நினைவு மோதும் உடல் என்ன ஆகுமோ? - இதுதான் தலைவன் கவலை.

மேற்கோள்கள்

  1. தேய்புரிப் பழங்கயிற்றியனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.