தேனீ வளர்ப்பு

மனிதர்கள் தேனீக்களின் சமூகத்தை, செயற்கையாக தயாரிக்கப்படும் கூடுகளில் வளர்த்து, அவற்றைப் பராமரிக்கும் செயற்பாட்டையே தேனீ வளர்ப்பு என்று குறிப்பிடுகிறோம். விவசாயிகள், தமது கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பைக் கையாளலாம்.

Beekeeping, tacuinum sanitatis casanatensis (14ஆம் நூற்றாண்டு)
8000 ஆண்டுகளுக்கு முன்பு தேன் எடுப்பவர் மரத்திலிருந்து தேனெடுக்கும் குகை ஓவியம, இடம்: வலேனிக, ஸ்பெயின்.[1]

கூட்டில் வளர்க்கப்படும் தேனீக்கள், தாமாகவே வெளியே சென்று, மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். கூட்டில் வளர்க்காமலே தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் நீண்ட காலமாக உண்டு. தேனின் மருத்துவ அனுகூலங்கள், மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளியீட்டுப் பொருட்கள் ஆகும்.

இராணித் தேனீ

இது உருவத்தில் பெரியது. தேனீக்கள் கூட்டத்திற்குத் தலைவி. இதற்கு முட்டையிடுதலே பணி. இந்த இராணித் தேனீ அடையின் கீழ்புறம் கட்டப்படும் சிற்றறைகளில் வளர்க்கப்படும். இராணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுவிற்குத் தொடர்ந்து 16 நாட்கள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசையை உணவாகக் கொடுத்தால் அவை இராணித் தேனீக்களாக வளர்கின்றன.

ஆண் தேனீ

இது கூட்டின் சூட்டைப் பராமரித்தல், இராணித் தேனீயைக் கருவுறச் செய்தல் போன்ற முக்கியப் பணிகளை செய்கிறது. இவை அதிக அளவில் ரீங்காரமிடும். அளவில் பெரிய அறுங்கோண அறைகளில் இடப்படும் முட்டைகளிலிருந்து பொரிக்கும் புழுக்கள் முதல் 3 நாட்கள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி என்னும் அரசப்பசை உணவும் கடைசி 4 நாட்கள் மகரந்த உணவும் கொடுக்கப்பட்டு 24 நாட்களில் முழு வளர்ச்சி அடையும். இதன் ஆயுட்காலம் 60 நாட்கள்.

பணித் தேனீ

பணித் தேனீக்கள் முழு வளர்ச்சி பெறாத தேனீக்கள். இவைகளால் சினைப் பைகள் வளர்ச்சி பெறாததால் இவை முட்டையிடும் தகுதியடைவதில்லை. பணித் தேனீக்கள் அளவில் சிறிய அறைகளில் இடப்படும் முட்டைகளிலிருந்து உருவாகின்றன. முதல் ஒரு நாள் அரசப்பசை எனும் இராயல் ஜெல்லியும், இறுதியில் 3 நாட்கள் மகரந்த உணவும் கொடுக்கப்பட்டு 21 நாட்களில் வளர்கின்றன. இதன் ஆயுட்காலம் 42 நாட்கள். இவைகள்தான் அடைகளைக் கூட்டுதல், பராமரித்தல், தேன் இருக்குமிடம் ஆறுதல், தேன் சேகரித்தல் அவைகளை அடைகளில் பதனம் செய்தல், புழுக்களுக்கு உணவு கொடுத்தல், கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டினைப் பாதுகாத்தல் போன்ற பல பணிகளைச் செய்கின்றன. இவைகளுக்கு தேன் சேகரிக்கவும், மெழுகைச் சுரக்கவும், அரசப்பசையைச் சுரக்கவும், மகரந்தத்தினை எடுத்து வர, பொருட்களைப் பற்றி வர என பல பணிகளுக்கான உறுப்புகள் உள்ளன.

