தும்பிசேர் கீரனார்

தும்பிசேர் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 7 பாடல்கள் உள்ளன. அவை குறுந்தொகை 61, 315, 316, 320, 392, நற்றிணை 277, புறநானூறு 249. [1]

புலவர் பெயர்

தும்பி

இந்தப் புலவர் கீரனார் தம் பாடல் ஒன்றில் (குறுந்தொகை 392) 'மணிச்சிறைத் தும்பி' பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பாடலில் (நற்றிணை 277) தும்பி தனக்குத் தூது சொல்லவில்லை என்று தலைவி தும்பியைத் திட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கீரனார் என்னும் பெயர் கொண்ட புலவர் பலருள் இவரை வேறுபடுத்திக் காட்ட எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்த பெருமக்கள் இவருக்குத் 'தும்பிசேர்' என்னும் அடைமொழியைச் சேர்த்துப் பெயரிட்டுள்ளனர்.

குறுந்தொகை 61 சொல்லும் செய்தி

  • திணை - மருதம்

தச்சன் சிறுவர்கள் விளையாட வண்டி செய்து தருவான். சிறுவர்கள் அதில் ஏறிச் சென்று இன்பம் காண்பதில்லை. இழுத்துச் சென்று இன்பம் காண்பர்.

தலைவன் பரத்தையோடு வாழ்கிறான். அக்காலத்தில் தலைவனைத் தழுவித் தலைவி இன்புறுவதில்லை. என்றாலும் தன் தலைவன் இருக்கிறான் என்று எண்ணி எண்ணி இன்பம் துய்க்கிறாளாம். அதனால் அவள் கையிலுள்ள வளையல்கள் கழலவில்லையாம். அவளது கையில் செறிந்துள்ளனவாம்.

நயமான உவமை

குறுந்தொகை 315 சொல்லும் செய்தி

  • திணை - குறிஞ்சி

தலைவன் கடலில் தோன்றும் நிலா வெளிச்சம் போல் அருவி ஒழுகும் மலைநாட்டுப் பெருமகனாம். அவன் ஞாயிறு போன்றவனாம். அவனுக்குத் தலைவியின் தோள் வெயிலில் கிடக்கும் நெருஞ்சி முள் போல் ஆயிற்றாம். - திருமண நாள் தள்ளிப் போனபோது தலைவி இவ்வாறு சொல்கிறாள்.

குறுந்தொகை 316 சொல்லும் செய்தி

  • திணை - நெய்தல்

தலைவிக்குத் தலைவனோடு உள்ள உறவு அன்னைக்குத் தெரியவந்தால் தான் உயிர் வாழ இயலாது என்று தலைவி சொல்கிறாள்.

ஓரை விளையாட்டு

மகளிர் தம் தோழிமாரோடு ஓரை விளையாடுவர். அப்போது ஓராங்கு காட்டி நண்டோடும் விளையாடுவர்.

குறுந்தொகை 320 சொல்லும் செய்தி

  • திணை - நெய்தல்

பரதவர் இறால் மீனைப் பிடித்துவந்து மணல் பரப்பில் காயவைப்பர், அது மணலெல்லாம் நாறும். அதுபோல நெய்தல் நிலத் தலைவனோடு நெய்தல் நிலத் தலைக்கு உள்ள உறவு சேரியெல்லாம் நாறுகிறதாம். இறால் நாற்றத்தைப் பலரும் விரும்புவது போல ஊரார் அலர் தூற்றுவதைத் தலைவி எண்ணி எண்ணி மகிழ்கிறாளாம்.

குறுந்தொகை 392 சொல்லும் செய்தி

  • திணை - குறிஞ்சி

தும்பி நன்மொழி

பெருமழை பொழிந்த மறுநாள் தட்டான் என்னும் தும்பிப் பறவைகள் பெருமளவில் தோன்றிப் பறக்கும். அப்போது அவை தமக்குள் பேசிக்கொள்ளும். அவ்வாறு அவை பேசிக்கொள்ளும் நன்மொழிக்கு யாரும் அச்சம் கொள்வதில்லை.

(அது போலத் தலைவன் தலைவி உறவைப் பற்றிப் பிறர் பேசிக்கொள்வது பற்றித் தலைவன்-தலைவி கவலைப்படுவதில்லை.

குறிஞ்சி நிலத் தங்கை

கடவை என்னும் கடமாப் பாலோடு சேர்த்துத் தினை மாவின் துகளை விருந்தாகப் படைப்பது குறிஞ்சி நில மகளிரின் வழக்கம்.

  • கடவை = கடமா, காட்டாடு

நற்றிணை 277 சொல்லும் செய்தி

  • திணை - பாலை

தும்பியே! நீ கொடியை. வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவில் தேன் உண்கிறாய். அந்தப் பீர்க்கம் பூவைப் போலவே என் மேனியில் அவர் பிரிவால் பூத்துக் கிடக்கும் பசலைப் பூவில் உட்காரவும் மறுக்கிறாய். அதனால் நீ அறன் இல்லோய். அன்றியும் என்னைப் பிரிந்திருக்கும் அவரிடம் சென்று என் நிலைமை பற்றி எடுத்துச் சொல்லாமலும் இருக்கிறாய். இது அறம் அன்று - என்கிறாள் தலைவி.

புறநானூறு 249 சொல்லும் செய்தி

  • துறை - தாபத நிலை

கணவனை இழந்த பெண் வருந்தும் கைம்மைக் கோலத்தைக் கூறுவது தாபத நிலை.

மீனவர் வாழ்க்கை

  • ஆரல் - கதிர் போன்ற மூக்கினைக் கொண்டது. சேற்றுக்குக் கீழ்ப் பதுங்கி வாழும்.
  • வாளை - பருத்த கொம்பு போல் இருக்கும். நீரின் மேல் பரப்பில் மேயும்.
  • ஆமை - தடாரிப் பறை போல் மிதந்து மேயும்.
  • வரால் - பனங்குருத்து போல் இருக்கும்.

கணவனோடு வாழ்ந்தபோது அவள் இவற்றின் கறியோடு புகா என்னும் அரிசியால் சமைத்த வெண்பொங்கலையும் சேர்த்து விருந்தூட்டிக்கொண்டு வாழ்ந்துவந்தாள்.

தாபத வாழ்க்கை

கணவன் உயர்நிலை உலகம் எய்தினான். மனைவி முறம் அளவுப் பரப்புள்ள நிலத்தை மெழுகினாள். அழும் கண்ணீரால் அதனை மெழுகினாள். (அந்த தரையில்தான் தான் உண்ணும் உணவைப் போட்டுத் தன் கணவனுக்குப் படைத்துவிட்டு அவள் உண்பாள்.)

மேற்கோள்கள்=

  1. [http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-lite-html-tumpicer-280876 தும்பிசேர் கீரனார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.