தேசியப் பாடசாலைகள் (இலங்கை)

இலங்கையில் தேசியப் பாடசாலை (national school, சிங்களம்: ජාතික පාසල) எனப்படுபவை இலங்கை அரசின் கல்வியமைச்சின் கீழுள்ள, நடுவண் அரசுக்குட்பட்ட பாடசாலையாகும். தேசிய பாடசாலைகளில் இரண்டாம் நிலைக் கல்வியே பெரும்பாலும் போதிக்கப்படுகின்றது. ஆயினும், சிறுபான்மையாக முதற்தரக் கல்வியும் சில பாடசாலைகளில் போதிக்கப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டிலேயே இந்த தேசிய பாடசாலைக் கொள்கை நடைமுறைக்கு வந்தது. ஆரம்பக் கட்டமாக நாடாளாவிய ரீதியில் 18 பாடசாலைகள் இத்திட்டத்திற்குட்பட்டது.

வரலாறு

1987 ஆம் ஆண்டு மாகாண சபைகளின் அதிகாரப் பரவாலாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாகவே பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாக மாற்றப்பட்டன. ஆயினும் இதற்கு முன்னரேயே (1985) ஆம் ஆண்டு நடுவண் அரசாங்கம் இதற்கான முன் ஆயத்தங்களைச் செய்திருந்தது. இதில் 18 பிரபலமான 18 பாடசாலைகள் இதற்கென கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டன. அவையாவன:

  1. பாடசாலை மாணாக்கர் தொகை 1000 இலும் கூடுதலாக இருக்க வேண்டும்.
  2. கலை, வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளை உடைத்தாய் இருக்க வேண்டும்.
  3. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) ப் பெறுபேறு, பல்கலைக் கழக அனுமதிக்காகவேனும் இருத்தல் வேண்டும்.
  4. மாணாக்கருக்கேற்றாற் போல கட்டிடம், தளபாடம் மற்றும் ஏனைய வளங்களும் போதியாய் இருத்தல் வேண்டும்.
  5. கடந்த மூன்றாண்டுகளில் பாடசாலை அபிவிருத்திக்காக தூரநோக்குடன் கூடிய பாடசாலை அபிவிருத்திச் சங்கமொன்று மற்றும் பழைய மாணாக்கர் சங்கமொன்று இருத்தல்.
  6. பொதுவாக தேர்வுசெய்யப்படும் பாடசாலை அப்பகுதியில் பேர் பெற்றதாய் இருத்தல் வேண்டும்.

இவ்வாறான தகைமைகளை உடைய பாடசாலைகளே முதற்கட்டமாக தேசிய பாடசாலை எனப் பெயர் சூட்டப்பட்டன. கொழும்பு மற்றும் பிரபல நகரங்களிலுள்ள பாடசாலைகள் இதில் உள்வாங்கப்பட்டன.ஐந்து ஆண்டுகளின் பின்னர் இதில் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் நிறையப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் எனப் பெயர் மாற்றம் அடைந்தன. சிற்சிலவற்றுக்கே முழுத் தகைமையும் இருந்த போதிலும் அரசியல் செல்வாக்கினால் நாடெங்கிலும் இவ்வாறான பெயர் மாற்றப் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.

1990 ஆம் ஆண்டு ஏதேனும் ஒரு பாடசாலை தேசிய பாடசாலையாக உயர்த்தப்படுவதற்கு அன்றேல் தேசிய பாடசாலையொன்றைத் தொடர்ந்து நடாத்துதற்குக் கீழ்வரும் தகுதிகளை உடைத்தாயிருக்க வேண்டும்.

1. தேசிய பாடசாலையாவதற்குக் குறைந்தளவு மாணாக்கர் தொகை (2000) இரண்டாயிரமோ அன்றேல் அதற்கு மேற்பட்ட தொகையோ இருக்க வேண்டும். அத்தொகையில் ஆரம்பப் பிரிவில் (தரம் 1-6) மாணாக்கர் தொகை குறைந்தளவு ஆயிரம் (1000) ஆகவேணும் இருக்க வேண்டும்.

2. வகுப்பொன்று அரச மாணாக்கர் வரவுப் பதிவேட்டில் 30 மாணாக்கர்களையேனும் உள்வாங்கியிருக்க வேண்டும். அதில் சாதாரண வரவு 30 இனை அடைந்திருக்க வேண்டும்.

3. மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு விஞ்ஞானப் பிரிவில் 100 மாணாக்கர்களோ அதற்கு மேற்பட்டோ இருக்க வேண்டும். ஏனைய பிரதேசங்களில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணாக்கர் கல்வி கற்க வேண்டும்.

4. பாடசாலையில், தொழிநுட்பப் பாடங்களில் பாடத்திட்டத்திற்குட்பட்ட பாடங்கள் நான்கேனும் கற்பிப்பதற்கான வசதியிருக்க வேண்டும். (விவசாய விஞ்ஞானம், மரவேலை, வர்த்தகமும் கணக்கியலும், மோட்டார் இலத்திரனியல் உட்பட்ட பாடத்திட்டத்திற்குட்பட்ட பாடங்களில் நான்கையேனும் கற்பித்தல்)

5. பாடசாலையில் உயர்தர வகுப்பு மாணாக்கருக்கும், சாதாரண தர வகுப்பு மாணாக்கருக்கும் போதியளவிலான விஞ்ஞான ஆய்வுகூட வசதியிருத்தல் வேண்டும்.

6. பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்குட்பட்ட ஏனைய பாடசாலைகளிலும் வரவேற்புப் பெற்ற பாடசாலையாக இருத்தல் வேண்டும். (இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.)

6.1 தற்போதுள்ள நிலையில் பாடசாலையின் ஒழுக்கம்

6.2 பெற்றோரின் பங்களிப்பும் வளங்களைப் பயன்படுத்தும் தன்மை.

6.3 பாடங்களில் உள்ளார்ந்த மற்றும் புறக்கிருத்தியச் செயற்பாடுகளின் எண்ணிக்கை

6.4 கடந்த மூன்றாண்டுகளில் க.பொ.த. (உ.த)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கரில், ஒவ்வோராண்டும், தோற்றிய பாடங்களில் 40 சதவீதம் பெற்றிருத்தல். அல்லது கூடுதலானோர் பல்கலைக் கழக நுழைவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமை பெற்றிருத்தல்.

6.5 கடந்த மூன்றாண்டுகளில் சமூக அபிவிருத்திக்காக ஆற்றிய பங்களிப்பு. (எ.கா. – வீடமைப்பு, சிறிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல், பெற்றோர் பாதுகாவலர் போன்று பங்களித்தல், சமூகத் திட்டங்களுடன் கூடிய செயற்பாடுகள்)

6.6 பிரதேசத்தின் புகோள அமைப்பு விரிந்துகொடுக்கும் தன்மையுடையதாய் இருத்தல் ஃ பாடசாலையின் சுற்றளவு போதுமானதாக இருத்தல்.

6.7 பிரதேசத்தின் சனத்தொகைக்கேற்ப பாடசாலையை மேலும் விரிவாக்குவதற்கு முடியுமாயிருத்தல்.

7. கடந்த மூன்றாண்டுகளில் பாடசாலை அபிவிருத்திக்காக தூரநோக்குடன் கூடிய பாடசாலை அபிவிருத்திச் சங்கமொன்று மற்றும் பழைய மாணாக்கர் சங்கமொன்று இருத்தல். இவ்விடயத்தில் கீழ்வருவன கவனத்திற் கொள்ளப்படும்.

  • நடாத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை
  • வரவு
  • செயற்பாடுகள்
  • பண பலம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.