இனப் பாகுபாடு

தேனீ சமுதாயத்தில் இனப்பாகுபாடு பணி பங்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

ஆண் தேனீ கருவுற்ற முட்டைகளிலிருந்து பெண் தேனீக்களையும், கருவுறாத முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்களையும் உண்டாக்குகின்றது. அரசப்பசையை மட்டும் உணவாகப் பெறும், தனியே வளர்க்கப்படும் பெண் தேனீ, இராணித் தேனீயாக மாறுகிறது. குறைந்த அளவு அரசப்பசையைக் கொடுத்து வளர்க்கப்படும் தேனீக்கள் முறையே ஆண், பெண் தேனீக்களாக மாறுகின்றன. மற்ற பெண் தேனீக்கள் இராணித் தேனீயின் தாடைப் பகுதியில் சுரக்கப்படும் ஒரு சுரப்பிப் பொருள் உணவாகக் கொடுக்கப்படுவதால் மலட்டுத்தன்மை அடைந்து பணித் தேனீக்களாக மாறுகின்றன.

குணங்கள்

தேன் கூட்டின் மணம் கூட்டிற்குக் கூடு மாறுபடுகிறது. இதனால் ஒரு கூட்டில் உள்ள தேனீக்கள் மற்றொரு கூட்டில் நுழைவது இல்லை. தேனீ கொட்டும் போது ஏற்படும் விஷத்துடன் கூடிய ஒரு வேதிப்பொருள் மற்றைய தேனீக்களை எதிரியைத் தாக்கத் தூண்டுகின்றன. தேனீக்களின் சங்கேத மொழியாக நடனமொழி ஒன்று உள்ளது. இதன் மூலம் தேன் கிடைக்கும் தூரம், திசை, உணவின் தனமை போன்றவற்றைத் தெரிவிக்கின்றன.

தேனீ வளர்ப்புப் பெட்டிகள்

இந்தியத் தேனீக்கள் 7 சட்டங்கள் கொண்ட நியூட்டன் பெட்டியிலும், 8 சட்டங்கள் கொண்ட இந்திய தரக்கட்டுப்பாட்டுப் பெட்டியிலும் வளர்க்கப்படுகின்றன. இத்தாலியத் தேனீக்கள் 10 சட்டங்கள் கொண்ட லாங்ஸ்ட்ராத் பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

பயிற்சி

தேனீ வளர்ப்பிற்கு சில அரசு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பயிற்சி அளிக்கின்றன. தேனீ வளர்ப்பதற்கு ஒரு நாள் பயிற்சியே போதுமானது. இதன் தொழில்நுட்பங்கள், விற்பனை போன்றவற்றிற்கு சிறிது கூடுதல் காலம் தேவைப்படும்.

தேனீ வளர்ப்புக்கு ஏற்ற இடங்கள்

தேனீ வளர்ப்புக்கு

  • போக்குவரத்து அதிகமில்லாத இடமாக இருத்தல் நல்லது.
  • பள்ளி,கல்லூரி மற்றும் அதிகக் கூட்டம் கூடும் இடங்கள்
  • புகை மிகுதியாக வரும் இடம்
  • மருந்துப் பொருட்களின் வாசனை உள்ள இடங்கள்

போன்றவை ஏற்றதல்ல. இவை இல்லாத நிழலான இடங்களில் வளர்க்கலாம். தேனீ வளர்ப்புப் பெட்டிகளை எறும்பு, பூச்சிகள் ஏறாத இடங்களாக சிறிது உயரத்தில் வைக்க வேண்டும்.

தேனீக் கூட்டங்கள் பெறுதல்

இயற்கையாக காடுகளிலும், பொந்துகளிலும், இடுக்குகளிலும் இருப்பவைகளைப் பிடித்தும் அல்லது தேனீ வளர்த்து வருபவர்களிடம் பெற்றும் தேனீக்களைக் கூட்டமாகப் பெற்றும் வளர்க்கலாம். தேனீக்கள் இடம் மாற்றம் செய்வதில் இரவு நேரங்களையேப் பயன்படுத்த வேண்டும்.

