துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்

துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 286 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.[1]

புலவர் பெயரிலுள்ள அடைமொழி

'மா' என்பது நில அளவைக் குறிக்கும் ஒரு அறவைச்சொல்.

மா அளவை

காவிரி பாயும் தஞ்சைப் பகுதியில் நிலப் பரப்பளவைக் குறிக்கும் வகையில் இக்காலத்திலும் இந்த 'மா' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி

3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

பொருநராற்றுப்படை

வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு கிழவோயே

என்று கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் வாழ்த்துகிறார்.

பாலம்

மா பரப்பளவுள்ள நிலம். அது ஆற்றுத் துறைக்காக ஒதுக்கப்பட்ட குறு நிலம். அங்கே ஒரு பாலம். அது அந்த மா நிலத்தையும், ஆற்றுத் துறையையும் இணைத்துக்கொண்டிருந்தது.இந்தப் பாலத்தின் வழியே மா நிலத்துக்கும் வரலாம். ஆற்றுத் துறைக்கும் செல்லலாம். எனவே இது 'துறைக் குறு மாவிற் பாலம்' ஆயிற்று.

பாடல் தரும் கருத்தில் அந்த அடைமொழி அமைந்துள்ள சிறப்பு

தலைவன் பொருள் தேடச் செல்கிறான். பொருள் எதற்காக?

'நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்'

அவன் பொருள் தேடச் செல்கிறான். தன் மனைவி வளமுடன் வாழவேண்டும். அத்துடன் தன் நண்பர்களும் செல்வ வளம் பெருகி வாழவேண்டும். தலைவன் பொருள் ஈட்டுவதன் நோக்கம் இதுதான்.

இவை பாடலில் கூறப்படும் செய்தி.

அடைமொழியும் பாடற் செய்தியும்

அடைமொழியிலுள்ள பாலம் நிலத்தையும் துறையையும் இணைக்கிறது.

தலைவன் தேடிவரும் பொருள் மனைவாழ்க்கையையும் நண்பர் வாழ்க்கையையும் நலம் பெறச் செய்கிறது.

இப்படித் துறைக்குறு மாவிற் பாலத்தை - பொருள் என்னும் பாலமாகக் காட்டியதால் கொற்றனார் தம் பாடலில் அமைத்துத் தந்துள்ள கருத்துக்குப் பொருத்தமான அடைமொழியைத் தன் பெயருக்கு முன்னர் பெற்றுள்ளார்.

கொற்றனார் என்னும் பெயருள்ள பல புலவர்களில் இவரை வேறுபடுத்திக் காட்ட இந்த அடைமொழி இவருக்குத் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.