துப்ரி
துப்ரி என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மபுத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு பழைய நகரம். 1883 ஆம் ஆண்டில் இந்த நகரம் முதன்முதலில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் நகராட்சி வாரியமாக அமைக்கப்பட்டது. இது அசாம் மாநில தலைநகரான திஸ்பூரில் இருந்து மேற்கே 277.4 கிலோமீற்றர் (172 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
துப்ரி சணலுக்கான முக்கிய வணிக மையமாகவும் பரபரப்பான நதி துறைமுகமாகவும் இருந்தது. துப்ரி பிரம்மபுத்ரா மற்றும் கடதர் நதிகளால் மூன்று பக்கங்களிலும் சூழப்பட்டிருப்பதால் "நதிகளின் நிலம்" என்று அழைக்கப்படுகிறது.[1]
புவியியல்
துப்ரி 89.5 பாகை கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 26.1 பாகை வடக்கு அட்சரேகையில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீற்றர் (110 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. துப்ரி மூன்று பக்கங்களிலும் ஆறுகளால் சூழப்பட்டிருக்கின்றது. இந்த நிலப்பரப்பில் பிரம்மபுத்ரா நதி ஆதிக்கம் செலுத்துகின்றது.
காலநிலை
கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. அசாம், திரிபுராவைப் போன்று துப்ரியும் பருவமழையின் தாக்கத்தை கொண்டுள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் முற்பகல் வேளை குளிராகவும், பிற்பகல் வேளை சூடாகவும் இருக்கும். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வெப்பமாகவும் இருக்கும். மே முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை பருவமழையின் காலமாகும்.
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி துப்ரி நகரில் 63,388 மக்கள் வசிக்கின்றனர்.[2] ஆண்கள் மக்கட் தொகையில் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் இருந்தனர். துப்ரி மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 79% வீதமும், பெண்களின் கல்வியறிவு 68% வீதமும் உள்ளது. துப்ரியின் சனத் தொகையில் 11% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். இதன் சனத்தொகையில் 75% வீதமானோர் முஸ்லிம்கள் ஆவார்கள். இது இந்தியாவின் சிறுபான்மை செறிவுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.
இவர்களில் பெரும்பாலோர் தேசி (இந்து மற்றும் முஸ்லீம் கோல்பாரியா மக்களை உள்ளடக்கிய கோல்பாரியா அசாமி மக்கள்) ஆவார்கள். துப்ரி நகரில் வங்காள மக்கட் தொகையில் 50% உள்ளனர். இது கோச் இராச்சியத்தின் பகுதியாகும் . அசாமி , கோல்பாரியா மற்றும் பெங்காலி ஆகியவை நகரத்தில் பேசப்படும் முக்கிய மொழிகளாக திகழ்கின்றன.
தாவரங்களும், விலங்குகளும்
1994 ஆம் ஆண்டு சூலை 14 அன்று அசாம் துப்ரி மாவட்டத்தின் ஒரு கன்னி வனப்பகுதி வனவிலங்கு சரணாலயமாக அசாம் அரசின் வர்த்தமானி அறிவிப்பால் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்திற்கு " சக்ரஷிலா வனவிலங்கு சரணாலயம் " என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 11,260.00 ஏக்கர் (45.5676 கிமீ 2 ) பரப்பளவைக் கொண்ட வடகிழக்கு இந்தியாவின் இளைய சரணாலயம் இதுவாகும். அசாம் மற்றும் பூட்டான் எல்லையைத் தவிர வேறு எங்கும் காணப்படாத தங்க லங்கூர் ( பிரஸ்பைடிஸ்கீ) இருப்பதால் சக்ராசிலா தனித்துவமானது. தவிர சக்ராசிலா வனவிலங்கு சரணாலயத்தில் மரங்கள், புதர்கள், மருத்துவ தாவரங்கள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் அழகிய பறவைகள் மற்றும் பூச்சிகளின் அரிய மாதிரிகள் உள்ளன.
சக்ராசிலா வனவிலங்கு சரணாலயத்தின் புவியியல் இடம் அட்சரேகை 26 ° 15 'முதல் 26 ° 26' N மற்றும் தீர்க்கரேகை 90 ° 15 'முதல் 90 ° 20' E. வரை உள்ளது. இது அசாமின் மேற்குப் பகுதியான துப்ரி மாவட்டத்தில் உள்ளது. இது மாவட்ட தலைமையகமான துப்ரியிலிருந்து 68 கி.மீ தொலைவிலும் குவஹாத்தி நகரத்தின் போர்ஜர் விமான நிலையத்திலிருந்து 219 கி.மீ தொலைவிலும் உள்ளது.
சக்ராசிலா வனவிலங்கு சரணாலயத்தின் காலநிலை நிலைமைகள் வறண்ட குளிர்காலம் மற்றும் வெப்பமான கோடைகாலத்துடன் மிதமான மண்டலத்தைப் போன்றது. ஆண்டு மழைவீழ்ச்சி 200 முதல் 400 செ.மீ வரை இருக்கும். வனப்பகுதி மலைப்பாங்கானது. ஆண்டு முழுவதும் வெப்பநிலை பொதுவாக 8 °C முதல் 30. C வரை மாறுபடும்.