தேன் எடுத்தல்

தேனீ வளர்ப்புப் பெட்டிகளில் தினமும் ஈக்கள் வந்து செல்வதைக் கவனிக்க வேண்டும். அவைகளில் தேன் சேர்ந்து உள்ளதைக் கவனித்து அடைகள் அனைத்தும் அல்லது 80 சதவிகிதம் மூடிய பின்பு தேன் எடுக்க வேண்டும். தேன், அறைகளில் பதனமாகும் முன்னர் எடுத்தால் அத்தேன் விரைவில் கெட்டு விடும். அடைகளில் உள்ள அடைப்புகளை அதற்கான உள்ள கத்திகளைக் கொண்டு எடுத்துவிட்டு தேன் எடுக்கும் இயந்திரத்தினைக் கொண்டு சுழற்றுவதன் மூலம் தேனை எடுக்கலாம். தேன் பூச்சிகளை மயக்கநிலை அடைய புகையை அதிக அளவில் உபயோகிக்கக் கூடாது.

பாதுகாப்பு

தேன் பெட்டிகளை மிகுந்த பாதுகாப்புடன் வைக்க வேண்டும்,.

  • வனம், மலைப்பகுதிகளில் தேனீ வளர்ப்பவர்கள் கரடியிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.
  • எறும்புகள், பூச்சிகள் தேனீ வளர்ப்புப் பெட்டிகளுக்கு வந்து விடாமல் பெட்டியைச் சுற்றிலும் பூச்சி மருந்துகளைத் தடவி வைக்க வேண்டும்.
  • தேன் கிடைக்காத காலங்களில் சர்க்கரையைக் காய்ச்சி சிரட்டைகளில் ஊற்றிப் பெட்டியினுள் வைக்க வேண்டும்.(இது குறித்து தகுந்த வல்லுனர்களிடம் பயிற்சி பெறுதல் நல்லது)

தேனீ வளர்ப்பின் பயன்கள்

  • தேன் கிடைக்கிறது.
  • கூடுகளிலுள்ள அடைகளை உருக்கி தேன் மெழுகாக சேர்க்கலாம்.
  • தேன் பெட்டியின் வாயிலில் மகரந்தப் பொறியை (Polon Catch Divice) வைத்து மகரந்தம் எடுக்கலாம். ஒரு பெட்டிக்கு ஆண்டு ஒன்றுக்கு 300 முதல் 500 கிராம் வரை கிடைக்கும்.
  • அரசப்பசை எனும் இராயல் ஜெல்லி 500 கிராம் வரை கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள்

வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்களாவன

  • தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்.
  • குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இலகு.
  • தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களூடாகவே கையாளப்படக் கூடியதாக இருக்கும்.
  • தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 20 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.

தேனீ வளர்ப்பிற்கான மாதிரி திட்ட அறிக்கை

தேனீ வளர்ப்பிற்கு செய்யப்படும் முதலீடு, அதனால் கிடைக்கும் வருவாய் குறித்த சிறு மாதிரி திட்ட விபர அறிக்கை இந்திய ரூபாயில் இங்கு தரப்பட்டுள்ளது.

முதலீடு

  • தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 10 எண்ணம் X 2000 வீதம் = 20,000
  • 1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 2000
  • முதலீட்டுச் செலவு = 22,000

வருமானம்

தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 20 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 200 கிலோ கிடைக்கும்.

  • விற்பனை 200 கிலோ X 100 ரூபாய் = 20,000

மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 10 பெட்டிக்கு மொத்தம் 20 கிலோ கிடைக்கும்.

  • விற்பனை 20 கிலோ X 100 ரூபாய் = 2,000

புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்

  • 1 காலனிக்கு ரூபாய் 500 வீதம் 10 X 4 X 500 = 20,000
  • முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000

நிகர வருமானம்

  • முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 42,000
  • முதலீட்டுச் செலவு = 22,000
  • முதலாம் ஆண்டு நிகர வருமானம் = 20,000

தேனீக் கூட்டிலிருந்து தேனை அறுவடை செய்யும் படங்கள்

இதையும் பார்க்க

தேனீ

மேற்கோள்கள்

  1. Traynor, Kirsten. "Ancient Cave Painting Man of Bicorp" (Web article). MD Bee. பார்த்த நாள் 2008-03-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.