துருக்கிய மக்கள்

துருக்கிய மக்கள் அல்லது துருக்கர் என்போர், ஒரு துர்க்கிக் இனக்குழுவினரும் நாட்டினமும் ஆவர். இவர்களை அனத்தோலியத் துருக்கியர் எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் பெரும்பாலும் தற்காலத் துருக்கியில் வாழ்கின்றனர். அதிக அளவில் பேசப்படும் துர்க்கிக் மொழியான துருக்கிய மொழியைப் பேசுகின்றனர். துருக்கியின் மிகப் பெரிய இனக்குழுவாக இருக்கும் இவர்கள், துர்க்கிக் மொழிகளைப் பேசுவோரில் பெரும்பான்மையாகவும் உள்ளனர். முன்னைய ஓட்டோமான் பேரரசின் கீழிருந்த சில பகுதிகளில் இவர்கள் இன்னும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அத்துடன், தற்காலப் புலப்பெயர்வுகளினூடாகவும் துருக்கிய மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர்.

11 ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கர், செல்யுக் துருக்கரின் நிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம், அனத்தோலிய வடிநிலத்தில் குடியேறினர். இதன் பின்னர் கிரேக்கக் கிறித்தவப் பகுதியாக இருந்த இப்பகுதி துருக்கிய முசுலிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது.[1] அதன் பின்னர், பல நூற்றாண்டுகளூடாக பால்கனின் பெரும்பகுதி, காக்கேசியப் பகுதி, ஈரான் தவிர்ந்த மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் கைப்பற்றிய துருக்கியர் மேம்பட்ட தரைப்படை, கடற்படைகளுடன் ஓட்டோமான் பேரரசை நிறுவினர். இப்பேரரசு முதலாம் உலகப் போர் வரை நிலைத்திருந்தது. இப்போரில், கூட்டுப் படைகளிடம் தோல்வியடைந்த ஓட்டோமான் பேரசு, பின்னர் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வெற்றிகரமாக முடிவடைந்த துருக்கிய விடுதலைப் போரைத் தொடர்ந்து, போரை நடத்திய துருக்கிய தேசிய இயக்கம், முன்னர் கூட்டுப்படைகளிடம் இழந்த பெரும்பாலான துருக்கியின் பகுதிகளை மீட்டது. இவ்வியக்கம், 1922 நவம்பர் 1 ஆம் தேதி ஓட்டோமான் சுல்தானகத்தை அகற்றிவிட்டு, 1923 அக்டோபர் 29 இல் "துருக்கிக் குடியரசை" நிறுவியது. அல்லா ஓட்டோமான்களும் முசுலிம்களும் அல்ல, எல்லா ஓட்டோமான் முசுலிம்களும் துருக்கரும் அல்ல. ஆனால் 1923 அளவில் புதிய துருக்கிக் குடியரசின் எல்லைகளுக்குள் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் துருக்கர் என அடையாளப்படுத்தப்பட்டனர்.

துருக்கி அரசியல் சட்டத்தின் 66 ஆவது விதி, "துருக்கர்" என்பவர் "குடியுரிமைப் பிணைப்பின் ஊடாகத் துருக்கி நாட்டுடன் இணைந்துள்ள ஒருவர்" என வரையறுக்கின்றது. இதனால், "துருக்கர்" என்னும் சட்டச் சொல்லின் பயன்பாடு, அச்சொல்லின் இனம் சார்ந்த வரைவிலக்கணத்தில் இருந்து வேறுபடுகின்றது.[2][3] எனினும், துருக்கி நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் துருக்க இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 70 - 75 வீதத்தினர் ஆக உள்ளனர்.[4] துருக்கியப் பரம்பரையியல் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில், துருக்கியர் என அடையாளம் காணப்பட்டவர்களில் குறைந்தது 2 மில்லியன் மக்கள் உண்மையில் ஆர்மேனிய இனத்தவர். இவர்களிற் பலர் ஆர்மேனிய இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்கள்.[5][6][5]

சொற்பிறப்பும் இன அடையாளமும்

"துருக்கியர்" (Turk) என்னும் இனப்பெயர் முதலில், முதல் சித்திய அரசனான தார்கிட்டாசு என்பவனைப் பற்றிய ஏரோடோட்டசுவின் (கிமு 484-425) குறிப்பில் காணப்படுகின்றது.[7] மேலும், கிபி முதலாம் நூற்றாண்டில் பொம்போனியசு மேலா, அசோவ் கடலுக்கு வடக்கில் உள்ள காடுகளில் காணப்படும் "துர்க்கயே" (Turcae) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மூத்த பிளினி, அதே பகுதியில் வாழும் மக்களில் "டைர்கயே" (Tyrcae) என்பவர்களைப் பட்டியலிட்டுள்ளார்.[7] ஆனால், துருக்கியர் குறித்த தெளிவான முதல் குறிப்பு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன மூலங்களில் இருந்து கிடைக்கிறது. இம்மூலங்களில், "துருக்கியர்" என்பது, "துஜுவே" (சீனம்: ; வேட்-கில்சு: T’u-chüe) எனக் காணப்படுகின்றது. இது கொக்துருக்கரைக் குறிக்கின்றது.[8][9] "துருக்கர்" என்னும் சொல் துருக்கிய மக்களைக் குறித்தாலும், இது பரந்த துர்க்கிக் மொழிகளைப் பேசும் மக்களையும் ஒருங்கே குறிக்கக்கூடும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.